PUBLISHED ON : ஆக 21, 2022

நம் நாட்டில் அதிகமாக அரிசி பயன்பாட்டில் உள்ள மாநிலம் ஒடிசா; அதன் பின் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா. வடகிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், மேகாலயா போன்றவற்றிலும் அரிசி பயன்பாடு அதிக அளவில் உள்ளது.
சர்க்கரை கோளாறு பாதிப்பை எடுத்துக் கொண்டால், தமிழகம், கேரளாவில் அதிக எண்ணிக்கை உள்ளது. இந்த இரு மாநிலங்களையும் விட, அதிகமாக அரிசி பயன்படுத்தும் ஒடிசாவில், தமிழகத்தில் உள்ள சர்க்கரை கோளாறு பாதிப்பு, எண்ணிக்கையில் பாதி அளவே உள்ளது.
பஞ்சாப், சண்டிகர் ஆகிய மாநிலங்களின் பிரதான உணவுத் தானியம் கோதுமை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த இரு மாநிலங்களில் கோளாறின் பாதிப்பு, தமிழகத்தை காட்டிலும் மிக அதிகம். அதே நேரத்தில் வடகிழக்கு மாநிலங்களில் அதிக அரிசி பயன்பாடு இருந்தாலும், சர்க்கரை கோளாறு பாதிப்பு மிகவும் குறைவு.
இதையெல்லாம் வைத்து பார்த்த போது, அரிசியைத் தவிர வேறு ஏதோ காரணம் இருப்பதாக தெரிந்தது... சமூக, பொருளாதார வசதி அதிகம் உள்ள மாநிலங்களில், வாழ்க்கை தரத்தோடு, வாழ்க்கை முறையும் மாறி விட்டது.
தேவைக்கு அதிகமாக உணவு, தின்பண்டங்கள் எளிதாக கிடைக்கின்றன. உடல் உழைப்பு அதிகம் தேவைப்படாத மூளை திறன் அடிப்படையிலான வேலையை தான் பெரும்பாலானோர் இங்கு செய்கின்றனர். அதிக உணவு, போதிய உடலுழைப்பு இல்லாததே, சர்க்கரை கோளாறுக்கு காரணம் என்பது தெரிகிறது.
தெற்காசிய நாடுகளான தாய்லாந்து, வியட்னாம், கம்போடியா ஆகியவற்றிலும், அதிக அளவு அரிசி பயன்பாடு உள்ளது; ஆனால், சர்க்கரை கோளாறு குறைவு. இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை அவர்களுக்கு இருப்பதால், பாதிப்பு அதிகம் இல்லை என்று தெரிகிறது.
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்