புற்றுநோய் முற்றிய நிலையிலேயே பெண்கள் சிகிச்சைக்கு வருகின்றனர்
புற்றுநோய் முற்றிய நிலையிலேயே பெண்கள் சிகிச்சைக்கு வருகின்றனர்
PUBLISHED ON : டிச 20, 2019

பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்?
மார்பக புற்றுநோய் தான், இன்றும் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த நிலையில், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருந்தது. சமீப ஆண்டுகளில், விழிப்புணர்வு, சுய சுகாதாரம் அதிகரித்து உள்ளதால், பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், கரு முட்டை, கருக்குழாய் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இத்துடன், 'எண்டோமெட்ரியம்' எனப்படும், கர்ப்பப்பையின் வெளி அடுக்கில் வரும் புற்றுநோய் பாதிப்பும் அதிகரித்து உள்ளது.
கருக்குழாய், கரு முட்டை புற்றுநோய் வருவதற்கான காரணம்?
மரபியல் காரணிகளால், இவ்வகை புற்றுநோய் வருவது மிகவும் அரிது. அடிக்கடி ஹார்மோன் சிகிச்சை செய்பவர்களுக்கு, செயற்கை கருத்தரிப்பு முறையில், அளவிற்கு அதிகமாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செலுத்தினால், இவ்வகை புற்றுநோய் வரலாம். உடல் பருமன் இருப்பவர்களுக்கு, வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.நீர்க்கட்டி, சதைக்கட்டி போன்றவை, புற்றுநோயாக மாறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. 45 - 60 வயதிற்குள் உள்ள பெண்களே, இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
உணவு பழக்கத்தால் பாதிப்பு வருமா?
ரசாயன உரங்கள், செயற்கை நிறமிகளால், பாதிப்பு ஏற்படலாம். ஆனால், உடல் பருமனாக இருந்தால், கரு முட்டை, கருக்குழாய் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம்.
என்ன விதமான சிகிச்சைகள் தரப்படுகின்றன?
புற்றுநோய் முதல் நிலையில் இருந்தால், அறுவை சிகிச்சை மட்டும் போதுமானது. இரண்டாவது நிலையில், அறுவை சிகிச்சை செய்த பின், 'கீமோதெரபி' சிகிச்சையும் தேவைப்படும்.மூன்றாம் நிலையில், முதலில் கீமோதெரபி கொடுத்து, அதன்பின் அறுவை சிகிச்சை செய்து, மீண்டும் கீமோதெரபி கொடுக்க வேண்டும். நான்காம் நிலையில் இருந்தால், கீமோ தெரபி மட்டுமே தர முடியும்.
பிரத்யேக சிகிச்சை உள்ளதா?
கரு முட்டை, கருக்குழாய் புற்றுநோய் பாதிப்பில், மீண்டும மீண்டும் பாதிப்பு வருபவர்களுக்கு, பாதித்த உறுப்புக்களை அகற்றிய பின், வழக்கமாக தரும் கீமோதெரபி மருந்தை, சிறப்பு கருவி மூலம், வயிற்றின் உள்ளேயே நேரடியாக செலுத்துவோம்.இது, எட்டு மணி நேரம் செய்ய வேண்டிய மிகவும் சிக்கலான சிகிக்சை முறை. மீண்டும் புற்று நோய் செல்கள் உருவாகாமல் இருப்பதற்கு, குறிப்பாக, உடம்பில் வேறு எங்கும் புற்றுநோய் பரவாமல், வயிற்று பகுதியில் மட்டும் இருந்தால், இந்த முறை மீண்டும், புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்க உதவும். இதற்கு, 'ஹைபெக்' தெரபி என்று பெயர்.வயிற்றின் உள்ளேயே மருந்தை செலுத்துவதால், வழக்கமாக தரும் கீமோரெபியைப் போல, பக்க விளைவுகள் அதிகமாக இருக்காது. மற்ற உறுப்புகளுக்கு, எந்த பாதிப்பும் வராது.
கரு முட்டை புற்றுநோய் மீண்டும் வர காரணம்?
வயிற்றின் உள்ளே, 200 மில்லி திரவம் நிரந்தரமாக இருக்கும். திரவம் செல்லும் இடங்களில் எல்லாம், செல்கள் பரவ வாய்ப்புகள் அதிகம். முதலில் பார்க்கும் போது, கருக்குழாய் மற்றும் கரு முட்டையில் மட்டுமே இருப்பாகத் தான் தெரியும். பாதித்த பெண்களில், 50 சதவீதத்தினர், புற்றுநோய் முற்றிய நிலையிலேயே வருகின்றனர். அதற்குத் தான், பிரத்யேக ஹைபெக்தெரபி தரப்படுகிறது.
டாக்டர் ராஜா சுந்தரம்
கேன்சர் அறுவை சிகிச்சை மருத்துவர்,
குளோபல் ஹெல்த் சிட்டி,
சென்னை
98400 76834
98410 14445
