PUBLISHED ON : ஜன 20, 2019

* என் குழந்தைக்கு இரண்டரை வயது ஆகிறது. காய்ச்சல் வரும்போது அதிகமாகிறது. இது ஒரு சிலருக்கு வலிப்பு நோயை உண்டாக்கும் என அறிந்து கொண்டேன். காய்ச்சல் குறைய என்னென்ன முதலுதவி செய்ய வேண்டும்?
காய்ச்சல் என்பது நமக்கு பயப்படும் அறிகுறியாக தோன்றும். உடம்பில் கிருமிகளை விரட்ட தற்பாதுகாப்பு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். குழந்தைக்கு உடலில் வெப்ப அளவு 100 -104 டிகிரி அளவை விட அதிகமாக இருந்தால் காய்ச்சல் எனலாம். குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கமே காய்ச்சலினால் ஏற்படும் அசவுகரியத்தை குறைப்பதே தவிர, காய்ச்சலை குறைப்பதற்கு அல்ல.
* 'சீசன்' காய்ச்சல் என ஒன்று உண்டா?
பன்றி காய்ச்சலை சீசன் காய்ச்சல் என்பர். குளிர் காலத்தில் பனி அதிகமாக இருக்கும். சில குழந்தைகளுக்கு குளிர் ஒத்துக் கொள்ளாமல் போகலாம். இது போன்ற காரணங்களால் வரும் காய்ச்சலை சொல் வழக்கில் 'சீசன்' காய்ச்சல் என்பர். இக்காய்ச்சலின் அறிகுறியாக குழந்தைகள் சரியாக சிறுநீர் கழிக்காமல் போகுதல். ஆகாரம் உட்கொள்ளாமல் இருத்தல். நீர்ச்சத்து குறையும் தன்மை ஏற்படுதல். காய்ச்சல் நான்கு நாட்களுக்கு மேல் இருத்தல். குழந்தை மயக்க நிலையை அடைதல். மூச்சு விட சிரமம் ஏற்படுதல். சுய நினைவு இல்லாமல் இருத்தல். குழந்தை உடலில் தடிப்பு அல்லது சொறி ஏற்படுதல்.
* காய்ச்சல் உள்ளதா என அறிந்து கொள்வது எப்படி?
குழந்தையின் முகம் சிவந்து காணப்படும். உடம்பை தொட்டுப் பார்த்தால் சூடாக இருக்கும். உடல் வெப்பத்தின் அளவை 100-104 டிகிரியை விட அதிகமாக இருக்கும். வழக்கத்தை விட எரிச்சல் அடையும். அசதியாக இருக்கும். தூங்கி கொண்டே இருக்கும் அல்லது அழுது கொண்டே இருப்பது போன்ற அறிகுறிகள் காய்ச்சலாக இருக்கலாம்.
* காய்ச்சல் வந்தால் பெற்றோரின் முதலுதவி என்ன?
குடிப்பதற்கு நீர் ஆதாரம் கொடுக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் 'பாராசிட்டமல்' மருந்து கொடுக்க வேண்டும். அப்படியும் காய்ச்சல் குறையா விட்டால் 'இபுபுரூப்பன்' மருந்து கொடுக்க வேண்டும்.
* பெற்றோர் தவிர்க்க வேண்டியவை என்ன?
குளிர்ந்த நீரில் குழந்தையை சுத்தம் செய்யக் கூடாது. குளிர்ந்த காற்று குழந்தையின் உடலில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைக்கு கம்பளி ஆடை போன்ற கடினமான அல்லது அதிகளவு ஆடைகளை வைத்துப் போர்த்தக் கூடாது. பாராசிட்டமல், இப்புரூபன் மருந்தை ஒன்றாக கொடுத்தல் கூடாது. மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.
- டாக்டர் முருகன் ஜெயராமன்,
குழந்தைகள் நல மருத்துவ நிபுணர், மதுரை
94864 67452
