PUBLISHED ON : ஆக 11, 2019

எனக்கு 10 ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. இதனால் காலில் அரிப்பு ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்?
சர்க்கரை நோயால் தானியங்கி நரம்பு மண்டலம் பாதிக்கும் போது, வியர்வை சுரப்பியின் இயக்கம் குறைகிறது. இதனால் தோல் ஈரப்பதம் இன்றி உலர்கிறது. இது அரிப்புக்கு வித்திடும். தொடர்ந்து அரிப்பு இருந்தால் புண் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே உலர்தன்மை இருந்தால் தேங்காய் எண்ணெய், ஈரப்பதமுள்ள களிம்புகளை பயன்படுத்தலாம். அதில் உலர் தன்மையை அதிகரிக்கும் பிற மருந்துகள் இருக்கக்கூடாது. இத்திரவங்களை கால் அரிப்புக்கு மட்டுமின்றி கைகளில் அரிப்பெடுத்தாலும் தடவலாம். இதனால் அரிப்பு குறையும். புண் ஏற்படுவதையும் தடுக்கலாம்.
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் காலை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். கால் பாதத்தில் தோல் நிறமாற்றம், வெடிப்புகள், புண்கள், எரிச்சல், மதமதப்பு இருந்தால் சர்க்கரை நோயினால் ஏற்படும் நரம்பு மண்டல பாதிப்புக்கான அறிகுறியாகும். எனவே முகத்தை பாதுகாப்பது போல் கால் பாதங்களையும் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
நான் தரையிலோ, நாற்காலியிலோ உட்கார்ந்து எழுந்தால் தலை சுற்றுகிறது. இதற்கு சிகிச்சை உண்டா?
உட்கார்ந்த அல்லது படுத்த நிலையில் இருந்து எழும்போது புவி ஈர்ப்பு விசை காரணமாக ரத்த ஓட்டம் அதிகப்படியாக கால் பகுதி நோக்கி செல்லும். இதனால் சில நொடிகள் மூளைக்கு செல்லும் ரத்தம் குறைந்து, தலை சுற்றல், மயக்கம் ஏற்படும். இது பல வியாதிகளின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். குறிப்பாக ரத்தசோகை, ரத்த அழுத்தம் குறைதல், தானியங்கி நரம்பு மண்டல பாதிப்பு, உப்புச்சத்து குறைதல் போன்ற பாதிப்புகளை குறிப்பிடலாம். இதில் எந்த பாதிப்பால் மயக்கம், தலை சுற்றல் வருகிறது என கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக இந்த அறிகுறிகள்
தெரியும்போது சற்று மெதுவாக எழும்ப வேண்டும். வயது முதிர்ந்தோருக்கு இப்பாதிப்பு இருந்தால், கழிப்பறையை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். அங்கு அவர்கள் மயங்கி விழ வாய்ப்புண்டு. வீட்டில் வயது முதிர்ந்தவர்கள் இருந்தால், கழிப்பறையில் அவர்கள் பிடிக்க ஏதுவாக கம்பிகள் அமைப்பது நல்லது. இந்த கோளாறு சில நேரங்களில் இருதய நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். எனவே இருதய பரிசோதனையும் செய்து கொள்ளலாம்.
டாக்டர் சங்குமணி
பொது மற்றும் சர்க்கரை நோய் நிபுணர்
மதுரை, 98432 72876
