PUBLISHED ON : ஆக 23, 2020

கண்புரை எனப்படும், 'கேட்ராக்ட்' பிரச்னை, குறிப்பிட்ட வயதிற்கு மேல் தான் வரும் என்பது, பொதுவான நம்பிக்கை. ஆனால், கர்ப்பிணிக்கு ருபெல்லா வைரஸ் பாதிப்பு இருந்தால், பிறக்கும் குழந்தைக்கு, 'கேட்ராக்ட்' வரலாம்; கண்கள் தவிர, இதயம், காதுகளையும் பாதிக்கும்.கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில், இத்தொற்று தாயிடம் இருந்து, கருவில் வளரும் குழந்தையை பாதித்தால், குழந்தையின் இதயம் பாதிக்கப்படும். இரண்டாவது, மூன்றாவது மூன்று மாதங்களில் பாதித்தால், கண்களையும், காதுகளையும் பாதிக்கும்.கடந்த, 1980களில், எங்கள் மருத்துவமனையில் மட்டும், கேட்ராக்ட்டால் பாதிக்கப்படும் பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை, ஆண்டுதோறும், 2 ஆயிரம். தினமும், மூன்று குழந்தைகளுக்காவது, கேட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.
ருபெல்லா வைரஸ்
'பச்சிளம் குழந்தைகளுக்கு ஏன் வருகிறது?' என்பதை, பல்வேறு கோணங்களிலும் ஆராய்ச்சி செய்த நேரத்தில், எங்கள் மருத்துவமனையின் மூத்த மருத்துவர், டாக்டர் எஸ்.விஜயலட்சுமி, லண்டனில், குழந்தைகளுக்கான கண் மருத்துவத்தில் பயிற்சி பெறச் சென்றார்.அதுவரையிலும், குழந்தைகள் நல கண் மருத்துவம் என்பது, நம் நாட்டில் கிடையாது; இவர் தான், நாட்டின் முதல் குழந்தைகள் நல கண் மருத்துவர்.லண்டன் மையத்தில் பணியாற்றிய, டாக்டர் கேர் கில்பர்ட் என்ற மருத்துவரிடம், இப்பிரச்னையை பற்றி சொன்ன போது, அவர், டாக்டர் மைக் எக்ஸ்டி என்பவரை அனுப்பினார்; அவர், ஓராண்டு இங்கிருந்து இது குறித்து ஆய்வு செய்தார். கேட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்து, கண்களுக்கு உள்ளேயே பொருத்தப்படும் லென்சில், ருபெல்லா வைரசின் படிமம் இருப்பதை கண்டுபிடித்தார்.
தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, பச்சிளம் குழந்தைகளுக்கு கேட்ராக்ட் வரக் காரணம், ருபெல்லா வைரஸ் தான் என்பதை உறுதி செய்து, சர்வதேச மருத்துவ இதழில், டாக்டர் விஜயலட்சுமி, கட்டுரை வெளியிட்டார். இதன் அடிப்படையிலேயே, உலக சுகாதார மையம், உலகம் முழுதும் தடுப்பு மருந்து தர வேண்டி யதன் அவசியத்தை வலியுறுத்தியது. அந்த சமயத்தில், அரசு, மருத்துவமனையில் ருபெல்லா தடுப்பு மருந்து கொடுக்கப்படாமல், தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே தரப்பட்டது.
ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ கவுன்சில், ஒரு குழு அமைத்து, இதன் முக்கியத்துவத்தை அரசிடம் எடுத்துச் சொன்ன பின், கர்ப்பத்தின் போது ஏற்படும் இறப்புகளை தவிர்க்கும், எம்.எம்.ஆர்., தடுப்பு மருந்தாக, 1995ல் இருந்து அங்கீகரிக்கப்பட்டது.தமிழக அரசு, 14, 15 வயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு இந்த தடுப்பு மருந்தை கொடுக்கத் துவங்கியது. புதிதாக இந்த வயதை எட்டும் குழந்தைகள் தவிர, மற்ற அனைவருக்கும், ருபெல்லா தடுப்பு மருந்தை, 2017 முடிவிற்குள் தந்து விட வேண்டும் என்ற இலக்கை, நிர்ணயித்து செயல்பட்டது.தற்போது, கேட்ராக்ட் பாதித்த குழந்தைகளின் எண்ணிக்கை, ஆண்டிற்கு, 300 ஆக குறைந்து இருக்கிறது.
பதிமூன்று வயது வரை, மூளையின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் வளர்ச்சி இருக்கும். மூளையின் பின் பகுதியில் உள்ள பார்வை மண்டலம், முழுமையாக வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், கண்களில் இருந்து துாண்டுதல் தொடர்ந்து இருக்க வேண்டும்.குழந்தை பிறந்ததும், பார்வை திறன் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து, கேட்ராக்ட் பிரச்னை இருந்தால், பிறந்த ஏழு மாதத்தில், அறுவை சிகிச்சை செய்து சரி செய்து விட்டால், பார்வை திறன் முழுமையாக கிடைக்கும். 'குழந்தை வளர்ந்த பின், அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்' என்று, 10 வயது வரை தள்ளி போட்டால், மூளையில் குறிப்பிட்ட பார்வை மையம், வளர்ச்சி அடையாமல் போய் விடும்.துவக்கத்தில் இருந்ததைப் போன்று, அறுவை சிகிச்சைக்கு பின், தடிமனான கண்ணாடி அணிய வேண்டியதில்லை. ஏழு மாதங்களில் அறுவை சிகிச்சை செய்தாலும், குழந்தை வளர்ந்த பின் அதனுடைய கண்களின், 'பவர்' எப்படி இருக்கும் என்பதை கணக்கிட்டு, அதற்கு ஏற்ற லென்சை, கண்களின் உள்ளேயே நிரந்தரமாக பொருத்தி விடுகிறோம்.
எதிர்க்கும் திறன்
சுகாதார பணிகளை, அரசுடன் இணைந்து செயல்படும் போது, கிராமத்தில் இருக்கும் கடைக் கோடி மனிதன் வரை, அதன் பலனை கொண்டு செல்ல முடியும். குழந்தைகளுக்கு விட்டமின் ஏ குறைபாட்டை போக்கும் திட்டத்தை, அரசுடன் இணைந்து செயல்படுத்தினோம்.நத்தம், காரியாபட்டியில், 25 ஆயிரம் குழந்தைகளுக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் விட்டமின் மாத்திரை கொடுத்து, அதனால் ஏற்படும் நன்மைகளை தொடர்ந்து கண்காணித்தோம்.கண்களுக்கு மட்டுமல்ல, நுண்ணுாட்டச் சத்துக்கள் முறையாக கிடைக்கும் போது, வைட்டமின் சி, ஜிங்க் போன்றவற்றை சாப்பிடும் போது, கொரோனாவை திறம்பட எதிர்க்க முடிவதைப் போல, வயிற்று போக்கு, சின்னம் மை போன்ற நோய்களை எதிர்க்கும் திறனும், குழந்தைகளிடம் இருந்ததை பார்க்க முடிந்தது.
டாக்டர் என்.பிரஜ்னா வெங்கடேஷ்,
கண் சிறப்பு மருத்துவர்,
அரவிந்த்கண் மருத்துவமனை,
மதுரை.
0452 - 4356500

