PUBLISHED ON : டிச 23, 2015

1. கர்ப்பம் உறுதியானவுடன் என்ன செய்ய வேண்டும்?
கடைசி மாதவிடாய் தேதி மற்றும் மாதத்தை நினைவில் வைத்துக் கொண்டு மகப்பேறு மருத்துவரிடம் சொல்ல வேண்டும். அவர் பிரசவ தேதியை கணித்து சொல்வார். பிரசவ நாட்கள், சினிமாவில் காண்பிப்பது போல, 10 மாதங்கள் அல்ல. 280 நாட்கள் மட்டுமே. அதாவது, 40 வாரங்கள்.
2. மாதவிடாய் சீராக இல்லாதோருக்கு எப்படி கணக்கிட முடியும்?
ஸ்கேன் பரிசோதனை செய்து, கரு வளர்ச்சியை கணித்து அதன் மூலம் பிரசவ தேதியை குறிப்பர்.
3. கர்ப்ப காலம் மூன்று கட்டங்களாக பிரிக்கப்படுவது எப்படி?
முதல் மூன்று மாதங்களை, பூஜ்ஜியம் முதல், 13 வாரங்கள் என்றும், இரண்டாம் காலகட்டத்தை, 14 முதல் 27 வாரங்கள், இறுதி காலகட்டத்தை, 28 வாரங்கள் முதல் 40 வாரங்களாக மருத்துவர்கள் வரையறுப்பர்.
4. முதல் மூன்று மாதங்களில் மனம் மற்றும் உடலில் நேரிடும் மாற்றங்கள் என்ன?
வாந்தி, தலைசுற்றல், தலைவலி, மயக்கம், சோர்வு, பசியின்மை, அல்லது அதிக பசி, அதீத தூக்கம், மாதவிடாய் வருவது போன்ற உணர்வு, காய்ச்சல் உள்ளது போன்று உடல் சூடு ஆகியவை இருக்கும். ஆனால் அந்த சூடு காய்ச்சலுக்கானதாக இருக்காது. அடிக்கடி சிறுநீர் வருவது, மார்பக வலி போன்ற மாற்றங்களும் இருக்கும். மனமாற்றங்களாக மகிழ்ச்சி மற்றும் கோபம், சோகமும் இருக்கும்.
5. இந்த மாற்றங்களுக்கு என்ன காரணம்?
கருத்தரித்தவுடன், நஞ்சு பகுதியிலிருந்து சுரக்கும் எச்.சி.ஜி., அதாவது, 'ஹியூமன் கொரியானிக் கோனடோ டிராபின்' என்ற ஹார்மோன் சுரப்பதனால் இந்த மனநிலை, மற்றும் உடல்நிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதோடு கரு வளர வளர, நஞ்சுப் பகுதியிலிருந்து ஈஸ்ட்ரோஜன், புரோஜஸ்ட்ரோன் என்ற ஹார்மோன்களின் சுரப்பு அதிகமாகும்.
6. கர்ப்பிணிகள் எந்த வகையான உணவு உண்ண வேண்டும்?
தாய் மற்றும் குழந்தைக்கு என, உண்ணத் தேவையில்லை. 300 கலோரி அதிகம் எடுத்தால் போதும். ஆனால் அதில் எல்லா ஊட்டச்சத்தும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லா விதமான காய்கள் மற்றும் பழங்களையும் எடுத்துக் கொள்ளலாம். புரதச் சத்துதான் கரு வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறுகிறது.
7. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணங்கள், வேலைகள் செய்யக்கூடாதா?
உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள். எத்தனை முறை வேண்டுமானாலும் படியேறலாம்; இறங்கலாம். எல்லா வகையான வாகனங்களிலும் பயணங்கள் மேற்கொள்ளலாம். கரு, கர்ப்பப் பைக்குள் பாதுகாப்பாக இருக்கும். கவலை கொள்ள வேண்டாம்.
8. கர்ப்பகாலத்தின் போது முதல் மூன்று மாதங்களில் தாம்பத்ய உறவு கொள்ளலாமா?
கர்ப்பத்தின் முதல் கால கட்டத்தில், தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ள மருத்துவ ரீதியாக எந்த தடையும் இல்லை. ஆனால் கர்ப்பிணிக்கு அசவுகரியமாக தோன்றினால் தவிர்க்கலாம்.
9. போலிக் ஆசிட் மாத்திரைகளை, முதல் மூன்று மாதங்களுக்கு பரிந்துரைப்பது ஏன்?
அந்த மாத்திரைகள், மைய நரம்பு மண்டல பகுதியான தண்டுவடம் பாதிப்பு மற்றும் இதய பாதிப்புகளை தடுக்கும்.
10. முதல் மூன்று மாதங்களில், என்னென்ன பரிசோதனைகள் அவசியம்?
ரத்த பிரிவு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு, சில பாலியல் நோய்களுக்கான பரிசோதனை. அதாவது, வி.டி.ஆர்.எல்., அல்லது ஆர்.பி.ஆர்., ஹெபடைடிஸ் பி, எச்.ஐ.வி., தைராய்டு பாஸ்டிங் சுகர், போன்றவை கட்டாயம் செய்ய வேண்டும். 12, 13 வாரங்களில் ஸ்கேன் மற்றும் ரத்த பரிசோதனை செய்து குழந்தைக்கு 'டவுண் சிண்ட்ரோம்' இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
- எஸ்.ராஜஸ்ரீ,
மகளிர் மற்றும் மகப்பேறு நிபுணர், சென்னை.
74027 23416

