PUBLISHED ON : ஆக 01, 2010

* எனக்கு பைபாஸ் ஆப்பரேஷன் செய்து 15 ஆண்டுகளாகிறது. பைபாஸ் ஆப்பரேஷனுக்கு பிறகு 10 ஆண்டுகள்தான் இருக்கமுடியும் என பயமுறுத்துகின்றனர். தங்கள் அறிவுரை தேவை?
-எஸ்.தில்லைமணி, கோவை
இருதய ரத்தநாளத்தில் இருக்கும் அடைப்பை நெஞ்சில் இருந்தோ, கால், கைகளில் இருந்தோ ரத்தநாளத்தை எடுத்து சரிசெய்வது பைபாஸ் ஆப்பரேஷன். நெஞ்சில் இருந்து எடுக்கும் ரத்தநாளத்தை, , 'LIMA Graft' என்பர். இந்த 'LIMA Graft' பொருத்தப்பட்டவர்களுக்கு 20 ஆண்டுகள் முடிந்த பின்பும் 90 சதவீதம் அடைப்பு ஏற்படாமல் உள்ளது. ஆனால் காலில் இருந்து எடுக்கப்படும் S.V.G. Graft 10 ஆண்டுகளில் 50 சதவீதம் மூடி விடுகிறது. ஆகையால் எந்த இடத்தில் இருந்து Graft எடுக்கப்பட்டது என்பதைப் பொறுத்தே நீண்டகால இருதய ஆரோக்கியம் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே உங்களுக்கு முதலில் டிரெட் மில் பரிசோதனை செய்வது அவசியம். இதில் நார்மல் என முடிவு வந்தால், அனைத்து கிராப்டும் நன்கு உள்ளது என்று அர்த்தம். டிரெட் மில் பரிசோதனையில் கோளாறு இருந்தால் மறுபடியும் ஆஞ்சியோ கிராம் பரிசோதனை செய்து கிராப்டில் அடைப்பு இருந்தாலோ அல்லது உங்கள் சொந்த ரத்தக்குழாயில் அடைப்பு அதிகரித்து இருந்தாலோ அதற்கேற்ப ஸ்டென்ட் (Stent) சிகிச்சை முறையில் சரிசெய்யலாம்.
* இருதய ஓட்டையை சரிசெய்ய முடியுமா?
-த.இந்திரஜித், மேலவளவு
இருதயத்தின் ஓட்டை என்பது பிறவியில் இருந்தே ஏற்படும் வியாதி. இது சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ இருக்கலாம். இதுதவிர எந்த இடத்தில் ஓட்டை என்பது மிகமுக்கியமானது. சிறிய ஓட்டை மேலிரண்டு அல்லது கீழிரண்டு பாகங்களுக்கு இடையே இருந்தால் ஆப்பரேஷன் மூலமோ அல்லது 'Device Closure' முறையிலோ எளிதில் சரிசெய்யலாம். ஆனால் வேறு முக்கிய இடங்களில் இருந்தாலோ அல்லது ஓட்டையுடன் வேறு கோளாறுகள் இருந்தாலோ கடினமான ஆப்பரேஷன் தேவைப்படும். இந்த ஓட்டையால் நுரையீரலில் ரத்தஅழுத்தம் மிகவும் அதிகமாக இருந்தால், நோயாளி ஆப்பரேஷன் செய்யும் கட்டத்தை தாண்டிவிட்டார் என்று அர்த்தம். எனவே நோயாளிக்கு எந்த இடத்தில் எந்தளவு ஓட்டை உள்ளது என்பதை பொறுத்தே சிகிச்சை மேற் கொள்ளப்படும்.
* எனக்கு மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்ததில், எக்கோ பரிசோதனை முடிவில், Mild Aortic Stenosis உள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்காக தற்போது, 'Carvedilol, Ramipril, Statin' வகை மாத்திரைகளை எடுத்து வருகிறேன். சர்க்கரை நோயும் உள்ளது. ஆலோசனை கூறவும்?
-எஸ்.சங்கரராமன், சிவகாசி
Mild Aortic Stenosis என்பது இருதயத்தின் இடதுபுறம் உள்ள Aortic Valve ல் லேசான அடைப்பு உள்ளது என அர்த்தம். இதற்கு மருந்துகள் எதுவும் தேவையில்லை. இதை ஆறு மாதத்திற்கு ஒருமுறை எக்கோ பரிசோதனை செய்து பார்த்தால் போதும். அதாவது இந்த அடைப்பு நாளடைவில் கூடுகிறதா என அறிய இந்த பரிசோதனை உதவும். பலருக்கு இந்த லேசான அடைப்பு வாழ்நாள் முழுவதும் தொந்தரவு தராது. சிலருக்கு இந்த அடைப்பு நாளடைவில் கூடி ஆப்பரேஷன் தேவைப்படலாம். Aortic Stenosis நோயாளிகள் அவசியம் Ramipril மாத்திரையை எடுக்கக்கூடாது. சர்க்கரை நோயாளிகளைப் பொறுத்தவரை அதை கட்டுப்பாட்டில் வைப்பது அவசியம்.
* சர்க்கரை நோயாளிகளுக்கு, 'HbA1C'& Glycosylated ஹீமோகுளோபின் எந்தளவு இருக்க வேண்டும்?
- ஆர்.ராமராஜன், திண்டுக்கல்
Glycosylated ஹீமோகுளோபின் என்பது ஒரு சிறிய ரத்தப் பரிசோதனை. இதில் கடந்த மூன்று மாதங்களில் சர்க்கரை நோயாளிகளுக்கு எந்தளவு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை கண்டறிய முடியும். இதன் அளவை 'எண்'ணால் குறிப்பிடுகின்றனர்.
சர்க்கரை நோயாளிகளுக்கு அவசியம் இந்த எண்ணின் அளவு ஏழுக்கு குறைவாக இருந்தாக வேண்டும். ஏழுக்கு மேல் இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லை என்று பொருள். இதனால் பிற்காலத்தில் சிறுநீரக கோளாறு, இருதயம், பக்கவாத நோய்களோ அல்லது சர்க்கரையால் ஏற்படும் நோய்கள் உருவாகும் தன்மை பலமடங்கு அதிகரிக்கிறது.
டாக்டர் விவேக்போஸ், மதுரை.

