தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குழந்தை பாக்கியம் கைக்கூட நம்பிக்கை அவசியம்

குழந்தை பாக்கியம் கைக்கூட நம்பிக்கை அவசியம்

குழந்தை பாக்கியம் கைக்கூட நம்பிக்கை அவசியம்


PUBLISHED ON : டிச 09, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 09, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தையின்மை, செயற்கை கருத்தரித்தல் குறித்து, பல தவறான கருத்துகள் உள்ளன. இவைகளில் இருந்து தெளிவு பெற வேண்டியது அவசியம்.

தவறான கருத்து:கருத்தரிப்பதற்கு ஆணுக்கு வயது முக்கியமில்லை.

உண்மை: பெண்களுக்கு மட்டும் உயிரியல் கடிகாரம் ஓடிக் கொண்டிருப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால், சமீபத்திய ஆய்வுகள், இது தவறான கருத்து என கூறுகின்றன. இயல்பான முறையிலோ, ஐ.வி.எப்., எனும் 'இன்விட்ரோ பெர்டிலிட்டி' எனப்படும், செயற்கை கருத்தரித்தல் முறையில், குழந்தை பெற்றுக் கொள்வது, பெண்ணின் வயதைப் பொறுத்தது மட்டுமல்ல, ஆணின் வயதையும் பொறுத்ததே.

கருத்தரிப்பதற்கு பெண்ணிற்கு ஏற்ற வயது, 25 - 35 வரை. கருவுறும் தன்மை, 30 வயதிற்கு பின், பெண்ணிற்கு குறைய துவங்குகிறது. ஆணுக்கு, 50 வயது வரை உள்ளது. அதன்பின், விந்தணுவின் தரமும் எண்ணிக்கையும் குறைகிறது. விந்தணு பகுப்பாய்வு உட்பட, இதற்கான பரிசோதனைகளில் மட்டுமே, இது தெரியும்.

தவறான கருத்து: செயற்கை கருத்தரிப்பில், 100 சதவீதம் வெற்றி கிடைக்கும். முதலாவது, ஐ.வி.எப்., தோல்வியடைந்தால், அதன்பின் நம்பிக்கை இல்லை.

உண்மை: பெண்கள், 35 வயதிற்கு கீழ் இருந்தால், செயற்கை கருத்தரிப்பில், 50 சதவீதம் வெற்றி வாய்ப்பு உள்ளது. வயது அதிகரிக்கும் போது, வெற்றி வாய்ப்பும் குறையும். கருப்பையின் ஆரோக்கியம், கரு முட்டையின் தரம், விந்தணுக்களின் தரம், ஹார்மோன்களின் தன்மை போன்ற பல காரணிகளைப் பொறுத்தே, ஐ.வி.எப்.,பின் வெற்றி உள்ளது.

ஆனால், முதல் முயற்சி தோல்வியடைந்தால், நம்பிக்கை இழந்து, சிகிச்சை மையம், மருத்துவரை மாற்றுவது நடக்கிறது. இப்படி ஒவ்வொரு மையமாக, வேறு வேறு மருத்துவரிடம் செல்வது நல்லதல்ல. முதலிலேயே, அனைத்து நவீன வசதிகளும் உடைய, தரமான மையத்தை தேர்வு செய்வதும், திறமையான ஒரே மருத்துவரிடம் இரண்டு, மூன்று ஆண்டுகள் சிகிச்சை பெறுவதும், வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும்.

ஒரே டாக்டராக இருந்தால், உடல்நிலை, பிரச்னைகள் உட்பட, அனைத்து மருத்துவரீதியிலான அனைத்து உண்மைகளையும் தெரிந்திருப்பார். டாக்டரை மாற்றிக் கொண்டே இருந்தால், ஒவ்வொரு முறையும் முதலிலிருந்தே, புதிதாக துவங்க வேண்டிய கட்டாயம் இருக்கும்.

தவறான கருத்து: தானமாகப் பெற்றவரின் உயிரணுக்களை மட்டுமே செயற்கை கருத்தரிப்பில் பயன்படுத்துகின்றனர்.

உண்மை: செயற்கை கருத்தரிப்புக்கு, மனைவியின் கருமுட்டை, கணவரின் விந்தணுவை வைத்தே செய்யப்படுகிறது. குறைவான எண்ணிக்கையில் கருமுட்டைகள் இருந்தாலும், தங்களின் சொந்த கருமுட்டைகளை வைத்தே கருத்தரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

முதிர்ச்சியடையாத கருமுட்டை, மாதவிடாய் நின்ற பின் கருத்தரிக்க விரும்புவது, விந்தணுக்களே இல்லாத நிலை போன்ற, தவிர்க்கவே முடியாத சூழ்நிலையில் மட்டும், தானமாகப் பெற்ற கருமுட்டை அல்லது விந்தணுவை வைத்து செயற்கை கருத்தரித்தல் செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்களின் முழு ஒத்துழைப்போடு மட்டுமே இவை நடக்கிறது.

தவறான கருத்து: உறைநிலையில் சேமித்து வைக்கப்பட்ட கருமுட்டைகள், தரமானதாகவோ, பாதுகாப்பானதாகவோ இருக்காது.

உண்மை: புதிய கருமுட்டைகளை பயன்படுத்தும்போது கிடைக்கும் வெற்றி வாய்ப்பு, உறைநிலையில் சேமித்து வைக்கப்பட்ட கரு முட்டைகளை பயன்படுத்தும் போதும் கிடைக்கும். மருத்துவ மற்றும் சமூக காரணங்களுக்காக, குழந்தை பெறுவதை தள்ளிப் போடும் பெண்கள், எதிர்காலத்தில், தங்கள் சொந்த கருமுட்டையை பயன்படுத்தி, கரு தரிக்க விரும்பினால், 'விட்ரிபிகேஷன்' முறையில், தரத்தை இழக்காமல், கருமுட்டையை உறைநிலையில் பாதுகாப்பாக வைக்கலாம்.

தவறான கருத்து: முழு ஓய்வில் இருந்தால், ஐ.வி.எப்.,பில் முழுமையான வெற்றி கிடைக்கும்.

உண்மை: இது முற்றிலும் தவறான கருத்து. இயற்கையாக கருத்தரிப்பவர்கள் என்ன மாதிரியாக கவனத்துடன் இருக்க வேண்டுமோ, அது தான் இதற்கும் பொருந்தும். கரு முட்டை, விந்தணுவை தனித் தனியே பெற்று, செயற்கையாக கருவுறச் செய்யும் முறை இது. அவ்வளவு தான். இதற்காக எந்தவித மாற்றமும், தினசரி வாழ்க்கையில் செய்யத் தேவையில்லை.

தவறான கருத்து: ஐ.வி.எப்., கருத்தரிப்புகள் எப்போதும் அறுவை சிகிச்சையிலேயே முடியும்.

உண்மை: நீண்ட காலம் குழந்தை பேறு இல்லாதவர்களே, இம்முறையியை தேர்வு செய்வர். எனவே, எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். இயல்பான பிரசவத்தில் வரும் சிக்கல்கள், இதிலும் வர வாய்ப்புகள் உள்ளன. அந்த சூழலில் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும்.

தவறான கருத்து: மலட்டுத் தன்மை பெண்களுக்கே உரியது.

உண்மை: நம் சமூகத்தில், குழந்தையின்மைக்கு பெரும்பாலும் பெண்களையே குறை சொல்கின்றனர். குழந்தையின்மைக்கு ஆண், பெண் இருவருமே சம அளவில் காரணமாக உள்ளனர் என்பது தான் மருத்துவரீதியிலான உண்மை.

டாக்டர் மதுபிரியா அனந்தகிருஷ்ணன்

கருவாக்க மருத்துவ ஆலோசகர்,

சென்னை

99620 90552

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us