தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தலைவலி வருவது எதனால்!

தலைவலி வருவது எதனால்!

தலைவலி வருவது எதனால்!


PUBLISHED ON : ஜன 26, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 26, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தலைவலியை அனுபவிக்காத வர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு பொதுவான விஷயம் இது. தலைவலி ஏன் வருகிறது என்பது குறித்து சில அடிப்படையான விஷயங்களை புரிந்து கொள்வது அவசியம்.

மற்ற வயதினரை விட 15 - 30 வயதிற்குட்பட்டவர்களுக்கே தலைவலி அதிகம் வருகிறது. அதிலும் ஆண்களை விடவும் பெண்களுக்கு தலைவலி அதிகம். தலைவலியை இரண்டு வகையாக பிரிக்கலாம்.'மைக்ரேன்', டென்ஷன், ஒற்றை தலைவலி எனப்படும் கிளஸ்டர் என்ற இந்த மூன்றும் முதல் வகை.

மைக்ரேன் தலைவலி



மைக்ரேன் தலைவலி தான் பொதுவானது. பெண்களை அதிகம் பாதிக்கக் கூடியது. ஹார்மோன் மாறுபாடுகள் மூளையில் சுரக்கும் நரம்பு செல்களில் ஏற்படும் மாறுபாடுகளால் பெண்களை அதிகம் பாதிக்கிறது. துாக்கமின்மை, பசி, ஒத்துக் கொள்ளாத உணவுகள், அதிக துார பயணம், சூரிய ஒளி, மாதவிடாய் கோளாறுகள் மைக்ரேன் வருவதற்கான காரணிகள்.சிலருக்கு வலி வருவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் கண்களுக்கு முன் கலர் கலராக விளக்கு வெளிச்சம் தெரியும். இது தான் ஆரம்பம். கண்களுக்கு முன் பூச்சி பறப்பது மின்னுவது போல தெரியும்.பொதுவாக அறிகுறிகள் இல்லாமல் தலைவலி வருவது தான் இதில் அதிகம். வலி வந்தால் பல நாட்கள் நீடிக்கும்.வெளிச்சத்தை பார்ப்பதில் சிரமம் வாந்தி குமட்டல் ஒரு பக்கம் வரும் வலி இடது, வலது என்று மாறி மாறி தலை முழுவதும் வலிக்கும்.

டென்ஷன் தலைவலி



அதிக வேலை, சரியான துாக்கம் இல்லாமல் இருப்பது போன்றவற்றால் வருவது தலை பாரமாக இருக்கும். அதேநேரம் வலியை பொறுத்துக் கொண்டு வேலைகளை செய்ய முடியும். சில நேரங்களில் டென்ஷன் தலைவலி, மைக்ரேன் தலைவலியாக மாறலாம்; மைக்ரேன் தலைவலி, டென்ஷன் தலைவலியாகவும் மாற வாய்ப்புகள் அதிகம்.

கிளஸ்டர் தலைவலி



ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு வரும். பெண்களுக்கு இது அபூர்வம். தீவிர தலைவலி கண்களை சுற்றி ஊசியால் குத்துவது போல வலிக்கும்; கண்கள் சிவந்து போகும்; கண்களில் இருந்து நீர் வடியும். இரவில் துாங்கவே முடியாது. மருத்துவமனைக்கு வந்து ஆக்சிஜன் கொடுத்தால் சரியாகலாம். இதுவும் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் வருகிறது.முதல்முறை எந்த நேரத்தில் வருகிறதோ மறுமுறையும் மணி அடித்ததைப் போல அதே நேரத்தில் வரும். 10 நாட்கள் மாத்திரை சாப்பிட்டால் சரியாகி விடும். அடுத்த ஆண்டு அதே நாளில் திரும்ப வரும்.

இரண்டாவது வகை



மூளைக் காய்ச்சல், தலையில் அடிபடுவது, தொற்று நோய்கள், மூளையில் கட்டி, மூளையில் ரத்த குழாய் வெடிப்பது, பார்வை கோளாறுகள், மூளையில் கேன்சர் போன்ற காரணங்களால் தலைவலி வரலாம். கை, கால் மரத்துப் போவது, காய்ச்சல், பக்கவாதம், கை, கால்களில் வலி போன்ற அறிகுறிகளுடனும் வலி வரலாம்.இதுவரையிலும் இப்படி ஒரு வலி வந்ததே இல்லை எனும் அளவிற்கு வலி இருக்கும். பத்து வயதிற்குள் அல்லது 50 வயதிற்கு மேல் இது போன்று வந்தால் உடனடியாக பரிசோதிக்க வேண்டும். தாமதித்தால் உயிருக்கே ஆபத்தாகலாம்.எம்.ஆர்.ஐ., ஸ்கேன், முதுகு தண்டில் உள்ள திரவத்தை எடுத்து பரிசோதிப்பது, ரத்தப் பரிசோதனை செய்தால் காரணத்தை கண்டறியலாம்.

சிகிச்சை



மைக்ரேன் தலைவலி வராமல் தடுப்பதற்கான மருந்துகள் உள்ளன. இவற்றை சாப்பிட்டால் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் மெதுவாக சரியாகி படிப்படியாக வலி குறைந்து விடும்.ஆறு மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை மாத்திரை சாப்பிட வேண்டியிருக்கும். நேரத்திற்கு சாப்பிடுவது, துாக்கத்தில் ஒழுங்குமுறை, உடற்பயிற்சி போதுமான அளவு தண்ணிர் குடிப்பது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களால் மைக்ரேன், டென்ஷன், கிளஸ்டர் தலைவலிகளில் இருந்து குணம் பெறலாம்.ஹார்மோன் சிகிச்சை கர்ப்பத் தடை மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தலைவலி வந்தால் மருத்துவ ஆலோசனை மிகவும் அவசியம்.அடிக்கடி வரும் தலைவலிக்கு முறையான சிகிச்சை பெறாவிட்டால் நாளடைவில் பக்கவாதம், நடப்பதில் தடுமாற்றம் போன்ற பிரச்னைகள் வரலாம்.

- டாக்டர் வி.சதீஷ் குமார்

நரம்பியல் மருத்துவர் சென்னை

94425 81260


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us