PUBLISHED ON : நவ 21, 2019

முதுமையில் மாத்திரையை நம்பி தான் வாழ வேண்டுமா
முதுமையை,
நோயாளிகளின் மேய்ச்சல் காடு என்பர். அது உண்மையே. தற்போது முதியவர்கள்,
உணவுக்கு அடுத்தபடியாக அதிகமாக எடுத்துக் கொள்வது, பலவிதமான மாத்திரைகளைத்
தான். குடும்ப டாக்டர் என்ற முறை வழக்கொழிந்து போனதே, இதற்கு காரணம்.
குடும்ப டாக்டரின் அவசியம் என்ன
முப்பது
ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் அநேகமாக எல்லா குடும்பங்களுக்கும்,
குடும்ப டாக்டர் ஒருவர் இருப்பர். அந்த குடும்பத்தில், பிறந்த குழந்தை
முதல், முதியவர் வரை, அனைவரின் உடல்நிலை, உணவு பழக்கம், குடும்ப வழக்கம்
என்று அனைத்தையும் தெரிந்து, உடல், மன ஆரோக்கியம் இரண்டையும் மனதில்
வைத்து, குடும்ப டாக்டர் சிகிச்சை அளிப்பார்.
இன்றைய சூழலில் இது சாத்தியமா
நிச்சயம்
சாத்தியம். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், அருகில் உள்ள டாக்டரிடம்
செல்லுங்கள். தொடர்ந்து அவரிடம் போகும்போது, உங்களின் உடல் நிலை,
குடும்ப சூழல் அனைத்தும் டாக்டருக்கு தெரியும்.
தேவைப்படும் நேரங்களில், அவரின் ஆலோசனைப்படி, சிறப்பு மருத்துவரிடம் போகலாம். அதுதான், பாதுகாப்பானது.
உடல் கோளாறுகளுக்கு, மாத்திரை அவசியம் தானே
ஒருவர்,
ஒரு நாளைக்கு அதிக பட்சமாக ஆறு மாத்திரைகள் மட்டுமே சாப்பிட வேண்டும்.
அதற்கு மேல் என்றால் அவர், 'பாலி பார்மசி' என்று கருதப்படுவார்.
இந்தியாவில் இருக்கும், 90 சதவீதம் முதியவர்கள், 7-10 மாத்திரைகளை தினசரி
எடுத்துக் கொள்கின்றனர். பல்வேறு நோய்கள் இருந்தாலும், இப்படி சாப்பிட
வேண்டிய அவசியம் இல்லை.
உதாரணமாக, உடல் பருமன், மூட்டு வலியுடன் வரும்
இதய நோயாளிக்கு, மூன்று பிரச்னைகளுக்கும் மாத்திரை எழுத வேண்டியதில்லை.
இதய நோய்க்கு மட்டும் மாத்திரை எழுதி, உணவு பழக்கத்தில் மாற்றம், தேவையான
உடற்பயிற்சியை தவறாமல் செய்தால், உடல் பருமன் குறையும். மூட்டு வலியும்
சரியாகி விடும்.
சர்க்கரை கோளாறின் ஆரம்பத்தில் இருப்பவர்களுக்கு,
மாத்திரையே தேவையில்லை. 'டயட்'டும், உடற்பயிற்சியும் போதும். கால்சியம்,
இரும்புச் சத்து மாத்திரைகளை சேர்த்து சாப்பிட்டால், மலச்சிக்கல் வரும்.
மாறாக, காலசியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடச் சொல்லலாம்.
தூக்கமின்மைக்கு, மாத்திரையை தவிர்த்து, யோகா போன்ற வேறு வழிமுறைகளை
கடைப்பிடிக்கலாம்.
நோயாளிக்கு இது தெரிய வாய்ப்பில்லையே
நான்
கவனித்ததில், ஒவ்வொரு கோளாறுகளுக்கும், ஒரு சிறப்பு டாக்டரிடம் ஆலோசனை
பெறுகின்றனர். ஒருவர் எழுதி தந்த மருந்து சீட்டை, மற்றவரிடம்
காட்டுவதில்லை; டாக்டரும் கேட்பதில்லை. இதுதான் பிரச்னையே.
எல்லா
டாக்டர்களும் பொதுவாக, வைட்டமின், ஆன்டாசிட், தூக்க மாத்திரைகளை
எழுதுகின்றனர். இதனால், நோயாளிகள் ஒரே மாத்திரையை, இரண்டு, மூன்று என,
சாப்பிடுகின்றனர். என்னிடம் வருபவர்களிடம், வேறு டாக்டரிடம் ஆலோசனை பெற்ற
மருந்து சீட்டை ஒப்பிட்டு பார்த்தே, மாத்திரைகள் தருவேன்.
நிறைய
மாத்திரைகளை எழுதினால், இத்தனை மாத்திரைகளா என்ற அயர்ச்சியில், சிலவற்றை
நிறுத்தி விடுகின்றனர். வயதான காலத்தில், எந்த நேரத்தில், எந்த மாத்திரை
என்று நினைவில் வைப்பதும் கடினம்.
முதுமையில் நோயாளிகள், டாக்டர்
சொல்வதை அப்படியே பின்பற்றுகின்றனர். அதேபோல் டாக்டர்களின்
அணுகுமுறையும், அக்கறையோடு இருக்க வேண்டும்.
டாக்டர் வி.எஸ். நடராஜன்
முதியோர் நல மருத்துவர், சென்னை
044 - 2641 2030
