PUBLISHED ON : ஏப் 27, 2016
என் மனைவி, நான்கு மாத கர்ப்பிணி. வழக்கமான பரிசோதனைக்கு சென்ற போது அவருக்கு, காசநோய் தொற்று இருப்பது உறுதியானது. மகப்பேறு மருத்துவர், பச்சிளங் குழந்தை சிறப்பு மருத்துவரை ஆலோசித்தோம். ஒரு மருத்துவர், AKT3 மாத்திரைகளை சாப்பிடும்படி பரிந்துரைத்தார். என் மனைவிக்கும், கர்ப்பத்தில் வளரும் குழந்தைக்கும், பாதுகாப்பான மருத்துவ சிகிச்சை என்ன? இந்த மாத்திரையை சாப்பிடுவதால் குழந்தைக்கு பாதிப்பு இருக்குமா? எது சரியான சிகிச்சை முறை என்பது பற்றிய வழிகாட்டுதல் தேவை; உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
ரவி, கோயம்புத்தூர்
கர்ப்பிணி பெண்களுக்கு தரப்படும் முதற்கட்ட காசநோய் சிகிச்சைக்கான மருந்துகள், மிகவும் பாதுகாப்பானவை. இந்த மருந்தில் முன்னேற்றம் இல்லாத நிலையில் தரப்படும், 'ஸ்ட்ரெப்டோமைசின்' ஊசியைத் தவிர, மற்ற மருந்துகள் அனைத்தும்
பாதுகாப்பானவையே. ரவி, உங்கள் விஷயத்தை பொறுத்தவரை, உங்கள் மனைவி காசநோய்க்காக சாப்பிடும் மருந்துகள், 100 சதவீதம் கர்ப்பத்தில் உள்ள குழந்தையை பாதிக்காது; பாதித்து விடுமோ என்று நீங்கள், குறிப்பாக உங்கள் மனைவி பயந்து கொண்டே இருப்பது,
ஆபத்தானது. அந்த எதிர்மறை உணர்வுகள், குழந்தையை நிச்சயம் பாதிக்கும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம், காசநோய் சிகிச்சையை பொறுத்தவரை, தனியார் மருத்துவமனையை விட அரசு மருத்துவமனைகளே சிறந்த இடம். காரணம், இங்கு தரமான சிகிச்சையும், மருந்துகளும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
டாக்டர் வி.பி.துரை,
காசநோய் தடுப்பு துணை இயக்குனர், கன்னியாகுமரி மாவட்டம்.
என் வயது, 47; எடை, 90 கிலோ; உயரம், 172 செ.மீ., சமீபத்தில் என்னுடைய ரத்த குளுக்கோசை பரிசோதனை செய்ததில் முடிவுகள், fbg 135 ppfg 215 hba1c 6.5 என்ற ரீதியில் உள்ளது. நான் தினமும் குறைந்தது, 45 நிமிடங்கள் நடைபயணம் செய்கிறேன். என்னுடைய டாக்டர் கிளைக்கோமேட், 125 மி.கி., மாத்திரையை, 15 நாட்களுக்கு சாப்பிடச் சொன்னார். இந்த மாத்திரையை சாப்பிட்டால் என்னுடைய சர்க்கரை அளவு கூடுமா, குறையுமா? இந்த மாத்திரையை இவ்வளவு தான் பயன்படுத்த வேண்டும் என்ற வரையறை ஏதும் உள்ளதா? எனக்கு ரத்த அழுத்தமும் கொழுப்பும் உள்ளது. எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்.
வெங்கட் சுப்ரமணியம், சென்னை.
உங்கள் டாக்டர் எடுத்துக் கொள்ள சொன்ன மாத்திரையை, 15 நாட்களுக்கு அவசியம் சாப்பிடுங்கள். இந்த மாத்திரை பாதுகாப்பானது என்பதோடு, உங்களின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும். 15 நாட்களுக்குப் பின் வெறும் வயிற்றிலும், சாப்பிட்ட, இரண்டு மணிநேரம் கழித்தும் ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து, உங்கள் டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள். உங்களுக்கு உடல் பருமன் உள்ளது. உங்கள் உயரத்திற்கு சரியான உடல் எடை என்பது, 65 முதல் 75 கிலோ தான் இருக்க வேண்டும். உங்கள் டாக்டர் பரிந்துரைத்த கிளைக்கோமேட் மாத்திரை, உடல் எடையை குறைக்கவும் உதவும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை HbA1c பரிசோதனை செய்து அளவு 7க்கு குறைவாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். ரத்த அழுத்தத்தையும், கொழுப்பையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கத் தேவையான மருந்துகளை, மருத்துவர் ஆலோசனையின்படி சாப்பிடுங்கள். சர்க்கரையை தவிர்த்து, ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். நடைபயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள். 'டேக் கேர்!'
டாக்டர் கே.பரணீதரன், சுக்ரா நீரிழிவு மையம், சென்னை
