
* எனக்கு ஐஸ்க்ரீம் மிகவும் பிடிக்கும், ஆனால் அதை சாப்பிட்ட உடன் தலைவலி, மூக்கு ஒழுகல், தும்மல், தொண்டை வலி இருமல் வந்துவிடுகின்றன. ஏன்?
கே.சந்தோஷ், மதுரை
உடலின் நுட்பமான உறுப்புகளில், தொண்டையும் ஒன்று. செவிக்குழாய்த் துளைகள் இரண்டு, நாசித் துளைகள் இரண்டு, உணவுக் குழல் துளை ஒன்று, காற்றுக் குழல் துளை ஒன்று, வாய்குழித் துளை ஒன்று என, ஏழு துளைகள் மொத்தமாக அங்கே கூடுகின்றன.
ஐஸ்கீரிம் சாப்பிடும் போது இவை பாதிக்கப்படுகின்றன. தொண்டை நரம்புகளில் உள்ள, 'கிளாசோ பர்யான்ஜில்' நரம்பு என்கிற நுட்பமான பகுதி, ஐஸ்கீரிம் சாப்பிடும் போது பாதிப்புக்குள்ளாகி உடல்நலம் பாதிக்கப்படுகிறது. ஐஸ்கீரிம் சாப்பிடுவதை குறைத்துக் கொண்டால் இந்த பிரச்னை தீரும்.
ஆர். விஜய பாஸ்கர், பொதுநல மருத்துவர், சென்னை.
* தானமாக பெறப்பட்ட ரத்தத்தை, எவ்வளவு நாட்கள் பாதுகாத்து பயன்படுத்தலாம்?
எஸ்.ரவி, குடியாத்தம்
ரத்ததானம் செய்யும் ரத்தத்தை, ஆறு வாரங்கள் வரை சேமித்து பயன்படுத்தலாம்.
செல்வராஜ், ஓய்வு பெற்ற தலைமை அதிகாரி, அரசு ரத்த வங்கி.
* எனக்கு வயது 32. முதல் பிரசவம் குறைபிரசவம். தைராய்டு பிரச்னையும் உள்ளது. அடுத்த குழந்தையும் குறைபிரசவத்தில் தான் பிறக்குமா?
என். திவ்யா, திருச்சி.
பெரும்பாலும் தைராய்டு இருந்தால் குறைபிரசவம் ஏற்படும். மேலும் உங்களுக்கு, 'ஹைப்போ தைராய்டா, ஹைப்பர் தைராய்டா' என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. மேலும் முதல் பிரசவம் குறைபிரசவமாக இருந்தால், அடுத்த பிரசவமும் குறைபிரசவமாக ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மேலும், 30 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு, பல பிரச்னைகள் ஏற்படும்.
ஆ.சாந்தி, மகப்பேறு மருத்துவர், சென்னை.
* கோவில்களில் தீ மிதிப்போரின் பாதங்களில், தீக்காயம் தோன்றுவதில்லையே; ஏன்?
பா.பாலசுந்தரி, சென்னை.
தீ மிதிப்போர், கால்களில் நீரை ஊற்றிக் கொண்ட பின்பே, தீ மிதிக்க இறங்குகின்றனர். அப்போது பாதங்களிலுள்ள நீர் மற்றும் வியர்வை, தீயின் வெப்பத்தினால் நீராவியாகி விடுகிறது. அவ்வாறு உருவான நீராவி படலத்தின் மீதே அவர்கள் நடக்கின்றனர். இது கண நேர நிகழ்வு.
பாதங்களைச் சுற்றி பரவியுள்ள நீராவி படலம், குறைந்த வெப்பநிலையில் இருப்பதோடு, குறைந்த வெப்பக் கடத்தியாகவும் செயல்பட்டு, நெருப்பின் வெப்பம் பாதங்களைத் தாக்காதவாறு செயல்படுகிறது.
வி.சக்கரவர்த்தி, பொதுநல மருத்துவர். சென்னை.

