தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்


PUBLISHED ON : ஜூன் 10, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1மயக்கத்தில் வகைகள் உள்ளனவா?

உடல் சார்ந்த மயக்கத்தில், 'குறு மயக்கம்' (பெயின்டிங் அல்லது சின்கோப்) 'நெடு மயக்கம்' (அன்கான்ஷியஸ்னெஸ்) என, இரு வகை உண்டு.

2மயக்கம் ஏற்படுவது எப்படி; காரணம் என்ன?

மூளைக்கு தேவையான ரத்தம் செல்லத் தடை உண்டாவதுதான் குறுமயக்கம் ஏற்பட அடிப்படைக் காரணம். சில காரணங்களால், ரத்த ஓட்டம், சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே நின்று விடுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இதனால் மயக்கம் ஏற்படுகிறது. மயங்கித் தரையில் விழுந்ததும், ரத்த ஓட்டம் சரியாகி மயக்கமும் சரியாகி விடுகிறது.

காலை உணவை தவிர்ப்பது. உறக்கமின்மை. வெயிலில் அதிக நேரம் நிற்பது போன்றவையே காரணம்.



3உளவியல் காரணங்களால் மயக்கம் ஏற்படுமா?


தேர்வு பயம், ஆசிரியர் மீதான பயம், பதற்றம், மனஅழுத்தம் போன்ற உளவியல் காரணங்களாலும், குறுமயக்கம் ஏற்படுவதுண்டு. மனக்கவலை, இழப்பு, சோகம், திகில், அதிர்ச்சி போன்ற உளவியல் காரணங்களால், வயதில் பெரியவர்களுக்கு குறுமயக்கம் ஏற்படுகிறது. இறப்பு, இழப்பு போன்ற அதிர்ச்சி தரும் செய்திகளைக் கேட்டதும், மயக்கம் வரும்.

4இருமல் மற்றும் கழுத்து வலி இருந்தால் மயக்கம் வருமா?

இடைவிடாத இருமல் சில நிமிடங்களுக்கு நீடிக்கும்போது, வேகமாக எழும்போது, குறுமயக்கம் ஏற்படுவதுண்டு. கழுத்து எலும்பில் பிரச்னை உள்ளோர், தலையை ஒரு பக்கமாகச் சாய்க்கும்போது, குறுமயக்கம் வரலாம்.



5மயக்கம் ஏற்பட போகிறது என்னும் போது நடுக்கம் இருக்குமா?


நின்ற நிலையிலோ, உட்கார்ந்த நிலையிலோ இருக்கும் ஒருவர் திடீரென்று நினைவிழந்து, மயங்கி விழுவார். அடுத்த சில நிமிடங்களில், மயக்கம் தெளிந்து அவராகவே எழுந்து கொள்வார். மயக்கத்திலிருந்து விடுபட்டதும், சில நிமிடங்களுக்குக் கை கால்களில் நடுக்கமும் தசைத்துடிப்பும் ஏற்படும்.

6மயக்கம் வருவதற்கு முன், அறிகுறிகள் ஏதாவது தென்படுமா?

சிலருக்குக் குறுமயக்கம் ஏற்படும்முன், படபடப்பு ஏற்படும். அடிக்கடி கொட்டாவி வருவது, ஊசி குத்துவது போன்ற உணர்வு, வியர்ப்பது, மூச்சு வாங்குவது, முதலிய அறிகுறிகள் தோன்றுவதுண்டு. அவை ஏற்பட்டவுடன் படுக்கையில் படுத்துவிட்டால் குறுமயக்கம் வராது.

7 மயக்கமுற்றவர்களுக்கு முதலுதவி என்ன?

 மயக்கம் அடைந்தவரை, உடனடியாக நல்ல காற்றோட்டமான இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

 ஆடைகளின் இறுக்கத்தைக் கொஞ்சம் தளர்த்திவிடுங்கள்.

 தலை கீழேயும், பாதங்கள் மேல்நோக்கியும் இருக்குமாறு தரையில் படுக்க வையுங்கள்.

 சில நிமிடங்களுக்குப் பாதங்களை உயர்த்திப் பிடித்துக்கொள்வது நல்லது.

 தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்க வைத்தால், மூச்சுக் குழாய் அடைபடாமல் இருக்கும்.

 முகத்தில் 'சுளீர்' என தண்ணீர் தெளியுங்கள்.

8மயக்கம் தெளிந்தபின் குடிக்க தண்ணீர் தரலாமா?

மயக்கம் தெளிந்தபின், குளுக்கோஸ் தண்ணீரில் சிறிதளவு உப்பைக் கலந்து குடிக்கத் தரலாம்.

ஐந்து நிமிடங்களுக்குள் மயக்கம் தெளியாவிட்டால் அது, நெடுமயக்கமாக இருக்கலாம். அதற்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது.

9நெடுமயக்கத்துக்குக் காரணம் என்ன?

வலிப்பு நோய், இதய நோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய், பக்கவாதம், வெப்பத்தாக்கு, மூளையில் ரத்தக்கசிவு, மூளைக் காய்ச்சல், மூளைக்கட்டி ஆகியவை உள்ளோருக்கு, நெடுமயக்கம் வரும். அதிக அளவில் மது அருந்துவது, போதை மாத்திரைகளைச் சாப்பிடுவது, மின் அதிர்ச்சி, மருந்து ஒவ்வாமை, விஷக் கடி, விஷ வாயு, தலையில் அடிபடுதல் போன்ற காரணங்களாலும் நெடுமயக்கம் ஏற்படும்.

10மயக்கம் வராமல் தடுப்பது எப்படி?

முதல்முறையாக மயக்கம் ஏற்பட்ட பின், 'முழு உடல் பரிசோதனை'யை மேற்கொள்வது அவசியம்.மயக்கத்துக்கான காரணத்தை அறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பயம், பதற்றம் போன்ற உளவியல் காரணமாக மயக்கம் வருவோருக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் மனபலத்தை உண்டாக்கவும் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது, தியானம் மற்றும் யோகாசனம் உதவும். பள்ளி மாணவர்கள், காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. வெயிலில் அளவுக்கு அதிகமாக விளையாடக் கூடாது.

- இக்னேஷியஸ்,

பொது மருத்துவர்,

திருநெல்வேலி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us