PUBLISHED ON : ஆக 28, 2022

மாதவிடாய் ஆரம்பித்த முதல் மூன்று ஆண்டுகளில், ஒழுங்கற்ற மாதவிடாய் வருவது இயல்பு; இது பற்றி கவலைப்பட தேவையில்லை. 13 - 18 வயதில் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னையால் பாதிக்கப்படுவது அதிகரித்து உள்ளது. இந்த வயதில், அடுத்தடுத்து வரும் பொதுத் தேர்வுகள் தரும் அழுத்தம் காரணமாக, ஒழுங்கற்ற மாதவிடாய் வருவது தற்போது அதிகமாகி விட்டது.
குழந்தைகளின் நடத்தையை கவனிக்கிறோம் என்ற பெயரில், குடும்ப உறுப்பினர்கள் 'வந்துருச்சா... வந்துருச்சா...' என்று கேட்பதைத் தவிர்க்க வேண்டும். இது, குழந்தைகளுக்கு மிகுந்த மன அழுத்தத்தை தரும். மகளின் மாதவிடாய் நாட்கள், அம்மாவுக்கு தெரிந்து, ஆதரவாக இருக்க வேண்டும். அதேசமயம், அதீத கவனிப்பு என்ற பெயரில் அழுத்தம் தருவது தவறான அணுகுமுறை.
மன அழுத்தம் அதிகமாகும் போது, 'புரோலாக்டின்' என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரந்து, கரு முட்டை வளர்ச்சியை தடுக்கும்; மாதவிடாய் தாமதமாகும். ரத்தப் பரிசோதனை வாயிலாக, இந்த ஹார்மோன் சுரப்பு எந்த அளவில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
அடுத்து, தைராய்டு ஹார்மோன் சீராக இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.
மாதவிடாய் தொடர்ந்து வராமல் இருந்தால், கர்ப்பப்பை மற்றும் கருக் குழாயின் வெளி அடுக்கில் செல்கள் சேர்ந்து, நீர்க்கட்டிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. துரித உணவுகளை அதிகம் சாப்பிட்டு, உடலுழைப்பே இல்லாமல் இருந்தால், 'ஈஸ்ட்ரோஜென்' ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும்.
மாதவிடாய் சுழற்சியில் ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரான் இரண்டும், ஒன்று அதிக அளவில் சுரக்கும் போது, மற்றது குறைவாகச் சுரக்கும். இப்படி இல்லாமல், அதிக கொழுப்பு உள்ள உணவை சாப்பிட்டால், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து, கரு முட்டை வளர்ச்சியை தடுத்து, மாதவிடாய் வராது. எந்த வயதினராக இருந்தாலும், மன அழுத்தம் குறைந்ததும், 90 நாட்களுக்குள் தானாகவே மாதவிடாய் வந்து விடும்.
- 'கைனகாலஜி' மருத்துவ இதழ்
