PUBLISHED ON : ஜன 20, 2016

1 தோலில் அரிப்பு என்பது என்ன?
உடம்பிற்குள் வேண்டாத பொருள் நுழைந்துவிட்டால், நம்மை உஷாராக்கும் அறிகுறி தான், தோல் அரிப்பு. உடலியல் ரீதியில் சொன்னால், தோலில் அரிப்பு என்பது, ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதைச் செய்வது, நம் தோலில் உள்ள, 'மாஸ்ட்' எனும் செல்கள் தான். தோலில் அரிப்பு ஏற்படும்போது, சொறிவதற்கு இதமாகத்தான் இருக்கும். ஆனால், அது தொடர்ந்தால், எரிச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறிவிடும்.
2 தோலில் அரிப்பு ஏற்பட மருத்துவ காரணம்?
அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம் தான். இதை, 'இம்யூனோகுளோபுலின் - ஈ' என்பர். இந்தப் புரதத்தை, ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதன்முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி, ரத்தத்தில் காத்திருந்து, பாதிப்பை ஏற்படுத்தும்.
3 வயதானவர்களுக்கு தோலில் அரிப்பு ஏற்படுவது எதனால்?
அவர்களுக்கு, தோலில் உள்ள எண்ணெய் சுரப்பிகளின் சுரக்கும் தன்மை குறைவதால், வறட்சி ஏற்பட்டு, அரிப்பை ஏற்படுத்துகிறது.
4என்னென்ன காரணங்களால் அரிப்பு ஏற்படுகிறது?
முதற்காரணம், செயற்கை அழகுச் சாதனப் பொருட்கள் தான். சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை தோலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால், அரிப்பை ஏற்படுத்தும். சிலருக்குக் கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால், உடல் அரிக்க ஆரம்பித்துவிடும். குழந்தைகளுக்கு, டயாபர் ஒத்துக் கொள்ளவில்லை என்றால், பிட்டத்தில் அரிக்கும். ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயின்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருட்கள் போன்றவையும், அரிப்பை ஏற்படுத்தலாம்.
5 தங்கம், வெள்ளி அல்லாத நகைகளை அணிந்தால் தோல் அரிப்பு ஏற்படுமா?
நம் நாட்டு பெண்களுக்கு, 'நிக்கல்' வகை நகைகளால் அதிகளவில் அரிப்பு ஏற்படுகிறது. துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு சிலருக்கு அலர்ஜியாகி, அரிப்பை ஏற்படுத்துகிறது.
6அரிப்பு ஏற்பட்டு சொறிவதால், என்ன பாதிப்புகள் ஏற்படும்?
தோல் தடிமனாவதுடன், சொரசொரப்பாகிக் கறுத்து போகும். சொறியச் சொறிய, நீர்க் கொப்பளங்கள் ஏற்பட்டு வீங்கி, அதிலிருந்து நீர் வடியும். இதை, 'கரப்பான் நோய்' என்பர். இது, நாள் முழுவதும் அரிப்பை ஏற்படுத்தும்.
7 வெயிலும், குளிரும் கூட, தோல் அரிப்பை ஏற்படுத்துமாமே?
வெயில் காலத்தில், சூரிய ஒளியின் புறஊதாக் கதிர்களால் தோலில் அலர்ஜியாகி, அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிக்கும். குளிர்காலத்தில், பனிக்காற்றால் தோல் வறண்டு, அரிப்பை உண்டாக்கும்.
8 தொடை இடுக்கு, மார்பகத்தின் அடிப்பகுதி, அக்குள் போன்ற இடங்களில் மட்டும் அரிப்பு ஏற்படுகிறதே?
அவை, வியர்வை அதிகம் சுரக்கும் பகுதிகள், காளான் பூஞ்சை கிருமிகள் புகுந்து, அரிப்பை ஏற்படுத்தும். இந்த அரிப்பு, இரவு நேரத்தில் தான் தீவிரமாகும். அரிப்பு அதிகரிக்க அதிகரிக்க, அந்த இடத்தில் அகலமாக, படை போலத் தோன்றும்.
9 தோலில் அரிப்பு இருந்தால், தோல் மடிப்பு நோய் வருமா?
அக்குள், இடுப்பின் சுற்றுப்புறம், தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி இப்படி பல இடங்களில், காளான் பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டு, தோலில் அரிப்பை கொடுக்கும். இந்த இடங்களில் பாக்டீரியாவும் சேர்ந்துகொண்டால், 'தோல் மடிப்பு நோய்' ஏற்படும். இதுவும், அரிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு நோய் தான்.
10 உணவும், மருந்தும் கூட, தோல் அரிப்பை ஏற்படுத்துமா?
பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, போன்றவை, தோல் அரிப்பை ஏற்படுத்தும். உணவைப் போலவே, நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளும், அரிப்புக்கு காரணமாகலாம். தோலில் அரிப்பு ஏற்பட்டால், உடனடியாக சரும நிபுணரை அணுகுவதே நல்லது.

