PUBLISHED ON : டிச 10, 2019

மூளையில் சத்தத்தை துாண்ட, 'ஹியரிங் நியூக்ளியஸ்' என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில், நரம்புகளே இல்லாமல் பிறக்கும் குழந்தைகளுக்கு, கேட்கும் திறனை
துாண்டுவதற்காக செய்யப்படும் அறுவை சிகிச்சை இது.செவித்திறன் இல்லாத குழந்தைகளுக்கு, 'காக்ளியார் இம்ப்பிளான்ட்' அறுவை சிகிச்சை செய்வது அனைவருக்கும்
தெரிந்திருக்கும். இதற்கு, உள் காதில், காக்ளியார் பகுதியில் நரம்புகள் இருக்க வேண்டும். இந்த நரம்புகள், முழுமையாக வளர்ச்சியடையாமல் இருந்தால், கேட்கும் திறன்
இருக்காது. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு, இந்த அறுவை சிகிச்சை மூலம் கேட்கும் திறன் கிடைக்கச் செய்ய முடியும். ஆனால், ஏ.பி.ஐ., எனும், 'ஆடிட்டரி பிரைன் ஸ்டெம்
இம்பிளான்ட்' அறுவை சிகிச்சைக்கு, காக்ளியாரும் தேவை இல்லை. நரம்புகளும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
நரம்புகள் இல்லை என்பதை பிறந்தவுடன் கண்டுபிடிக்க முடியுமா?
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், தற்போது இதற்கான நவீன வசதி உள்ளது. குழந்தை பிறந்தவுடன், நவீன கருவியின் உதவியுடன் கேட்கும் திறனைத்
துாண்டும் நரம்புகள் உருவாகி உள்ளதா என்பதை கண்டுபிடித்து விடுவர்.இது மிகவும் எளிமையான பரிசோதனை. கருவியை காதின் அருகில் வைத்தாலே, கருவியில்
இருந்து சத்தம் மூளைக்கு செல்கிறதா, மூளையில் இருந்து, அதற்கான, 'சிக்னல்' கிடைக்கிறதா என்பது தெரியும்.
ஏ.பி.ஐ., அறுவை சிகிச்சை எவ்வாறு செய்யப்படுகிறது?
கேட்கும் திறனை தரும், ஹியரிங் நியூக்ளியசில் மென்மையான மின் காந்த அலைகளை உடைய கருவியை பொருத்த வேண்டும். லேப்ராஸ்கோபிக் எனப்படும், நுண்துளை
அறுவை சிகிச்சை இதில் செய்ய முடியாது. திறந்த நிலை அறுவை சிகிச்சை மட்டுமே செய்ய முடியும். இதில், 12 'எலெக்ட்ரோட்ஸ்' எனப்படும் மின் துாண்டிகள் இருக்கும்.
இவற்றை ஒவ்வொன்றாகத் துாண்டி, சத்தம் வரச் செய்வோம்.ஒரே சமயத்தில், நிறைய மின் துாண்டிகளை துாண்டினால், சத்தம் அதிகமாக கேட்கும். கேட்கும் திறனைத்
தரும் நரம்புகளே இல்லாமல் பிறக்கும் குழந்தைக்கு, சத்தம் என்பதே என்னவென்று தெரியாது. குழந்தையால், அதிக சத்தத்தை ஒரே சமயத்தில் எதிர்கொள்ள முடியாது.
சிறிது சிறிதாக சத்தத்தை பழக்கி, பேச்சு பயிற்சி தர வேண்டும்.இந்த சிகிச்சையால், கேட்கும் திறன் 100 சதவீதம் கிடைக்குமா?அப்படி சொல்ல முடியாது. ஆனால், 70 - 80
சதவீதம் கேட்கும் திறன் நிச்சயம் வரும். இந்த அளவு இருந்தாலே, யாரையும் முழுமையாக சார்ந்திருக்காமல், வாழ முடியுமே! கேட்க முடியும்; பேச முடியும். மற்றவர்கள்
பேசுவதை, நன்கு புரிந்து கொள்ள முடியும்.
இந்த நவீன அறுவை சிகிச்சை எங்கெல்லாம் உள்ளது?
கேட்கும் திறன் கொண்ட நரம்புகளே இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கான இந்த அறுவை சிகிச்சை, ஆசியாவிலேயே முதன் முறையாக, சென்னை அடையாறில் உள்ள,
வீ.ஹெச்.எஸ்., எனும் வாலன்டரி ஹெல்த் சர்வீசஸ் மையத்தில் மட்டுமே செய்யப்படுகிறது.இந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு, காது, மூக்கு, தொண்டை - ஈ.என்.டி.,
மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை என, இரு துறை நிபுணர்கள் வேண்டும். டாக்டர் மோகன் காமேஸ்வரனுடன் இணைந்து இதைச் செய்தேன்.
இரு துறை நிபுணர்கள் ஏன் அவசியம்?
வெளிப்புறத்தில் பொருத்த வேண்டிய கருவிகள் அனைத்தையும், ஈ.என்.டி., மருத்துவரும், மூளையின் உள்ளே பொருத்த வேண்டியதை, நரம்பியல் மருத்துவரும் செய்ய
வேண்டும். இதற்கான கருவிகள் ஜெர்மனி, சுவிட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்வதால், பொருத்துவதற்கு, 20 லட்சம் செலவாகும் என்பதால், முதல்வரின் மருத்துவ
காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.
சென்னையில் இந்த அறுவை சிகிச்சை எப்போது துவக்கப்பட்டது?
கடந்த, 2005ல் நான் முதலில் செய்ய ஆரம்பித்தோம். அடுத்த, ஐந்து ஆண்டுகள் இடைவெளியாகி விட்டன. 2010ல் இருந்து தொடர்ந்து செய்கிறோம். கேட்கும் நரம்புகளே
இல்லாமல் பிறக்கும் குழந்தைகளில், 3 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு செய்யப்படும் இது போன்ற சிக்கலான அறுவை சிகிச்சை, உலகத்திலேயே இரண்டு மையங்களில் தான்
நடக்கிறது. ஒன்று பிரேசில் நாட்டில், இன்னொன்று எங்கள் மையம்.
எந்த வயதில் அறுவை சிகிச்சை செய்யலாம்?
பிறந்தவுடன் குறை இருப்பது தெரிந்தாலும், அறுவை சிகிச்சை செய்ய முடியாது. காரணம், மயக்க மருந்து கொடுக்க, குழந்தையின் உடல் எடை, 10 கிலோ இருக்க
வேண்டும். அறுவை சிகிக்சைக்கு, ஆறு முதல் ஏழு மணி நேரம் ஆகும். எனவே, 1 வயதிற்கு பிறகே செய்ய முடியும்.
மூளையில் கருவி பொருத்துவதால் பிரச்னை வராதா?
மூளை முழுமையாக வளர்ச்சி பெற்று விடும். ஆனால், நரம்புகள் இல்லாமல் இருக்கும். கேட்கும் நரம்புகள் இல்லாமல் இருக்கும் மூளை பகுதியை துாண்டுவதற்கே, இந்த
கருவியை பொருத்துகிறோம். இதனால் வாழ்க்கை முழுதும், எந்த பிரச்னையும் வராது. இந்த கருவி பொருத்திய பின், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்கக் கூடாது. அதில் உள்ள
காந்த அலைகள், இந்த கருவியை வெளியில் இழுத்து விடும். சி.டி., ஸ்கேன் போன்ற, வேறு பரிசோதனைகளை செய்து கொள்ளலாம். மற்றபடி, எல்லா குழந்தைகளையும்
போலவே இருக்கலாம். -டாக்டர் எம்.சி.வாசுதேவன் நரம்பியல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்,வி.ஹெச்.எஸ்., சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சென்னை)044 -
2254 2160 / 93810 29485
