PUBLISHED ON : நவ 02, 2016

ஹீமோபீலியா என்றால் என்ன?
அடிபட்ட இடத்தில், 5 முதல், 10 நிமிடத்திற்குள் ரத்தம் உறைவது என்பது இயற்கை. ஹீமோபீலியா இருந்தால், ரத்தம் உறையாமல் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
ரத்தம் உறையாமல் போவதற்கு என்ன காரணம்?
ரத்தம் உறைவதற்கு தேவையான காரணிகள், 8, 9 இல்லாமல் இருப்பதே.
இந்த குறைபாட்டிற்கு என்ன காரணம்?
மரபியல் காரணங்களால் ஏற்படும் இந்த குறைபாட்டினால், அதிக அளவில் பாதிக்கப்படுவது ஆண்கள். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரத்தின் படி, 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இந்த குறைபாடு உள்ளது.
குறைபாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
பல், ஈறுகளில் இருந்து தானாகவே ரத்தக்கசிவு ஏற்படும். மூட்டுகள், தசைகள் இவற்றில் ரத்தம் கசிந்து, வலி, வீக்கம் ஏற்பட்டு, படிப்படியாக செயலிழக்கும். மூளை, வயிறு இவற்றில் ரத்தம் கசிந்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
குறைபாட்டை எப்படி கண்டறிவது?
குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை வெட்டும் போது தொடர்ந்து ரத்தம் கசியலாம். லேசாக அடிபடும் போது, பல் விழும் நேரத்தில், அறுவை சிகிச்சையின் போது ரத்தம் கசிந்து கொண்டேஇருக்கலாம்.
சிகிச்சை என்ன?
பாதிப்பு மிதமாக உள்ளதா, தீவிரமாக உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். மரபியல் காரணிகளால் ஏற்படும் பாதிப்பை ஊசி மூலம் சரி செய்யலாம். அப்படி இல்லாத பட்சத்தில், f f p plasma என்ற வெள்ளை ரத்தம், ரத்தத்தில் இருந்து பிரித்தெடுத்த, 'க்ரையோ' என்ற மருந்தை பயன்படுத்துவர். ஈறு, பல்லில் வரும் ரத்தக் கசிவிற்கு tranexamic acid என்ற மாத்திரை உள்ளது. பிரச்னை உள்ளவர்கள் உடற்பயிற்சி மூலம் தசை, மூட்டுகளை வலுவாக வைத்திருப்பது அவசியம்.
செய்யக் கூடாதவை என்ன?
வீக்கம் இருக்கும் இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கக் கூடாது. பாதித்த குழந்தையின் தலையில் குட்டுவது, அடிப்பது ஆபத்து.
குறைபாட்டை தடுக்க முடியுமா?
மரபணு பரிசோதனையில், கருவில் இருக்கும் போதே இந்த குறையை அறிய முடியும்.
குறைபாடு உள்ளவர்களுக்கு அரசிடமிருந்து உதவி கிடைக்கிறதா?
இவர்களுக்கான மருந்துகள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்கின்றன.
ஹீமோபீலியா சங்கத்தின் செல்பாடு என்ன?
பாதக்கப்பட்டவர்களுக்கு நோய் குறித்த விழிப்புணர்வு, உடற்பயிற்சி, தேவையான சிகிச்சைகள் மற்றும் வழிகட்டுதல்களை, வாலண்டரி ஹெல்த் சர்வீஸ் மருத்துவமனையில் (vhs) வழங்கி வருகிறோம்.
டாக்டர் ரா.வரதராஜன்
மருத்துவ அதிகாரி,
ஹீமோபீலியா அமைப்பு,
சென்னை கிளை
044 - 2254 1652
