PUBLISHED ON : ஜன 24, 2020

பாதுகாப்புக் கவசமாகவும், பெருந்தடுப்புச் சுவராகவும், நோய் எதிர்ப்புப் படையின் முதல் நிலைக் காவலனாகவும், உடலின் வெப்ப நிலையைச் சமன்படுத்தும் இயற்கையான குளிர் சாதனக் கருவியாகவும் தோல் ஆற்றும் பணிகளை, சென்ற வாரம் விரிவாக அறிந்தோம். தோலின் மற்ற பெரும் பணிகளான, உணர்வூட்டும் பணி, சமூகப் பாலின ஊடகப் பணி, உயிர் வேதியியல் பணி, சுவாசப் பணி மற்றும் கழிவகற்றும் பணி ஆகியவை குறித்து விரிவாக அறிவோம்.
உணர்வூட்டும் பணி
உடலுக்கு உணர்வூட்டி, உடலுக்குள் உயிர் இருப்பதை ஒவ்வொரு கணமும் உணர்த்துவது, தோல் தான். தொடுதல், அழுத்தம், வெப்பம், சூடு, குளிர், வலி போன்ற உணர்வுகளையும் நம் உடலுக்கு தெரிவிப்பது தோல் தான்.தோலெங்கும் பரவியுள்ள எண்ணற்ற நரம்பு இழைகளின் முனைகள், எல்லா விதமான வலிகளையும், எரிச்சலையும், ஊறலையும், நமைச்சலையும், அரிப்பையும், தினவையும், இன்னபிற வகை வகையான உணர்வுகளையும் உடனுக்குடன் மூளைக்குத் தெரிவித்து, அந்த உணர்வுகளை உடனே அகற்றி, நம் உடலைப் பாதுகாக்கின்றன. இந்த உணர்வுகளை உள்வாங்கும் ஏற்பிகள், தோலெங்கும் 1 மைக்ரோ மில்லி மீட்டர் கூட இடைவெளியில்லாமல், நீக்கமற நிறைந்திருப்பதால் தான், மனிதன் உட்பட, உயிருள்ள விலங்குகள் அனைத்தின் உயிர்ப்புக்கும், ஒரு அர்த்தம் உண்டாகிறது.உணர்வூட்டும் இப்பணி தான், நெருக்கம், அன்பு, பாசம், காதல், காமம், மகிழ்ச்சி, வலி, வேதனை, விருப்பு, வெறுப்பு போன்ற, மனித வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களுக்கும் அடிப்படை.
சமூகப் பாலின ஊடகப் பணி
நம் உடலின் மிகப்பெரிய பாலுறுப்பு எது தெரியுமா? தோல் தான். இது இன்றும், பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. தோல், தன் பரந்து விரிந்த தோற்றத்தாலும், வெவ்வேறு விதமான மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்துவதாலும், பருவ வயதில் ஆணையும், பெண்ணையும் ஈர்க்கும் வினோத மணம் கொண்ட வியர்வையைச் சுரப்பதாலும், நம் உடலின் மிக முக்கிய, மிகப் பெரிய, இன்றியமையாத பாலுறுப்பாக அமைகிறது. சமூகத் தொடர்புக்கும், பாலின ஈர்ப்புக்கும், தோலின் தோற்றப்பொலிவே முதல் அடிப்படை.தோலின் வியர்வைச் சுரப்பிகளில் பெரியதான, 'அப்போக்ரைன்' சுரப்பிகள், அக்குள், மார்பு மற்றும் தொடை இடுக்குகளில், மிக அடர்த்தியாக காணப்படுகின்றன. ஆணும், பெண்ணும் பருவம் எய்தியவுடன், இந்த அப்போக்ரைன் வியர்வைச் சுரப்பிகள், ஒரு வினோதமான நறுமணம் கொண்ட வியர்வையை சுரந்து, ஆணுக்கும், பெண்ணுக்கும், தாங்கள் பருவம் எய்தியதை மறைமுகமாக வெளிப்படுத்தும்.பருவ வயதினரின் பாலின ஈர்ப்புக்கு, மிகவும் உறுதுணையான இந்த வியர்வைச் சுரப்பினைப் புரிந்து கொள்ளாமல், அவர்களைப் பெற்றவர்கள், தாமும் இதை கடந்து தான் வந்தோம் என்பதை மறந்து, மகன் அல்லது மகள் உடலில் துர்நாற்றம் வீசுகிறது என்று, தோல் மருத்துவரிடம் ஆலோசனை கோருவது விந்தையிலும் விந்தை.
உயிர் வேதியியல் பணி
நாம் உயிர் வாழ தேவையான, 'வைட்டமின் டி' தயாரிப்பு, பல்வேறு ஹார்மோன்களின் சுரப்பு மற்றும் சில புரதங்களின் உருவாக்கம் என, அதி முக்கியமான உயிர் வேதியியல் பணியையும், தோல் செய்கிறது.எலும்புகளின் இன்றியமையாத தேவையான, வைட்டமின் டியை, சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து தயாரித்து, நம் உடலுக்கு அளிப்பது, நம் தோல் மட்டுமே. குழந்தைகளை வெயிலுக்கே காட்டாமல் வளர்த்தால், இன்று இருப்பது போல், நம் அனைவருக்கும், வைட்டமின் டி குறைபாடு இருக்கும் என்ற உண்மையை எடுத்துச் சொல்வது, நம் தோல் தான். வெளியில் எங்கும் செல்லாமல், இருந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்கும் இந்த நவீன யுகத்தில், குளிரூட்டப்பட்ட அறையில், உடல் முழுவதும் காற்றுப் புகாத ஆடைகள் அணிந்து, நாம் அனைவரும் முடங்கிக் கிடப்பதால், பிட்யூட்டரி, தைராய்டு, பாலினச் சுரப்பிகளுக்கும், தோல் ஒரு தூதுவனாக விளங்குகிறது. தோலில் ஏற்படும் மாற்றங்கள், ஹார்மோன்களை கட்டுப் படுத்தும் மற்றும் ஊக்குவிக்கும் தூண்டுகோலாகவும் அமைகின்றன.உடல் பருமன் இருந்தால், தோலின் கீழ் அடுக்கின் கீழ் படரும் கொழுப்பால், பெண்களுக்கு, கருக்குழாய் நீர்க்கட்டி பாதிப்பு ஏற்படுகிறது. தவிர, இன்சுலின் ஹார்மோன் செயல்பாடு குறைந்து, ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.
சுவாசப் பணி
உயிர் வாழ தேவையான பிராண வாயுவை அளித்து, உடலின் விஷமான கரியமில வாயுவை வெளியேற்றுவது, நுரையீரல் மட்டும் அல்ல, நுட்பமான பணிகள் பல செய்யும், நம் தோலும் தான். நம் உடலின் சுவாசப் பணி, 98 சதவீதம் நுரையீரலால் நடக்கிறது. மீதம் உள்ள 2 சதவீதம், தோலால் நடைபெறுகிறது.
கழிவகற்றும் பணி
உடலின் கழிவுகளை அகற்றும் பெரும் பணியில், சிறுநீரகம், நுரையீரல், குடல் மற்றும் கல்லீரல் இவற்றுக்கு அடுத்த படியாக, தோலும் ஒரு சிறு பங்கு வகிக்கிறது.நோயுற்ற தருணங்களிலும், முக்கியமாக, சிறுநீரகம் பழுதுபட்ட சமயங்களிலும், சிறு நீரகத்தால் அகற்ற முடியாத கழிவுப் பொருட்களை, தோல் தன்னால் இயன்ற வரை அகற்றி, சிறு நீரகத்தின் பணிச்சுமையைக் குறைக்கிறது.
டாக்டர் எஸ்.முருகுசுந்தரம்
மருத்துவ இயக்குனர்,
தோல் மருத்துவ மையம், சென்னை.
93811 22225
93813 22234
