PUBLISHED ON : செப் 14, 2014

என் உறவினர் சுயநினைவின்றி, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேராக படுக்க வைக்காமல், ஒருபுறமாக சாய்த்து படுக்க வைத்துள்ளனர். இது ஏன்?
சுயநினைவில்லாமல் இருக்கும்போது உணவு மற்றும் மருந்து இரண்டையும், உணவுக் குழாய்
வழியாக நேரடியாக வயிற்றுக்குள் செலுத்துகின்றனர். அப்போது, நாம் கொடுக்கும் பொருட்கள் புரையேறி மூச்சுக்குழாய் வழியாக, நுரையீரலுக்குள் செல்ல வாய்ப்பு உள்ளது. அதனால், நிறைய பிரச்னைகள் வரலாம். எனவே, சுயநினைவின்றி இருப்பவர்கள், உணவுக் குழாய் வழியே உணவு கொடுக்கப்படுவோர், நிறைய மருந்துகள் கொடுக்கப்படும் நோயாளிகள் ஆகியோருக்கு, முன்னெச்சரிக்கையாக இந்த முறை கையாளப்படுகிறது.
என் வயது, 17. எனக்கு, முன்பு, எப்போதாவது இளைப்பு வரும். தற்போது கண் விழித்துப்
படிக்கும்போது இப்பிரச்னை வருகிறது. இது எதனால்?
ஆஸ்துமாவிற்கு பல காரணங்கள் உள்ளன. சிலருக்கு இது பரம்பரை நோய். சிலருக்கு துாசி, புகை, துர்நாற்றம், குளிர்ச்சியான பொருட்கள், ஒவ்வாமையால் வரும். சிலருக்கு உணவுப் பொருட்கள் ஒவ்வாமை கூட பிரச்னையை ஏற்படுத்தும். அரிதாக அதிக கோபம், வருத்தம், சந்தோஷம், குழப்பம் போன்ற மனவியல் பிரச்னைகளும், காரணங்களாக அமைகின்றன.
பிளஸ் 2 படிக்கும் நீங்கள், தேர்வை பற்றியே நிறைய யோசித்து கவலைக்கு உள்ளானால், இப்பிரச்னை அதிகமாக உங்களை பாதிக்கும். எனவே, மன அமைதியுடன் படியுங்கள். சரியான, 'இன்ஹேலர்' எடுத்துக் கொண்டால், இப்பிரச்னை சரியாகிவிடும்.சமீபத்தில் நடந்த விபத்தில், என் நுரையீரலில் லேசான காயம் ஏற்பட்டது. அதனால், பிரச்னை இல்லை என்று கூறிய மருத்துவர், மருந்துகள் தந்தபின், மூன்று வாரம் கழித்து வரும்படி கூறினார்.
தற்போது, நுரையீரலில் நீர் சேர்ந்துள்ளது என்கிறார். இது எப்படி?
விபத்தில் பெரிய அடிபட்டிருந்தால், உடனே ரத்தக் கசிவோ, நீர் கோர்ப்பதோ நடக்கும். இது போன்ற சிறிய விபத்துகளில், ஊமைக் காயம் என்று நாம் கூறுவது போல, நுரையீரலின் உட்பகுதியில், நீர்க்கசிவு ஏற்பட ஆரம்பிக்கும். இதற்கு இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகலாம். அது போன்ற சமயங்களில், அந்த நீரை எடுத்து விட்டு, மாத்திரைகள் உட்கொண்டால்
சரியாகி விடும். சில சமயங்களில், இப்படி தாமதமாகவும் பிரச்னைகள் வரலாம்.
டாக்டர் எம்.பழனியப்பன்,
மதுரை.

