PUBLISHED ON : ஜூலை 29, 2015

அலிமாவின் சொந்த நாடு நைஜீரியா. அவருக்கு ஏற்பட்ட சந்தேகத்தால், மனக் குழப்பத்தோடு காணப்பட்டார். காரணம், அலிமாவின் கணவருக்கு உடல்நிலை சரியில்லை; இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகி விட்டன.
கட்டாயமாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என, மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
அதனால், நைஜீரியாவிலேயே சிகிச்சையை துவங்கலாமா; வேறு ஏதாவது வெளிநாட்டுக்கு செல்லலாமா என்று சிந்தித்தபோது, அலிமாவின் தோழி, 'இந்தியாவிற்கு செல்லுங்கள். அங்கு, சிறந்த மருத்துவர்களும், சிறந்த சிகிச்சை முறைகளும் உள்ளன' என்று கூறி, அலிமாவின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஒருநாள், அலிமா சொந்த நாட்டில் இருந்து, இந்தியாவிற்கு பயணமானார். கணவருக்கு சிகிச்சையளிக்க, எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். அலிமாவின் கணவருக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.
அவர் தேறிவரும் நிலையில், அலிமா, யதேச்சையாக தனக்கு முழு உடல் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது தான், என்னை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
அவருக்கு, சில ரத்த பரிசோதனைகளும், ஸ்கேனும் எடுக்கச் சொன்னேன். கருப்பையில், ஒரு கட்டி இருப்பதை கண்டுபிடித்தேன். அந்த கட்டி, 7 கிலோ எடையில், 20 செ.மீ., அளவில் வயிறு முழுக்க வியாபித்திருந்தது.
எனக்கோ ஆச்சரியம்! எப்படி அலிமா இதை அறியாமல் இருந்தார். அலிமா பார்ப்பதற்கு நல்ல உயரமாகவும், லேசா குண்டாகவும் இருப்பார். அவரின் உடல்வாகு கூட, அவரின் பிரச்னையை மறைத்திருக்கலாம். உடனே, அலிமாவிற்கு அறுவை சிகிச்சை செய்து, கட்டி இருந்த கருப்பை மற்றும் சினைப்பை அனைத்தையும் அகற்றினோம்.
அந்த கட்டியை என்ன வகையான கட்டி என்று தெரிந்து கொள்ள பரிசோதனைக்கு அனுப்பினோம். அப்போது, நான் மட்டுமல்ல, அலிமாவும் அதிர்ச்சியடைந்தார். காரணம், அந்த கட்டியில், சில இடங்களில் புற்றுநோய்க்கான செல்கள் இருந்தன.
உடலில் உள்ள, எல்லா உறுப்புகளிலும், வயதான மற்றும் சேதமடைந்த செல்கள் மறைவதும், அவற்றின் இடத்தை நிரப்ப, புதிய செல்கள் உருவாவதும் இயல்பு. ஆனால், சில செல்களின், அதீத வளர்ச்சியே புற்றுநோய்க்கான காரணம்.
அறுவை சிகிச்சைக்காக, அலிமாவின் வயிற்றை கீறிப்பார்த்த போது, மற்றொரு அதிர்ச்சியும் காத்திருந்தது. அலிமாவிற்கு குடல் இறக்கம் எனப்படும் 'ஹெர்னியா' வேறு இருந்தது.
அதை சிறப்புச் சீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் சரிசெய்தார். அதன் பின், அலிமாவை புற்றுநோய் நிபுணரிடம் அனுப்பினோம். அவர், 'அலிமாவிற்கு புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் இருந்ததால், சிகிச்சைகள் ஏதும் வேண்டாம். ஆனால், ஆறு மாதத்திற்கு ஒருமுறை மருத்துவரை சந்திக்க வேண்டும்' என்று கூறினார். அலிமா, சொந்த நாட்டுக்கு சென்றுவிட்டார்.
எனக்கோ கடல் கடந்து வந்த ஒருவரை காப்பாற்றிய நிம்மதி. அலிமா புறப்படும் போது சொன்ன வார்த்தை என்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. 'நம்பிக்கைக்குரிய மனிதர்களின் பட்டியலில் உங்கள் பெயர் உண்டு' என்றார்.
- நித்யா ராமமூர்த்தி,
மகப்பேறு நிபுணர்.போர்டிஸ் மலர் மருத்துவமனை, அடையாறு, சென்னை.
98410 73626, 044 - 4289 2222
