தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நோயற்றவன் எவன்?

நோயற்றவன் எவன்?

நோயற்றவன் எவன்?


PUBLISHED ON : நவ 03, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 03, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனிதர்கள் பயம் சூழ்ந்த நிலையில் வாழும் இந்த கொரோனா காலத்தில், தங்களுடைய அடிப்படை ஆரோக்கியம் இழந்து விடக் கூடாத நிலையைப் பெறுவதே, தற்சமயம் நன்மை தரும். அந்த வகையில் ஆயுர்வேதம் குறிப்பிடும் சில நல்ல கருத்துக்களை, 'தினமலர்' நாளிதழ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அசுவினி தேவதைகள் எனும் இரட்டையர், தேவர்களுக்கு வைத்தியர். இந்திரனுக்கு ஆயுர்வேத மருத்துவம் கற்றுக் கொடுத்தவர்கள். ஒரு சமயம், ஆயுர்வேதத்தின் அடிப்படை உண்மைகள், எவ்வளவு துாரம் பூமியில் அறியப்பட்டு உள்ளன என்று அறிந்து கொள்ள ஆசை ஏற்பட்டு, இரு பறவைகளாக உருமாறி, பாரத தேசமெங்கும் சுற்றி வந்தனர்.

ஆயுர்வேத மருத்துவர்கள் வாழக் கூடிய வீடுகளில் உள்ள மரத்தில் அமர்ந்து, அவர்கள் காதில் விழும்படி, 'கோ - அ - ருக், கோ - அ - ருக்...' என்று, ஒலி எழுப்பினர்.

'க - எவன், அருக் - நோயற்றவன்?' என்று அவர்கள் எழுப்பிய ஒலியின் அர்த்தம் புரியாததால், யாரும் மதிக்கவில்லை. ஆனாலும், அவர்கள் இந்த பரீட்சை முறையை மாற்றாமல், நாடெங்கும் சுற்றி வந்தனர்.

கேரள தேசத்தில், வெட்டம் என்ற வடப்புரம் என்றொரு ஊரில், இந்த ஒலியை எழுப்பியவுடன், அந்த வீட்டில் இருந்த வைத்தியர் சிறிது திகைத்தார்; ஒலி வந்த திசையைப் பார்த்து, கேள்வியை நன்கு புரிந்து கொண்டார்.

நோயற்றவன் எவன்... நோய் வராமல் இருக்கக் கூடியவன் எவன்... எவ்விதம் இருந்தால் நோய் அணுகாது?

வைத்தியரிடம் கேட்கக் கூடிய மிகச் சிறந்த கேள்விகள் இவை. மருத்துவரின் லட்சியமே, நோயற்று வாழ வழி அமைத்துக் கொடுப்பது தான். அதனால், அவர் உடனே கீழ் காணும் வகையில் பதிலை அளித்தார்...

* சரியான காலத்தில் தனக்கு நன்மை அளிப்பதும், தன் இரைப்பையின் அளவிற்கு ஏற்றபடியும் உள்ள உணவை ஏற்பவனும்

* சாப்பிட்டதும், தன் சக்தியை உணர்ந்து அதற்கேற்ப நடை கொள்பவனும்

* இடதுபுறமாக ஒருக்களித்து படுத்து துாங்குபவனும்

* மலம், சிறுநீர் போன்ற இயற்கை உந்துதல்களை அடக்காமல், உரிய காலத்தில் வெளியேற்றுபவனும்

* சிற்றின்ப விஷயத்தில் தன்னடக்கம் உள்ளவனும்

* நோயற்றிருப்பவன் என்பதே வைத்தியர் அளித்த பதில்.

வாழ்க்கை முறையில், மிகவும் முக்கியமான சில விஷயங்களில் இருக்க வேண்டிய கட்டுப்பாடுகள் அனைத்தையும் தொகுத்து தரும் இந்த பதிலால், மிகவும் திருப்தியடைந்த அசுவினி தேவதை, பறவை உருவத்தை விட்டு விட்டு, இரு சீடர்களாக வேடமிட்டு, அந்த வைத்தியருக்கே சிகிச்சை ரகசியங்களை காண்பித்து, கடைசியில் சில உருவத்தைக் காட்டி, குரு தட்சணையாக, ஆயுர்வேத நுால் ஒன்றையும் தந்து சென்றனர்.

மேல் குறிப்பிட்ட உடல் நலம் மேம்படுத்தித் தரும் விஷயங்களை, நாமும் நம் வாழ்வில் கடைப்பிடித்து, நோயற்ற வண்ணம் வாழ்வோம்!

டாக்டர் எஸ்.ரஞ்சனி,

ஆயுர்வேத மருத்துவர், சென்னை.

94444 41771

abinaya.ranjani@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us