தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கோபத்தை குறைத்தால் ரத்த அழுத்தம் சரியாகும்!

கோபத்தை குறைத்தால் ரத்த அழுத்தம் சரியாகும்!

கோபத்தை குறைத்தால் ரத்த அழுத்தம் சரியாகும்!


PUBLISHED ON : டிச 11, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 11, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோபம் வர காரணங்கள்?

இது மாதிரி தான் இருக்க வேண்டும், இப்படி தான் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, நம்மை சுற்றி இருக்கும் சூழ்நிலையில், அதற்கு மாறாக நடந்தால், கோபம் வருகிறது.

கோபம் நீடித்து இருப்பது எதனால்?

எதிர்பார்ப்புகள் மாறாமல் அப்படியே நீடித்து இருக்கும் போது, கோபமும் மாறாமல் அப்படியே இருக்கும். தேர்வில் தோற்றால், 'தோல்விக்கு காரணம் நான் இல்லை; ஆசிரியர் சொன்னது புரியவில்லை; கேள்விகள் கடினமாக இருந்தன' என, தோல்விக்கு, வெளியில் இருந்து காரணங்களைத் தேடி, பொறுப்பை தான் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் வரை, கோபம் அப்படியே இருக்கும். நம் தோல்விக்கான பொறுப்பை, எப்போது நாம் ஏற்றுக் கொள்கிறோமோ, அப்போது கோபம் மறைந்து போகும்.

கோபத்தின் போது என்ன நடக்கிறது?

மூளையில், 'அமிக்டலா' என்ற பகுதி உள்ளது. கோபம், சோகம், பயம் போன்ற எல்லா உணர்வுகளுக்கும் இந்த பகுதி தான் காரணம்.உணர்ச்சிவசப்படுவது திட்டமிட்டு நடக்கும் செயல் கிடையாது. நகைச்சுவையை கேட்டால், உடனடியாக சிரிப்பதும், சோகமான சம்பவம் நடந்தால், உடனே அழுவது இயல்பு. 'இந்த நேரத்தில் அழலாம்' என, யாரும் அழுவது இல்லை. எந்த ஒரு உணர்வும், சுற்றுச் சூழலில் இருந்து வரும் துாண்டுதல்களால், நாம் யோசிப்பதற்கு முன் வந்து விடும். அதன் பிறகே, நாம் அழுகிறோம், சிரிக்கிறோம் என்ற சிந்தனை வரும்; கோபமும் அது போல தான்.கோபத்தின் விளைவுகள்?துாக்கமின்மை, தலைவலி, மனப்பதற்றம், உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல் பிரச்னைகள் வரும். உயர் ரத்த அழுத்தம் இருப்பதால் தான் கோபம் வருகிறது என்று நினைக்கிறோம். ஆனால், கோபப்படுவதால் தான், ரத்த அழுத்தம் அதிகமாகிறது. ரத்த அழுத்தம் இல்லாமல் இருந்தால், கோபம் குறைந்ததும், ரத்த அழுத்தமும் சரியாகி விடும். கொலை, வன்முறை போன்ற சமூக குற்றங்கள், விவாகரத்து, உறவு முறிவு போன்ற உறவுகளில் சிக்கல்களுக்கும், கோபமே முதற்காரணம்.

குழந்தைகளின் மனநிலையை கோபம் எந்த அளவு பாதிக்கிறது?

பொதுவாகவே கோபம் வந்தால், பல நேரங்களில் குழந்தைகள் தான் அதற்கு வடிகால் ஆகின்றனர்.சம்பந்தமே இல்லாமல் குழந்தைகளை அடித்து விடுகிறோம். குழந்தைகளுக்கு ரோல் மாடலாக வேண்டிய பெற்றோர், ஒரு பிரச்னை வந்தால், இதை எப்படி தீர்ப்பது என்று பேசாமல், எதற்கெடுத்தாலும் கோபத்தில் சண்டை போட்டுக் கொள்கின்றனர். இதைப் பார்த்து வளரும் குழந்தை, பிரச்னை வந்தால் கோபப்பட்டு சண்டை போட வேண்டும் என, தவறாக புரிந்து கொள்ளும்.'என்னுடைய பொம்மையை துாக்கிக் போய்விட்டார்கள்; பென்சிலை காணும்' என, சிறிய விஷயங்களுக்கு கூட, கோபத்தையே வெளிக்காட்டுவர்.

கோபத்தால் வரும் பிரச்னைகள் ?

கோபத்தை இரண்டு விதமாக வெளிப்படுத்துவோர் உள்ளனர். முதலாவது வகையினர், கோபத்தில் வெடித்து விடுவர். இதன் விளைவுகள், கோபம் வந்ததும், மற்றவர்களை அசிங்கமாக திட்டுவது, கேவலமாகப் பேசுவது, அடிப்பது, கையில் கிடைத்ததைப் போட்டு உடைப்பது, தன்னைத் தானே அடித்துக் கொள்வது, சுவரில் முட்டிக் கொள்வது, தனக்கு தானே வலியை ஏற்படுத்துவது என்று இருக்கும்.இன்னொரு தரப்பினர், கோபத்தை வெளிக்காட்டாமல் அடக்கி உள்ளே வைத்திருப்பர். இப்படி செய்வதால், நாளடைவில் மனச் சோர்வு, மன அழுத்தமாக மாறும். கோபத்தை வெளிக்காட்ட முடியாத சூழலில், யார் தன் மீது, திருப்பி கோபப்பட மாட்டார்களோ, அவர்களிடம் காட்டுவர்.

உயரதிகாரியிடம் காட்ட முடியாத கோபத்தை, மனைவியிடம் காட்ட, மனைவி கணவனிடம் திரும்பி காட்ட முடியாமல், குழந்தைகளிடம் காட்ட, குழந்தைகள், செல்லப் பிராணிகளிடம் என, முடிவே இல்லாமல் கோபம் அடுத்தடுத்த நிலையில் இருப்பவர்களிடம் போகும்.எப்படி கட்டுப்படுத்துவது?

கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாது. காரணம், நெருப்பு சுட்டவுடன் எப்படி கையை சட்டென்று எடுக்கிறோமோ, அதேபோல், உடனடியாக வரும் அனிச்சை செயல் இது. முடியாத விஷயத்தை முயற்சி செய்வது வீண். கோபம் உண்டாக்கிய சூழ்நிலையில் இருந்து வெளியில் வர வேண்டியது தான், முதலில் செய்ய வேண்டியது.கோபம் குறையும் வரை எதை பற்றியும் யோசிக்காமல் இருக்க வேண்டியது முக்கியம். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, இசை கேட்பது போன்ற வற்றைச் செய்தால், கோபம் தணிந்து விடும். கோப உணர்ச்சி குறைந்தால் தான், நியாயமாக சிந்திக்க முடியும். நம்முடைய நோக்கம் பிரச்னைகளை சரி செய்வதில் இருக்க வேண்டுமே தவிர, 'யார் சரி... யார் தவறு' என, விவாதிப்பதில் இருக்கக் கூடாது.

வன்முறை உணர்வுகள் வருவோர் செய்ய வேண்டியவை?

ஒவ்வொரு முறை கோபம் வரும் போதும், ஏன் வந்தது, ஏன் இப்படி நடந்து கொண்டேன், கோபம் எந்த அளவு இருந்தது, கோபத்தில் நான் என்ன செய்தேன், கோபம் வந்தபோது, வேறு எப்படி நடந்திருக்கலாம், இந்த சூழ்நிலையை எப்படி கையாளலாம் என, தனித்தனியாக எழுத வேண்டும். ஒவ்வொரு முறை இப்படி எழுதும் போதும், அடுத்தடுத்த முறைகளில், நம்மையும் அறியாமல், கோபம் வந்த சில நிமிடங்களில், ஏன் என, சிந்திக்க துவங்குவோம்.

டாக்டர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்

மனநல மருத்துவர்,

சென்னை

80561 56007


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us