PUBLISHED ON : ஜூன் 12, 2016
மருந்து வாங்கும் போது, டாக்டரின் பரிந்துரை இல்லாமல் வாங்குவது, பலரின் இயல்பாக மாறி விட்டது. இது, ஆபத்தில் கூட முடியக்கூட வாய்ப்புள்ளது.
டாக்டரின் அறிவுரைப் படி, மருத்துவ சீட்டை பயன்படுத்தியே, மருந்துகள் வாங்க வேண்டும். நீண்ட காலத்துக்கு சாப்பிட வேண்டிய உயிர் காக்கும் மருந்துகளின் பெயர், டோஸ் அளவு ஆகியவற்றை, பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.
மருந்து மற்றும் தயாரித்த கம்பெனியின் பெயர், விற்கும் கம்பெனியின் பெயர் மருந்தின் வீரிய அளவு, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை கவனித்து வாங்க வேண்டும்.
காலாவதியான மருந்துகள், விஷமாக மாற வாய்ப்பு உண்டு.
சில கடைகளில், மருந்துகளுக்கு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது; அதுபோன்ற கடைகள் எங்கு செயல்படுகின்றன என்பதை கண்டறிந்து, அங்கு வாங்கிக் கொண்டால், பணம் மிச்சமாகும். சில கடைகளில், போனில் ஆர்டர் கொடுத்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு; இதை, பயன்படுத்திக் கொள்ளலாம்.
சில மருந்து கம்பெனியின் தயாரிப்புகள் இல்லாதபோது, நீங்களாகவே வேறு கம்பெனி மருந்துகளை, மருத்துவரின் அனுமதியில்லாமல் வாங்கக் கூடாது. பொதுவாக எல்லா மருந்துகளையும், வெயில், சூடுபடாத, ஈரம் இல்லாத உலர்ந்த இடத்தில் வைப்பது அவசியம்.
அடுப்பு அருகே, ப்ரிட்ஜின் மேல், சூடான பாத்திரம், ஹீட்டர் அருகே அல்லது வெயில்படும் இடங்களில் மருந்துகளை வைத்தால், கெட்டுப்போக வாய்ப்புண்டு. சிலவகை தடுப்பு மருந்துகளில், வீரியம் கெட்டுப் போனதை, அந்த லேபிள் கலர் மாறுவதைப் பொறுத்து
கண்டுபிடிக்க இயலும்.
மருந்து வாங்கும் போது, மேல் கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம்.