தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொழுப்பை முடிவு செய்வது எது?

கொழுப்பை முடிவு செய்வது எது?

கொழுப்பை முடிவு செய்வது எது?


PUBLISHED ON : ஜூன் 19, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 19, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதயத்திற்கு ரத்தத்தை செலுத்தும் ரத்தக் குழாய்களில், 60 - 70 சதவீதம் கொழுப்பு படிந்து, அடைப்பு ஏற்படுவது, 70 வயதிற்கு மேல் இயல்பான ஒன்று. கடந்த 20 ஆண்டுகளில், இது முற்றிலும் மாறி, 30 - 40 வயதினருக்கே இப்பிரச்னை வருகிறது.

ஒன்றிரண்டு இல்லை... பல அடைப்புகள் இருந்து, 'பை - பாஸ்' அறுவை சிகிச்சை செய்ய வேண்டிஉள்ளது. மார்பு பகுதியில் வலி என்று வருபவர்களிடம், 'டிரெட்மில், ஆஞ்சியோகிராம்' செய்ய வேண்டும் என்றால், 'நன்றாகத் தான் இருக்கிறேன்; ஈ.சி.ஜி., எக்கோ செய்ததில். 'நார்மல்' என்று வந்திருக்கிறது...' என்று சொல்வர்.

ஏற்கனவே மாரடைப்பு வந்திருந்து, 'ஈ.சி.ஜி., எக்கோ' போன்ற பரிசோதனை செய்தால் மட்டுமே, மாரடைப்பு வந்திருப்பது தெரிய வரும். ரத்த நாளங்களில் அடைப்பு இருக்கிறதா என்பது இவற்றில் தெரியாது. இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு இருந்தால், படியேறினால், நீண்ட துாரம் நடந்தால் சிரமமாக இருக்கும். வாயு பிரச்னையா, இதயப் பிரச்னையா என்று வலியை வைத்து புரிந்து கொள்வது சற்று சிரமம் தான்.

இதயப் பிரச்னை என்றால், மார்பு பகுதியில் ஏற்படும் வலி, சில நிமிடங்களில் தசைகளை இறுக்கிப் பிடிக்கும்; அடுத்த சில நிமிடங்கள் வலி இருக்காது. தாடை முதல் தொப்புள் வரை எங்கு வேண்டுமானாலும் வலி வரலாம். இந்த வலி, யானை காலை துாக்கி நெஞ்சு மேல் வைப்பது போல இருக்கும்.

அதிக வியர்வை, மூச்சுத் திணறல், மயக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால், நிச்சயம் இதயம் தொடர்பானதாக இருக்கலாம். வாயுத் தொல்லையாக இருந்தால் பிரச்னை இல்லை. இதயக் கோளாறாக இருந்தால், தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நம்மை காப்பாற்றிக் கொள்ளும் வாய்ப்பை இழக்கிறோம்.

அதே நேரத்தில், முதியவர்கள், நீண்ட காலமாக சர்க்கரை நோய் இருப்பவர்கள், குறிப்பாக பெண்களுக்கு ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால், அறிகுறிகள் வெளியே தெரியாது. டிரெட்மில், ஈ.சி.ஜி., பரிசோதனையில், 'பாசிட்டிவ்' என்று வந்தால், ஆஞ்சியோகிராம் செய்து பார்த்தால், அடைப்பு இருக்கிறதா, எத்தனை என்பது தெளிவாகத் தெரியும்.

அடைப்பு, 70 சதவீதத்திற்கு மேல் இருந்தால், ஆஞ்சியோ பிளாஸ்டி, பை - பாஸ் தேவை. அதற்கு குறைவாக இருந்தால், மருந்தால் கரைக்கலாம். அடைப்பு வெடித்து, மாரடைப்பு வராமல் இருக்க, மருந்துகளுடன் சேர்த்து, நம் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்ற வேண்டியது அவசியம்.

அடைப்புக்கு என்ன காரணம்?

எல்லா செல்களும் உயிர்ப்புடன் இருக்க, கொழுப்பு தேவை. எனவே, ரத்தத்தில் இயல்பாகவே கொழுப்பு இருக்கும். தேவைக்கு அதிகமான கொழுப்பு இருந்தால், எளிதாக தங்கும் இடம், இதயத்திற்கு செல்லும் ரத்தநாளங்களே!

நம் உடலில் இரண்டு கொழுப்புகள் உள்ளன. ஒன்று ஹெ.ச்.டி.எல்., எனப்படும் நல்ல கொழுப்பு; மற்றது எல்.டி.எல்., எனப்படும் கெட்ட கொழுப்பு. எந்தக் கொழுப்பு அதிகமாக இருக்க வேண்டும், எது குறைவாக இருக்க வேண்டும் என்பதை நாம் முடிவு செய்ய முடியாது.

இதுவும் வாழ்க்கை முறையை முடிவு செய்கிறது. அடர்த்தியான, எளிதில் கரையாத கெட்ட கொழுப்பு அதிகமாக இருந்தால், ரத்த நாளங்களில் அடைத்து, ரத்த ஓட்டத்தை தடை செய்யும். ஆரோக்கியமான, சத்தான உணவு, தேவையான அளவு உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாமல் இருந்தால், நல்ல கொழுப்பு இயல்பாகவே அதிகரிக்கும்.

வாழ்க்கை முறை நன்றாக இருந்தால், மருந்தும் தேவைப்படாது; மாரடைப்பும் வராது. 80 வயதிற்கு மேல் இயல்பாக ஏற்படலாம்.

டாக்டர் அசோக் குமார்

இதய ஊடுருவல் சிகிச்சை நிபுணர், சென்னை


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us