கனவு தவிர்... நிஜமாய் நில்! - ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்!
கனவு தவிர்... நிஜமாய் நில்! - ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்!
PUBLISHED ON : ஆக 04, 2019

தாயின் வயிற்றில் குழந்தை வளரும் கர்ப்ப காலம், தாய்ப்பால் தரும் பருவம், இரண்டும் தாய் - சேய்க்கு, பிரத்யேக பிணைப்பைத் தரும் நாட்கள். உணர்வு பூர்வமான இந்த அனுபவம், வாடகைத் தாய், தத்துக் குழந்தையின் தாய்க்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, புதிய மருத்துவ நடைமுறையை பின்பற்றுகிறோம்.
குழந்தையை தத்து எடுக்கும் தாய்க்கு, தத்து எடுப்பதற்கு சில மாதங்களுக்கு முன், மூன்று மாதங்கள், பாதுகாப்பான அளவில், ஹார்மோன் மருந்துகள் தருவோம்.
அதே போல, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் தாய்க்கு, கரு முட்டையை தானமாகக் கொடுத்து, வாடகைத் தாயின் கர்ப்பத்தை உறுதி செய்தவுடன், ஹார்மோன் மாத்திரைகளைத் தருவோம்.
கர்ப்ப காலத்தில், அதிகமாக சுரக்கும் சில ஹார்மோன்கள், மருந்துகளின் துாண்டுதலால், வழக்கத்தை விடவும் சற்று அதிகமாக சுரந்து, உடல், மனரீதியில், கர்ப்பமாக இருக்கும் உணர்வை இவர்களுக்குத் தரும்.
தத்து அல்லது வாடகைத் தாயின் மூலம் குழந்தையைப் பெறுவதற்கு முன், தாய்ப்பால் சுரப்பதற்கான ஹார்மோன் மருந்துகள் தரப்படும்.
பிரசவித்த பெண்ணிற்கு சுரக்கும், இயல்பான அளவிற்கு தாய்ப்பால் சுரக்காவிட்டாலும், குறைந்த அளவு இவர்களுக்கும் தாய்ப்பால் சுரக்கும்; குழந்தைக்கு பால் தர முடியும்.
குழந்தை பெற வாய்பில்லாத பெண், தனக்கென்று ஒரு குழந்தை வேண்டும், என்று முழு மனதோடு, தத்து எடுத்துக் கொண்டாலும், குழந்தையின் மேல் இயல்பான பாசம், பொறுப்புணர்வு இருக்கும்.
தானும் கர்ப்பிணி, என்ற உணர்வும், தன்னாலும் குழந்தைக்கு பால் தர முடிகிறது என்ற நம்பிக்கை, குழந்தையின் மேல் கூடுதல் பிணைப்பை ஏற்படுத்தும். இயல்பான தாய்மை உணர்வை, இவர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்கான முயற்சி இது.
வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெறும் போது, குழந்தை பிறந்த நிமிடத்தில் இருந்து, சமூக, பொருளாதார, சட்ட நடைமுறைகளால், வாடகைத் தாய், குழந்தைக்கு ஒரு சொட்டு தாய்ப்பால் கூட தர முடியாது; குழந்தையை பார்க்கவே அனுமதி இல்லை.
இப்படிப்பட்ட குழந்தைக்கும், தாய்ப்பாலின் பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மருத்துவ ரீதியில், இதை நடை முறைப்படுத்தியுள்ளோம்.இந்த ஹார்மோன் மருந்துகளால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது.
ஆய்வு 1
அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும், குறைப் பிரசவ குழந்தைகளில், தாய்ப் பால் மட்டும் குடிக்கும் குழந்தைகள், தாய்ப்பால், புட்டிப்பால் இரண்டையும் குடிக்கும் குழந்தைகள், தாய்ப்பால் வங்கி மூலம் தானமாக கிடைத்த பால் குடிக்கும் குழந்தைகள் என்று மூன்று பிரிவு குழந்தைகளைப் பற்றி ஆய்வு செய்தேன்.
என்னுடைய ஆய்வுக் கட்டுரை, ஐரோப்பிய மருத்துவ இதழில், வெளியாகி உள்ளது.
தானமாகப் பெற்ற தாய்ப்பால் குடித்த குழந்தைகளும், புட்டிப் பால் குடித்த குழந்தைகளுக்கும், உடல், மன வளர்ச்சியில், பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடியவில்லை.
வங்கிகளில், தானமாகப் பெற்ற தாய்ப்பாலையே பாதுகாத்துத் தருகின்றனர் என்றாலும், அந்தந்த தாய்க்கு சுரக்கும் பால், அந்தத் தாய் பெற்ற குழந்தைக்கு மட்டுமே, சிறந்த பலனைத் தருகிறது.
ஒவ்வொரு தாயின் பாலிலும், தன்னுடைய குழந்தையின் தேவைக்கு ஏற்ப, பிரத்யேக அம்சங்கள் உள்ளன; அந்தக் குழந்தையின் தேவைகளை மட்டுமே முழுமையாக பூர்த்தி செய்ய முடியும் என்பது தான், என் ஆய்வின் முடிவு.
குழந்தையின் மரபணு, உடல், மனப் பிரச்னைகள், குடும்பம், சூழல், உணவுப் பழக்கம், இவை அனைத்திற்கும் ஏற்ப தனித்துவம், ஒவ்வொரு தாயின் பாலிலும் உள்ளது.
வாழ்க்கை முறை மாற்றத்தினால், அதிகரித்து விட்ட திருமண வயது, கால தாமதமாக குழந்தை பெறுவது, குழந்தையின்மை அதிகரிப்பு என்று பல சவால்கள், நம் முன் இருக்கும் போது, வேறு வழியே இல்லாத பட்சத்தில், பெற்ற தாயிடம் கிடைக்காதது, குறைந்த பட்சம் தானமாக கிடைக்கிறதே என்று, தரலாம்.
ஆய்வு 2
'கொலஸ்ட்ரம் ஸ்வாபிங்' என்ற முறையை தற்போது புதிதாக நடைமுறைப் படுத்தியுள்ளோம். குழந்தை பெற்ற, 48 மணி நேரத்திற்குள் சுரக்கும் கொலஸ்ட்ரம் எனப்படும் சீம்பாலில், நோய் எதிர்பணுக்கள் அதிகமாக உள்ளன.
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு, தாய்பால் தர முடியாது.
காரணம், குழந்தைக்கு உறிஞ்சத் தெரியாது; தாய் - சேய் இருவரையும் தனித் தனியே வைத்திருக்க வேண்டியிருக்கும்; தாயின் உடல் நிலை சீராக இல்லாவிட்டால், தாயிடமிருந்து பாலை சேகரிக்க முடியாது.
இந்த நிலையில், தாயிடம் இருந்து எடுத்த சீம்பாலை, தினமும் நான்கு முறை, குழந்தையின் உதடுகள், வாயின் உட்புறம், இரண்டு சொட்டுகள் தடவுவோம்.
இது போல, சீம்பால் தடவிய குழந்தைகள், 100 பேர், அப்படி கொடுக்க வாய்ப்பே இல்லாத, 100 குழந்தைகள் என்று தனித் தனியே ஆய்வு செய்தோம். பால் தடவிய குழந்தைளுக்கு, மருத்துவமனை சூழலில் ஏற்படும் தொற்று அபாயம் மிக மிகக் குறைவாக இருந்தது.
இவை, குடல், ரத்தம், நுரையீரல், கல்லீரல் என்று உடல் முழுவதும் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்களை துாண்டுகிறது. தாய்ப்பாலின் அளவு கூட முக்கியமில்லை; ஒவ்வொரு சொட்டு தாய்ப்பாலிலும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது.
தவிர்க்கவே முடியாத காரணங்கள் இருந்தாலும், எவ்வளவு துாரம் முடியமோ, அதுவரை தாய்ப்பால் தருவதே பாதுகாப்பானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு துளியிலும் பலன் இருக்கிறது என்பது தான் பல ஆராய்ச்சிகள் தரும் முடிவு.
டாக்டர் தீபா ஹரிஹரன், இயக்குனர், பச்சிளங்குழந்தைகள் பிரிவு,
சூர்யா மருத்துவமனை, சென்னை. 98410 71435
