மனசே மனசே குழப்பம் என்ன! - மன அழுத்தத்தை உண்டாக்கும், 'லைக்!'
மனசே மனசே குழப்பம் என்ன! - மன அழுத்தத்தை உண்டாக்கும், 'லைக்!'
PUBLISHED ON : அக் 14, 2018

சமீபத்தில் என்னிடம் ஆலோசனைக்கு வந்த, புதிதாக திருமணம் ஆன இளம்பெண், 'வாட்ஸ் - ஆப், பேஸ் புக்கில் காட்டிய அன்பு, நேரில் பார்க்கும் போது, ஒரு துளி கூட இல்லை' என, கணவரைப் பற்றி புகார் கூறினார். இதில் எனக்கு, எந்த வியப்பும் இல்லை; இன்று பெரும்பாலானோர், இப்படித் தான் இருக்கிறோம்.
உலக சுகாதார மையத்தின் சமீபத்திய ஆய்வு, 30 கோடி பேர், சமூக வலைதளங்களால், மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பதாக கூறுகிறது.
கறுப்பா, சிவப்பா என்று நேரில் பார்த்து பேச முடியாத நாம், 'பேஸ் புக், டுவிட்டர், வாட்ஸ் - ஆப்'பில் கோபம், எரிச்சல் இல்லாமல், ஈடுபாடு, அன்பு, அர்ப்பணிப்புடன், பல மணி நேரம், அப்படியே ஒன்றிப் போகிறோம்.
இந்த உணர்வுகள் எல்லாம், யதார்த்த வாழ்க்கையில், முகத்திற்கு நேராக பார்க்கும் மனிதர்களிடம் இருப்பது, வெகுவாக குறைந்து விட்டது. அலுவலக மற்றும் நெருங்கிய நண்பர், தெரிந்தவர்களை நேரில் பார்த்தால், புன்னகையுடன், 'ஹாய், ஹலோ' சொல்லி, நலம் விசாரிக்க தயங்குபவர்கள் தான், யார் என்று தெரியாத ஒருவரிடம், ரொம்ப வசதியாக, சந்தோஷமாக, சமூக வலைதளங்களில் பேசுகின்றனர். இதே நபர், யதார்த்தத்தில் ஏன் இப்படி இருக்க முடிவதில்லை?
எதிரில் இருப்பவர், நம்மைப் பற்றி என்ன நினைப்பாரோ என்ற பயத்தில் தான், நேரில் இவ்வளவு இயல்பாக பேச முடிவதில்லை. 'எதிரி, என்னை குறித்து ஓர் அபிப்ராயத்திற்கு வந்து விடுவார்' என்ற பயம் இருக்கும் போது, 'ரியாலிட்டி' தொடர்பு குறைந்து, காட்சி தொடர்பு அதிகமாகி விடுகிறது.
என்னிடம் சமீப காலமாக ஆலோசனைக்கு வரும், பல தம்பதிகளின் பிரச்னை, துவக்கத்தில் நான் சொன்னது தான். 'போனில் நன்றாகப் பேசுகிறான் (ள்); நேரில் பேசுவதில்லை. வாட்ஸ் - ஆப்பில் வெளிப்படுத்தும் அன்பை, நேரில் பார்க்கும் போது தருவதில்லை!'
நேரில் பார்க்காத போது, முழுமையாக எதையும் தெரிந்து கொள்ளாமல், முடிவிற்கு வரும் வாய்ப்பு உள்ளது. நேரில் வந்தால், நான் எப்படி இருக்கிறேன், என் கண், கை அசைவு, தலையாட்டுவது, பார்த்த மாத்திரத்தில் பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம் போன்ற பல விஷயங்கள், தயக்கத்தை ஏற்படுத்துகிறது; அதனால், 'ஆன்லைனில்' பேசுவதையே விரும்புகின்றனர்.
ஏன் இந்த பயம், தயக்கம்... சமூக ஊடகங்கள் புதுசு தானே? சில ஆண்டுகளுக்கு முன் வரை, முகத்திற்கு நேராகப் பேசிக் கொண்டு தான் இருந்தோம்.
சமூக ஊடகங்கள் வந்த பின், 'எல்லாருக்கும் நம்மைப் பிடிக்க வேண்டும்' என்ற மனநிலை வந்து விட்டது. 'பேஸ் புக்'கில் ஒரு, 'போஸ்ட்' போட்டவுடன், எத்தனை பேர், 'லைக்' போடுகின்றனர் என்று, மொபைலை பார்க்க துவங்கி விடுகிறோம். 'லைக்'கில் தான் வாழ்கிறோம். வாட்ஸ் - ஆப் அனுப்பினால், பதிலுக்கு எத்தனை, 'ரெஸ்பான்ஸ்' வருகிறது, எத்தனை, 'பார்வேர்டு' ஆகியிருக்கிறது என, கவனம் மொத்தமும் இதில் தான் உள்ளது.
யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. நமக்கு கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் என்று, நாம் நினைப்பது இந்த, 'லைக்' மட்டுமே!
நேரில் பார்க்கும் யாரும், நாம் சொல்லும் விஷயத்திற்கு, 'லைக்' போடப் போவதில்லையே! 'பேஸ் புக்' அப்படி இல்லை. நம்மைப் பற்றி, நாம் என்ன நினைக்கிறோம் என்ற சுய மதிப்பீடு குறைந்து, மற்றவர்கள் நினைப்பது முக்கியம் என்று ஆகி விட்டது. இதன் விளைவு, மன அழுத்தம். என் பதிவை யாரும், 'லைக்' போடவில்லை அல்லது நான் நினைத்த எண்ணிக்கையில் வரவில்லை என்றால், மன அழுத்தம் வந்து விடுகிறது. பல கல்லுாரிப் பெண்கள், பேஸ் புக்கில் நண்பர்கள் இல்லை என்ற மன அழுத்தத்தில், ஆலோசனைக்கு வருகின்றனர்.
'லைக்' இல்லை என்ற விஷயம், மன அழுத்தத்தை தருவதோடு, சமூக பழக்கம் என்ற ஒன்றில், வளர்ச்சியடைய வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. பொழுதுபோக்கிற்காக இருந்த விஷயங்கள், வாழ்க்கை என்று ஆகி விட்டதால், உணர்வு, உறவு, மொழி என்று அனைத்தும் பிரச்னையாகி விட்டது.
மனிதனும் மனிதனும் பேசிப் பழகியது போய், மனிதனும், இயந்திரமும் பழகியதால், உணர்வு ரீதியான பரிமாற்றங்கள் குறையும் போது, நமக்குள் ஒரு வெறுமை வந்து விடுகிறது. அந்த வெறுமையை, எப்படி கடப்பது என்பது தெரியவில்லை. இதனால், மன நல மருத்துவத்தில், 'நோ மோ போபியா' என்ற ஒன்று புதிதாக உள்ளது. மொபைல்,பேஸ் புக் மறுவாழ்வு மையங்கள் வரத் துவங்கி உள்ளன.
சுய கட்டுப்பாடுடன், தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தான், இதற்கு தீர்வு.
டாக்டர் நப்பின்னை சேரன்
உளவியல் வல்லுனர், சென்னை
dr.snaps@gmail.com
