தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான வாழ்க்கை!

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான வாழ்க்கை!

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான வாழ்க்கை!


PUBLISHED ON : ஜூன் 19, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 19, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''உடலில் சேரும் தேவையற்ற கலோரி ஆபத்தானது; கலோரியை எரிக்க தகுந்த வேலை செய்ய வேண்டும். அவ்வப்போது சர்க்கரையின் அளவை பரிசோதித்து அதற்கேற்ப உணவு முறையை மாற்றி, உடற்பயிற்சி மேற்கொள்வது நலன் பயக்கும்.

சர்க்கரை நோய்கள் முறையாக உடல் நலம் பேணினால், இனிப்பான வாழ்க்கை வாழ முடியும்,'' என்கிறார், திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனை நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர், செண்பகஸ்ரீ. நீரிழிவு நோய் குறித்த சந்தேகங்கள் தொடர்பாக, செண்பகஸ்ரீ, நம்மிடம் பகிர்ந்தவை...

நீரிழிவு நோய், அறிகுறிகள் என்ன, தெரிந்து கொள்வது எப்படி?

ஒருவருக்கு அதிகபட்சமான உடல் சோர்வு, அதிக தண்ணீர் தவிப்பு, அதிக சிறுநீர் வெளியேறும் உணர்வு, எதிர்ப்பு சக்தி குறைவதால் சிறுநீர் பாதையில் அரிப்பு, தலைசுற்றல் ஆரம்ப கட்ட அறிகுறி. இந்த தொந்தரவு உள்ளவர்கள் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யும் போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு முழுமையாக தெரியவரும்.

குழந்தைகளுக்கு டைப் - 1 நீரிழிவு பாதிப்பு உறுதியாகிறது. அதை தடுப்பது எப்படி?

நம் வீட்டு குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பதை பெற்றோர் கவனிக்க வேண்டும். ஓடியாடி விளையாட அனுமதிக்க வேண்டும். அமர்ந்து கொண்டே செல்போன், கம்ப்யூட்டர் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், பெரியவர்கள் யாவருக்குமே உடலில் சேரும் அதிகமான கலோரி ஆபத்து தான்.

எந்தெந்த உணவு சாப்பிட வேண்டும்...

பசித்த பின் சாப்பிட வேண்டும். ஒரே நேரத்தில் நிறைய சாப்பிடக்கூடாது; அதிகமாக சாப்பிட்டால், திடீரென சர்க்கரை அளவில் மாற்றம் வரும். 'ஒபிசிடி' வரக்கூடிய உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். எண்ணெய், ஜங்க், பாஸ்ட்புட் உணவு கூடவே கூடாது. காய்கறி, பழங்கள் உடலுக்கு ஆரோக்கியமானது. நாம் எந்தளவு சாப்பிடுகிறோமே, அந்தளவு கலோரி எரிக்கப்பட வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

கொரோனா வந்தவருக்கு நீரிழிவு பாதிப்பு ஏற்படுமா?

நீரிழிவு நோய் இருந்தவர் பலர் கொரோனா காலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால், கொரோனா வந்தவர்களுக்கெல்லாம், புதிதாக நீரிழிவு நோயின் தாக்கம் தெரிய வந்தது என கூறி விட முடியாது. கொரோனாவால் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக உருவாவார்கள் என்பது தவறு.

நீரிழிவுக்கு தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டி இருக்கிறதே, ஏன்?

அலட்சியமாக இருப்பதே நீரிழிவு நோய் தடுக்க முடியாததற்கு காரணம். சிலர் கட்டுப்பாடுடன் இருக்கிறேன் என்ற பெயரில், சாப்பிட்டு விட்டு நீண்ட நேரம் கழித்து, மாத்திரை எடுத்துக் கொள்கின்றனர்; அது தவறு. சாப்பாட்டுக்கும் மாத்திரைக்குமான நேர இடைவெளி மிக முக்கியம். எக்காரணம் கொண்டும் சாப்பிடாமல், மாத்திரை எடுத்துக் கொள்ள கூடாது. இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் திடீர் ஏற்றம், இறக்கம் வரும் வாய்ப்புள்ளது.நோயாளிகள் டாக்டர் அறிவுரையை தவறாது பின்பற்ற வேண்டும். டாக்டர் கூறாமல், சிகிச்சை, மாத்திரை நிறுத்தவே கூடாது. இன்று இனிப்பு சாப்பிட்டு, நாளைக்கு மாத்திரை சாப்பிட்டுக் கொள்ளலாம் என நினைக்கக்கூடாது. நீரிழிவு நோய்க்கு தொடர் வைத்தியம் அவசியம். தக்க மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், நலமாக வாழலாம். ஆனால், அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வதும் அவசியம்.

ஒருவருக்கு சர்க்கரை நோயே வராமல் இருக்க செய்து விட முடியுமா...

யாருக்கு நீரிழிவு நோய் வரும்; வராது என உறுதியாக சொல்ல முடியாது. 90 வயதை கடந்தவர் கூட ஆரோக்கியமாக இருப்பார்கள்; 14 வயதில் நீரிழிவு வருபவர்களும் உண்டு. இதெல்லாம் செய்தால் நீரிழிவு நோய் வரும் என சொல்லலாம். ஆனால், இதனால் வராமல் தடுக்கலாம் என உறுதியதாக கூறுவது கடினம். உணவு பழக்கம், உடற்பயிற்சி, போதிய ஓய்வு, அவ்வப்போது உடல் பரிசோதனை ஒவ்வொருவருக்கும் கட்டாயம்.

முன்னோர்களுக்கு இருந்தால், சர்க்கரை நோய் மற்றவர்களுக்கும் பின் தொடருமென கூறப்படுகிறதே!

பரம்பரை நோயாகவும் நீரிழிவு தொடரலாம். துவக்கத்தில் பாதிப்பு தெரியாமல், 30 முதல், 40 வயதை கடந்த பின்பும் கூட தெரிய வரலாம். பெற்றோரின் குரோமோசோம் என்னவோ அது அப்படியே தொடரலாம் அல்லது வராமலும் போகலாம்.சர்க்கரை நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், பின் விளைவுகள் தள்ளிபோகும். கண் பாதிப்பு, இருதய, மூளை, சிறுநீரக பாதிப்பு வராமல் தடுக்கலாம். ஐந்து வருஷத்தில் வரும் பாதிப்பு, 15 வருஷம் தள்ளி போடலாம்.

அரசு மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

தமிழக அரசு மக்களை தேடி மருத்துவம், 'வருமுன் காப்போம்' திட்டத்தை செயல்படுத்துகிறது. மாவட்ட அளவில் துவங்கி ஊராட்சி, கிராம அளவில் சர்க்கரை நோயாளிகள் கண்டறியப்பட்டு, தேவையான சிகிச்சை முறை வழங்க ஏற்பாடுகள் மாவட்ட சுகாதாரத்துறையால் மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவ கல்லுாரியில் சிறப்பு டாக்டர் குழு செயல்படுகிறது.

சுகாதார நிலையம், மருத்துவமனைக்கு சென்று மக்கள் தங்கள் உடலின் சர்க்கரை அளவை இன்றே அறிந்து கொண்டு அதற்கேற்ப உணவு பழக்கம், மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். நலமாக வாழ ஆரம்ப நிலையில் பரிசோதனை மிக அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us