PUBLISHED ON : ஆக 08, 2010

எனக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் லேசான மாரடைப்பு ஏற்பட்டது. ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ஓரிடத்தில் 50 சதவீத அடைப்பு உள்ளதாகவும், அதற்கு பலூன் சிகிச்சை தேவை எனவும் டாக்டர் கூறினார். ஆனால் எக்கோ பரிசோதனை செய்ததில், முடிவு நார்மல் எனவும், பலூன் சிகிச்சை தேவையில்லை எனவும் கூறுகின்றனர். நான் என்ன செய்வது?
-வி.கணேசன், மதுரை
இருதயத்தின் ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டம் முழுவதும் தடைபட்டால் அதை மாரடைப்பு என்கிறோம். இருதய ரத்தநாளத்தில் அடைப்பு உள்ளதா என கண்டறிய ஆஞ்சியோகிராம் பரிசோதனையே சிறந்தது. எக்கோ பரிசோதனையில் ரத்தநாள அடைப்பு உள்ளதா என கண்டறிய முடியாது. ஆனால் இதில் மாரடைப்பு வந்துள்ளதா என்று அறியமுடியும். உங்களுக்கு பலூன் சிகிச்சை தேவையா, இல்லையா என கண்டறிய, டிரெட் மில் பரிசோதனை செய்தால் போதும். இந்த டிரெட் மில் பரிசோதனையில் மாறுதல் ஏற்பட்டால் பலூன் சிகிச்சை தேவைப்படும். நார்மல் என்றால் தேவைப்படாது. \
76 வயதான நான் ஒரு சர்க்கரை நோயாளி. நடக்க துவங்கினால் ஐந்து நிமிடம் கழித்து இருதயத்தில் வலி ஏற்படுகிறது. உடனே சில நிமிடங்கள் உட்கார்ந்துஇருந்தால் வலி மறைகிறது. பிறகு எவ்வளவு தூரம் நடந்தாலும் வலி வருவதில்லை. நான் என்ன செய்வது?
-முத்துச்சாமி, அன்னூர், கோவை
சர்க்கரை நோயாளிகளுக்கு நெஞ்சில் அழுத்தமாகவோ, எரிச்சலாகவோ, வலியோ ஏற்பட்டால் அது இருதய நோயின் அறிகுறிதான். இதற்கு ரத்தப் பரிசோதனை, எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை அவசியம். ஆஞ்சியோ பரிசோதனை செய்வதும் அவசியமானது. ஆஞ்சியோ கிராமில், ரத்தநாளத்தின் எந்த இடத்தில், எத்தனை சதவீதம் அடைப்பு என்பதை பொறுத்தே சிகிச்சை முறை அமையும். ஆஞ்சியோ பரிசோதனை செய்யும் முன், இருதய நோய்க்கான மருந்து மாத்திரையை எடுப்பது முக்கியம். ஏனெனில், ஒவ்வொரு முறையும் இந்த வலி, சாதாரணமானதாக இன்றி, மாரடைப்பாக ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக நீங்கள் உங்கள் இருதய டாக்டரிடம் சென்று மருந்து, மாத்திரையை துவக்குவதுடன், ஆஞ்சியோகிராம் பரிசோதனை எடுத்துக் கொள்வதும் நல்லது.
பிறந்து 67 நாட்களான எனது நண்பரின் பெண் குழந்தைக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில், இருதயத்தில் துவாரம் உள்ளதாக தெரிகிறது. இதற்கு சிகிச்சையை எப்போது மேற்கொள்ளலாம்?
ந.பாண்டுரங்கன், மதுரை
இருதயத்தில் ஓட்டை உள்ளது என்பது ஒரு பொதுவான சொல். இருதயத்தில் எந்த இடத்தில் எந்தளவு என்பதை பொறுத்தும், அத்துடன் வேறு குறைபாடு உள்ளதா என்பதை பொறுத்தும், நுரையீரலில் ரத்தஅழுத்தம் உள்ளதை பொறுத்தும் சிகிச்சை முறை தேவைப்படும். சில ஓட்டைகள் இயற்கையாகவே மூடிக் கொள்ளும் தன்மை படைத்தவை. சில ஓட்டைகளுக்கு உடனடியாக ஆப்பரேஷனோ, பலூன் சிகிச்சையோ தேவைப்படும். மற்றும் சில ஓட்டைகளுக்கு சில ஆண்டுகள் கழித்து சிகிச்சை தேவைப்படும். எனவே ஓட்டை எந்த இடத்தில் உள்ளது, அத்துடன் வேறு குறைபாடு ஏதும் உள்ளதா என்பதை பொறுத்தும் சிகிச்சை முறையை அமைத்துக் கொள்ளலாம்.
எனது ரத்தஅழுத்தம் கடந்த சில மாதங்களாக 140/100 என்ற அளவிலேயே உள்ளது. இதற்கு நான் மருந்து, மாத்திரையை எடுத்தாக வேண்டுமா?
-கே.சிங்காரவேலன், விருதுநகர்
ரத்தஅழுத்தம் தொடர்ந்து 140 / 100 ஆக இருந்தால் அது கூடுதலான அளவாகும். இந்த ரத்தஅழுத்தத்திற்கு முதலில் வாழ்க்கை முறை மாற்றமே சிறந்தது. உணவில் உப்பு, சர்க்கரையை குறைப்பது, எண்ணெயை அதிகம் தவிர்ப்பது, காய்கறி, பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்வது, அரிசி அளவை குறைப்பது முக்கியம். இதனுடன் மனதை நிம்மதியாக வைத்து, உடற்பயிற்சி செய்வதும் அவசியம். இவை எல்லாம் கடைபிடித்தும், ரத்த அழுத்தம் 140 / 100 ஆக இருந்தால் நீங்கள் மாத்திரையை எடுத்தே ஆக வேண்டும். ஏனெனில் இன்றைய மருத்துவ வழிகாட்டுதல்படி, எந்த வயதிலும், எந்த நேரத்திலும் ரத்தஅழுத்தம் 140 / 90க்கு கீழ் அவசியம் இருந்தாக வேண்டும்.
தற்போது ரத்தஅழுத்தத்திற்கு என பக்கவிளைவு இல்லாத மாத்திரைகள் பல உள்ளன. மருந்து மாத்திரையை எடுத்துக் கொண்டு, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்தால், நாளடைவில் பக்கவாதமோ, மாரடைப்பு, சிறுநீரக கோளாறோ வராமல் தடுக்கலாம்.
டாக்டர் விவேக்போஸ், மதுரை
இருதய நோய் தொடர்பான கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி
இருதயம் காப்போம், தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ், தினமலர் அவென்யூ, மதுரை-16

