PUBLISHED ON : ஆக 11, 2019

நீண்ட நாட்களாக புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்ததால் 'கோப்ட்' என்ற நோய் ஏற்பட்டது.டாக்டரை சந்தித்தித்த போது, கை மற்றும் கால்களில் எடை கட்டி துாக்கும் பயிற்சி செய்ய அறிவுறுத்தினார். இது சரியா?.
நீண்ட நாட்களாக புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நுரையீரல் மட்டுமின்றி உடம்பிலுள்ள அனைத்து தசைகளும் வலுவற்று இருக்கும். 'பல்மனேரி ரீகப்' மூலம் பல வகை பயிற்சிகளை உடம்பின் வெவ்வேறு இடங்களுக்கு கொடுப்பர். அதில் ஒன்றே எடை துாக்கும் பயிற்சி. எடையை கட்டி துாக்கும் போது உடம்பில் உள்ள அனைத்து தசைகளும் வலுப்பெறும். அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரிந்து தினமும் வீட்டில் செய்து வந்தால் நல்ல பலன் தரும். நோய்க்கு மருந்து உட்கொள்வது எந்தளவு முக்கியமோ அந்தளவுக்கு இப்பயிற்சியும் முக்கியம். டாக்டர் கூறியது சரியே.
துாங்கும்போது அதிகமாக குறட்டை விடும் பழக்கம் இருந்தது. டாக்டரை சந்தித்தபோது, சி.பி.ஏ.பி., என்ற கருவியை பொருத்தி உறங்க வலியுறுத்தினார். அதை பயன்படுத்துவது சிரமமாக உள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்?
இக்கருவியால் குறட்டை இன்றி நிம்மதியாக உறங்கலாம். இரவில் இடையிடையே மூளை விழிக்காமல் இருக்கும். எனவே பகலில் உற்சாகமாக செயல்படலாம். முதல் 10 நாட்கள் சற்று சிரமமாக இருக்கும். பின் மூளை பழகிக்கொள்ளும். இப்போது இக்கருவியை பொருத்த நவீன டியூப்கள் கிடைக்கின்றன. டாக்டரின் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்.
எனக்கு 'ரெமுடாய்ட் ஆர்த்ரிடிஸ்' என்ற மூட்டுப்பிரச்னை உள்ளது. தொடர்ந்து மருந்து சாப்பிடுகிறேன். சமீபத்தில் எக்ஸ்ரே எடுத்ததில் நுரையீரலை சுற்றி நீர் இருப்பதாக டாக்டர் கூறினார். எனக்குள்ள நோய்க்கும் நுரையீரலை சுற்றி நீர் சேர்வதற்கும் என்ன தொடர்பு?
பொதுவாக காசநோய், இருதய நோய், புற்றுநோய் உள்ளவர்களுக்கு நுரையீரலை சுற்றி நீர் சேரும். மூட்டுப்பிரச்னைக்கு தொடர்ந்து மருந்து உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும். அதனால் நோய் தொற்று ஏற்பட்டு, நுரையீரலில் நீர் சேர்ந்திருக்கலாம். அந்த நீரை எடுத்து பரிசோதனை செய்து அதற்கு தக்க சிகிச்சை மேற்கொள்வது நல்லது.
மகளுக்கு 14 வயதாகிறது. அவளுக்கு காசநோய் உள்ளது. திருமணம் முடிந்த பின் குழந்தை பிறப்பதில் ஏதேனும் பிரச்னை வருமா?
ஒருவருக்கு காசநோய் இருப்பதை கண்டறிந்ததும் டாக்டர் கூறும் காலம் வரை சிகிச்சை எடுக்க வேண்டும். அலட்சியமாக இருந்து மருந்து உட்கொள்ளாமல் இருந்தாலோ பாதியிலேயே சிகிச்சையை நிறுத்தினாலோ காசநோய் கிருமி உடம்பின் வேறு பகுதிக்கும் பரவி கர்ப்பப்பையை பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது. பின்னாளில் இது குழந்தை பிறப்பில் சிக்கலை ஏற்படுத்தலாம். டாக்டர் கூறியபடி மாத்திரை சாப்பிடுவது நோயை அறவே நீக்க உதவும்.
-டாக்டர் பழநியப்பன்
நுரையீரல் சிறப்பு மருத்துவ நிபுணர், மதுரை
94425 24147
