தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்


PUBLISHED ON : அக் 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

என்னுடைய இரு கண்களின் ஓரத்திலும் வெள்ளையாக (கருவிழியில் இல்லை) உள்ளது. பச்சை நிறப் பாசி படர்வது போல இருக்கிறது. கண் டாக்டரிடம் காட்டியதில், கண்களில் புரை ஏதுமில்லை; கண்கள் நன்றாக உள்ளன என்று சொல்கிறார். இந்த வெள்ளை படர்வை பற்றிக் கேட்டதற்கு, 'அது ஒன்றும் பிரச்னை இல்லை' என்று சொல்லிவிட்டார். வேறு ஒரு கண் டாக்டரிடம் காட்டிய போது, சொட்டு மருந்து எழுதிக் கொடுத்தார். தொடர்ந்து அதை பயன்படுத்தியும் இந்த வெண்படலம் அப்படியே தான் உள்ளது. இந்த வெண் படலம், கருவிழி வரையிலும் பரவி பார்வை இழப்பை ஏற்படுத்தி விடுமோ என, பயமாக உள்ளது. எனக்கு இந்தப் பிரச்னை குறித்து விளக்குங்கள்.

ஏ.சண்முகம், விளந்தை, திருக்கோவிலுார்.

உங்களுடைய வயது என்ன, என்ன மாதிரியான வேலை செய்கிறீர்கள் என்பது தெரியவில்லை. கண்களில் கருவிழி அல்லாத இடத்தில் இதுபோன்ற வெண்மையாக, பாசி படர்வது போல இருப்பதற்கு, இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, 'டெரிஜியம்' (pterygyim). அதாவது, வெயிலில் அதிகமாக அலைபவர்களுக்கு, புற ஊதாக் கதிர்களின் பாதிப்பு நேரடியாக கண்களில் படுவதால் இப்பிரச்னை வருகிறது. கண்கள் அடிக்கடி வறட்சியாக இருந்தாலும், 'டெரிஜியம்' வரலாம். அதிகமாக துாசியில் இருப்பவர்களுக்கும் இதுபோன்று வரும் வாய்ப்பு அதிகம். இது மிக மெதுவாக வளர்ந்து, கருவிழி வரை வந்து நீங்கள் சொல்வது போல பார்வைக் கோளாறை ஏற்படுத்தலாம். இந்தப் பிரச்னை இருந்தால், கண்கள் சிவப்பாக, சமயங்களில் எரிச்சல், அரிப்பு இருக்கும். தவிர, கண்களுக்குள் ஏதோ ஒன்று இருப்பதைப் போன்ற உணர்வும் இருக்கலாம். கருவிழி வரை இந்தப் படலம் பரவுவது என்பது, உடனடியாக நடக்கும் விஷயம் இல்லை; மிக மெதுவாகவே வளரும். இது கருவிழி வரை படர்ந்தால், முதலில் கருவிழி அருகில் வந்தவுடன் பார்வை மங்கலாகத் தெரிய ஆரம்பிக்கும். கண்களில் ஏற்படும் தொற்றால் கருவிழியில் பாதிப்பு ஏற்பட்டால், கருவிழியில் ஏற்படும் தழும்பின் பாதிப்பைப் பொறுத்து பார்வை பாதிப்பு

ஏற்படலாம். கருவிழியில் தழும்புகள் இருந்தால் அந்தப் பகுதியில் வழியாக ஒளி ஊடுருவும் திறன் இல்லாமல் போவதால் பார்வைத் திறன் இல்லாமல் போகிறது. நீங்கள் கண்ணாடியைப் பார்க்கும் சமயங்களில் தொடர்ந்து இந்த வெண்படலம் அதிகமாகிறதா என்பதை கவனித்து, ஒருவேளை அதிகமானால் உடனடியாக கண் மருத்துவரை அணுகுங்கள். ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் இதை சரி செய்து விடலாம்; பயப்பட வேண்டாம். அதனால் தான், அதிகமாக வெயிலில் சுற்றுபவர்கள், கண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். நல்ல தரமான கண்ணாடிகளை அணிந்து கொள்ளலாம். சுத்தமான நீரில் அடிக்கடி கண்களைக் கழுவலாம். ஆனால், நீங்கள் இரண்டு கண் டாக்டர்களைப் பார்த்தாகக் கூறுகிறீர்கள். இருவருமே பிரச்னை இல்லை என்று சொல்கிறார்கள் என்றால், ஒரு வேளை இது வெறுமனே கொழுப்பு படிமமாக இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்; இது ஒன்றும் பாதிப்பை ஏற்படுத்தாது. 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றால் ஆண்டிற்கு ஒருமுறையும் கண்களில் பிரச்னை இருந்தால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் கண்டிப்பாக கண் பரிசோதனை செய்து கொள்வது பாதுகாப்பானது. பிரச்னை சிறிய அளவில் இருக்கும்போதே சரி செய்வதற்கு இது உதவும்.

டாக்டர் திரிவேணி வெங்கடேஷ்

கண் சிறப்பு மருத்துவர், அகர்வால் கண் மருத்துவமனை, சென்னை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us