தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/என்னது...மீண்டும் கொரோனா அலையா!

என்னது...மீண்டும் கொரோனா அலையா!

என்னது...மீண்டும் கொரோனா அலையா!


PUBLISHED ON : ஆக 10, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 10, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தடுக்கலாம் என்கிறார் ரத்தநாள சிகிச்சை நிபுணர்

''கொரோனா இரண்டு அலைகளில், நாம் செய்யத் தவறிய விஷயங்களை சரி செய்தாலே, மூன்றாவது அலையை தடுத்து விடலாம்,'' என்கிறார், இருதயம் மற்றும் நுரையீரல் துறை சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் கணேசன்.

யார், யாருக்கு கொரோனாவால் ஆபத்து?

சளி, காய்ச்சல், இருமல் என வரும் நோயாளிகள், இருதயம், நுரையீரல், ரத்தநாளம் மற்றும் வாஸ்குலர் பிரச்னையுடன் வரும் நோயாளிகள் தான், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அதிலும் குறிப்பாக நுரையீரல், இருதயம், சிறுநீரக வியாதி உள்ளவர்கள் உயிரிழப்புக்கு ஆளாகின்றனர். இதில், மிகவும் நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள்,(Respiratory Reduced Lung volume) நோயாளிகள், மிகவும் பாதிக்கப்படுகின்றனர். நோய் எதிர்ப்பு சக்திக்கு, மருந்து சாப்பிடுகிறவர்களும் இதில் உண்டு.

மாவட்டந்தோறும் கமிட்டி வேண்டும்

இந்த நோயின் தன்மையை, அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க வேண்டும்.முக்கியமாக, நுரையீரல் கிளீனிங், பைபர் ஆப்டிக் பிராங்கோஸ்கோப் மற்றும் டிராக்கியா டாய்லெட்டிங் பயிற்சி பெற்ற மருத்துவர்களின், ஆலோசனை தேவை.

இருதயம், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் அறுவை சிக்கிச்சை நிபுணர்கள் அடங்கிய கமிட்டியை, ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க வேண்டும்.

யாரை மருத்துவமனையில் அனுமதிக்கணும்?

இந்த கமிட்டியில் உள்ள டாக்டர்களின் ஆலோசனைக்கு பிறகே, கொரோனா தொற்று சம்பந்தப்பட்டவர்களை உள்நோயாளிகளாக, அனுமதிக்க வேண்டும்.

நோயாளிகளுக்கு சளி பரிசோதனை செய்த பிறகு, என்ன வகையான நோய் கிருமி என்பதை அறிந்து, அதற்கு ஏற்ற சிகிச்சை அளிப்பதே நல்லது.

எல்லா நோயாளிகளுக்கும், ஸ்டீராய்டு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர, தடுப்பு ஊசியை கட்டாயமாக்குவது அவசியம்.

இந்த ஏற்பாடுகள் செய்ய, எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் ஒரு மருத்துவ கமிட்டி அமைக்க வேண்டும். அதில் அரசு மற்றும் தனியார் நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருக்க வேண்டும். இந்த கமிட்டி வாரம்தோறும் அறிக்கை தயாரித்து, மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

நடமாடும் மருத்துவக்குழு வேண்டும்

தனியார் மருத்துவமனையிலும், அரசு மருத்துவமனையிலும் மொத்தம் உள்ள உள்நோயாளிகள் எத்தனை பேர், அதில் இருதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதை, வெளிப்படையாக தெரிவிக்க, நடமாடும் மருத்துவக்குழு அமைக்க வேண்டும்.

மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகள், மற்ற நோயாளிகளுடன் கலக்காமல் இருக்க, தனியாக சானிடோரியம், இன்டென்சிவ் ரெஸ்பரேட்டிவ் கேர் யூனிட், ஐஆர்சியூ அமைத்து, வென்டிலேட்டர் வசதி மற்றும் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை அறியும் கருவிகள் வசதியுடன் அமைக்கப்பட வேண்டும்.

இதனை சரிபார்க்க, நுரையீரல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு, வென்டிலேட்டர் வசதி தேவையா என்பதை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும். சாதாரணமாக இருப்பவர்களுக்கு, வென்டிலேட்டர் வசதி தேவையில்லை.

மூச்சுத்திணறலுக்கு கொரோனா மட்டும் காரணமல்ல!

நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் வர, பல காரணங்கள் உள்ளன. உடலில் ரத்தத்தின் அளவு குறைவாக இருந்தால் மூச்சுத்திணறல் வரும். இருதய நோய் இருந்தால் வரும். ஆஸ்துமா, டி.பி., கிட்னி, கல்லீரல் பிரச்னை இருந்தால் வரும். ரத்த சோகை நோய் இருந்தால் வரும்.

மூச்சுத்திணறலுக்கு இப்படி பல காரணங்கள் உள்ளன. இவை அனைத்தையும் பரிசோதனை செய்து பார்த்த பிறகுதான், கொரோனா தொற்று பற்றி, ஆலோசிக்க வேண்டும். எடுத்த எடுப்பில் கொரோனா என, முடிவு செய்யக்கூடாது.

இது போன்ற நோயாளிகளுக்கு, ரத்த அணுக்கள் மொத்த எண்ணிக்கை, யூரியா, சீரம் எலக்ட்ரோலைட்ஸ், கிரியாட்டினின், இ.சி.ஜி., சி.டி., ஸ்கேன் உள்ளிட்ட பல, பரிசோதனைகள் செய்ய வேண்டும். இந்த சோதனைகள் வாயிலாக, நோயாளிகளின் உடலில் உள்ள முழுமையான நோய் பிரச்னைகளும் தெரியவரும்.

இறுதியில்தான் ஸ்டீராய்டு கொடுக்கணும்

இப்போது கொடுக்கப்படும் ரெம்டெசிவர், ஸ்டீராய்டு உள்ளிட்ட மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொடுக்கப்படுகிறது. இதில் ஸ்டீராய்டு மருந்தை, உயிர் காக்கும் மருந்தாக, இறுதியில் மட்டுமே கொடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் அதிக பணம் செலவு ஆவதால். வசதியற்றவர்கள் சிகிச்சை பெற முடியாமல் பலர் இறந்து விட நேர்கிறது.

இதை தவிர்க்க, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், ஆயுஷ்மான் பாரத், என்.ஹெச்.எம்., மூலம் இலவசமாக சிகிச்சை பெற, அரசு வழி ஏற்படுத்த வேண்டும்.

கருப்பு பூஞ்சைக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை

கருப்பு பூஞ்சை சிகிச்சையை பொறுத்தவரையில், மூக்கை சுற்றியுள்ள சைனஸ் அறைகளை சுத்தம் (Toileting) செய்தாலே, பெரிய உயிரிழப்புகளை தடுக்கலாம். பரவாமல் தடுக்க, அவர்களுக்குதான் தனிமைபடுத்திய சிகிச்சை மிகவும் அவசியம்.

'எக்மோ' சிகிச்சை வசதி வேண்டும்

கொரோனா தொற்றால் சீரியஸ் நிலையில் இருக்கும் நோயாளிகளின் உயிரை காப்பாற்ற, 'எக்மோ' உட்பட அனைத்து வகையான சிகிச்சைகளையும், இலவசமாக கொடுக்க அரசு மருத்துவமனைகளில் வசதி ஏற்படுத்த வேண்டும்.

ஏனென்றால், எக்மோ போன்ற சிகிச்சைகள், அரசு மருத்துவமனைகளில் அரிதாகவே உள்ளன. தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக, அரசு மருத்துவமனைகளில் ஐசியூ, ஐஆர்சியூ வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

இது போன்ற மருத்துவ வசதிகள், அரசு மருத்துவமனையில் இருந்தால், நோயாளிகள் மத்தியில் மரணம் குறித்த அச்சம் இருக்காது. கொரோனா நோயாளிகளுக்கென, ஐஆர்சியூ வசதி உள்ள சானிடோரியம் உருவாக்க வேண்டும்.

அனுபவசாலிகளை பயன்படுத்தி கொள்ளலாம்

ஓய்வு பெற்ற, சீனியர் நுரையீரல் அறுவை சிகிச்சை மருத்துவர்களை, மீண்டும் பணியில் அமர்த்தி, அவர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொரோனா ரத்தக்குழாய் சம்பந்தமான நோய் என்பதால், ரத்தம் உறைந்து நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு, இறப்பு எண்ணிக்கை அதிகமாகிறது. அதனால் வாஸ்குலர் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையும் தேவை.

மேற்கண்ட வசதிகளை, அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தினால், மூன்றாவது அலை வந்தாலும் எளிதாக சமாளித்து, உயிரிழப்புகளை தடுத்து விடலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

டாக்டர் கணேசன்,

இருதயம் மற்றும் நுரையீரல் துறை சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர், கணபதி, கோவை.

மொபைல் போன்: 9843083080.

drganesanksheart@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us