PUBLISHED ON : நவ 02, 2016

நெருங்கிய தோழிகள் இருவர். ஒருவர் கோவையிலும், மற்றவர் பாலக்காட்டிலும் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். இருவரும் பள்ளி காலத்தில் இருந்தே மிகவும் நெருங்கிய தோழிகள். என்னை சந்தித்த போது, இருவரில் ஒருவர் மிக அமைதியாக இருந்தார்; ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அமைதியாக இருந்த தன் தோழிக்காக பேசிய உடன் வந்த பெண், 'இவளுக்கு, அடிக்கடி தற்கொலை எண்ணம் வருவதாகச் சொல்கிறாள். நான், கோவையில் இருக்கிறேன்; இவள் கேரளாவில். இவளை தனியாக விடவே பயமாக இருக்கிறது' என்றார். தோழியை தொடர்ந்து, 3, 4 முறை அழைத்து வந்த பிறகு தான் அந்தப் பெண் கொஞ்சம் இயல்பாக என்னிடம் பேசினார். அதன்பின், தனியாக அழைத்துப் பேசினேன்;
பிரச்னையை பகிர்ந்து கொண்டார். கல்லுாரி நாட்களில், ஒரு பையன் இவளிடம் வந்து, 'ப்ரபோஸ்' செய்துள்ளான். இவளுக்கும் அவனைப் பிடிக்கும். இருவரும் நெருக்கமாக பழகினர். அந்த பையன் ரொம்பவே யதார்த்தமானவன். ஆரம்பத்திலேயே ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்திருக்கிறான். அதாவது, தன் பெற்றோருக்கு சம்மதம் இல்லை என்றால் திருமணம் செய்யக் கூடாது என்பதில். அதை, துவக்கத்திலேயே இவளிடம் தெளிவாக சொல்லி இருக்கிறான். ஆனால் இந்த பெண், அவன் சொன்னதை, 'சீரியஸ்'சாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த பெண் எமோஷனல் டைப்; எதையும் உணர்வுப்பூர்வமாகவே பார்ப்பவள். ஏதோ ஒரு அற்புதம் நடந்து திருமணம் நடந்துவிடும் என்ற கற்பனையிலேயே இவள் இருந்திருக்கிறாள்.
படித்து முடித்து, வேறு வேறு ஊர்களில் வேலையில் சேர்ந்த புதிதில், அடிக்கடி போனில் பேசியவன், சில மாதங்களில் பேசுவதை குறைத்துக் கொண்டான். 'வாட்ஸ் ஆப்'பில் அவ்வப்போது வரும், 'மெசேஜ்' அதுவும், சில வாரங்களில் குறைந்து விட்டது. ஆனால் இந்த பெண், கடைசி வரை யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளவே இல்லை. கற்பனையிலேயே இருக்க, அடுத்த சில மாதங்களில் அந்த பையனிடமிருந்து மொத்த தொடர்பும் இல்லாமல் போனது.
இவ்வளவு நடந்த பிறகும் இந்த பெண், யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள தயாராக இல்லை; கற்பனையிலேயே அவனுடன் வாழ்கிறாள்.காலையில் கிளம்பி அலுவலகம் சென்றால், வேலை கவனத்தில் சற்றே அவனை மறந்து இருப்பாள். மாலையில் விடுதிக்கு வந்தவுடன் அவன் நினைவு. தொடர்பு கொள்ள முயற்சித்தாலும், 'ரெஸ்பான்ஸ்' இருக்காது. விரக்தியில் தற்கொலை எண்ணம். மாலை, 6:00 மணிக்கு விடுதிக்கு வந்தால், துாங்கப் போவதற்கு அதிக நேரம் இருக்கிறது. அதனால் பிடித்தமான வேறு ஏதாவது புதிய விஷயத்தைக் கற்றுக் கொள். தனிமையில் இருக்காதே. அவனிடம் எத்தனையோ பிடிக்காத விஷயங்கள் இருக்கும்; அதை மனதில் கொண்டு வா. வாழ்க்கையில் உனக்கிருக்கும் வாய்ப்புகளை திறந்த மனதோடு அணுகப் பழகு, என்ற அறிவுறைகளோடு தேவையான தெரபிகளையும் கொடுக்கிறேன்.
செல்லம் நரேந்திரன்
மனநல ஆலோசகர்
98433 14949
