PUBLISHED ON : பிப் 17, 2019

எல்லா இடத்திலும், இனப் பாகுபாடு இருக்கிறது. வாழ்க்கையில் முன்னேற விரும்பினால், இவை அனைத்தையும் துாக்கிப் போட்டு விட்டு, கல்வியில், நம் திறமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
வெற்றி பெற்ற ஒருவரிடம் ஜாதி, மதம், ஊர், மொழி என்று யாரும் பார்ப்பதில்லை. அனைத்தையும் துாக்கிப் போட்டு விட்டு, அன்பு செலுத்துவர். இது தான் உண்மை.
வெற்றி பெறுவதற்கு, ஓராண்டு, இரண்டு ஆண்டுகள், சில சமயத்தில், 20 ஆண்டுகள் கூட தேவைப்படலாம். எவ்வளவு காலம் தேவையோ, அதை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், நாம் இருக்கும் நிலையில் இருந்து வெளியில் வருவது முக்கியம். இளையராஜா இதற்கு சிறந்த உதாரணம்.
எனக்கும் சிறிய வயதில், தாழ்வு மனப்பான்மை, தற்கொலை எண்ணங்கள், இருந்தன. ஆன்மிகத் தேடல், ரோஜா பட வெற்றியைத் தொடர்ந்து, என் மேல் எல்லாரும் அன்பு செலுத்த துவங்கினர்.
இசைக் கலைஞன் என்றால், குடிப்பான்; போதை பழக்கம் இருக்கும்; பெண்களுடன் சுற்றுவான்; நடத்தை சரி இருக்காது என்ற தவறான எண்ணத்தை உருவாக்கி இருந்தனர்.
சினிமாவில் பாடப் போகிறேன் என்றாலே, 'கவனமாக இரு' என்று சொல்லுவர். இதை உடைத்தவர் இளையராஜா. எந்த கெட்ட பழக்கமும் கிடையாது; இசையில் மட்டுமே கவனம். அவரைப் பார்த்தாலே, துப்பாக்கி கையில் வைத்திருப்பவரைப் போல நடுங்குவர். காரணம், அவரின் ஒழுக்கம்.
நான் இசையமைக்க வந்த போது, எனக்கு விருப்பமான சூபி வழியில், ஸ்டுடியோ மீது மரியாதையுடன், கலைஞர்களை மதிப்புடன் நடத்தினோம்.
என் ஸ்டுடியோவில் இருந்து, அதிகாலை, 3:00 மணிக்கு போன் செய்து பாடகியரை அழைத்தாலும், அவரின் அப்பா, சகோதரர், கணவர், யாரானாலும், 'ரகுமான் ஸ்டுடியோவா, பயமில்லை' என்று பாடகியை தனியே அனுப்புவர்.
கடவுளின் அருளால், இன்று வரை அப்படித் தான் உள்ளது. இதை வரப் பிரசாதமாக நினைக்கிறேன்.
ஏ.ஆர். ரஹ்மான், இசையமைப்பாளர்
