PUBLISHED ON : ஜூலை 24, 2016

நேர்மறை எண்ணங்களை கொண்ட எலுமிச்சை பழத்தில், ஏராளமான சக்திகள் உள்ளன. பெரியவர்களை சந்திக்க செல்லும் போது, எலுமிச்சை பழத்தை கொடுத்து ஆசி பெறுவது, இன்னமும் வழக்கத்தில் உள்ளது. பூஜை பொருட்களில், நிச்சய இடம், எலுமிச்சைக்கு உண்டு.
புதிதாக குடியேறும் வீடு மற்றும் திறக்கப்படும் நிறுவனங்களின் வாசலில், கட்டாயம் எலுமிச்சம் பழம் இருக்கும். வீட்டுக்கு, திடீர் விருந்தாளிகள் வரும் போது, அவர்களுக்கு குடிக்க கொடுக்க, ஒன்றுமே இல்லை எனும் போது, ஒற்றை எலுமிச்சை பழம், இதை நிவர்த்தி செய்து விடும். விருந்தினர்களையும் சிறப்பாக உபசரித்த நிம்மதி கிடைக்கும்.
பழத்தின் நிறம், மணம், சுவை, எல்லோரையும் கவர்ந்த ஒன்று. பெக்டின் என்ற நார் சத்து, பசியைக் கட்டுப்படுத்துவதால், குறைவாக சாப்பிடும் போது, உடல் எடை தானாக குறைந்து விடும். இதில் உள்ள அமிலமானது, கொழுப்புகளை கரைத்து, உடலுக்கு தோதான வடிவத்தை கொடுக்கும். செரிமானப் பிரச்னை, வாயுப் பிரச்னை உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால், சரிசெய்து விடலாம்; ஓமத்தையும் கலந்து குடித்தால், வயிற்று தொந்தரவு, அவ்வளவு சீக்கிரம் நெருங்காது.
காலையில், இளஞ்சூடான நீரில், சாறு பருகினால், மலச்சிக்கல் தொந்தரவு நீங்கி, உடல் புத்துணர்வு பெறும். தொற்று நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் வல்லமை படைத்தது. உடலில், காற்றை சீராக்கி இயக்கும் தன்மை உண்டு. இதயம், நுரையீரல் போன்றவை நன்றாக இயங்கும். மலை ஏற செல்பவர்கள், இதன் சாற்றை நீரில் கலந்து குடித்தால், ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் களைப்பு நீங்கும். ரத்த ஓட்டத்தை சீராக்குவதால், அதிக ரத்த அழுத்தம் மற்றும் இதய படபடப்பை நீக்கும் சக்தி கொண்டது.
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும். பெண்கள், போதியளவு எடுத்துக் கொண்டால், இதிலிருக்கும் கார்சினோஜென் பெருங்குடல், புரோஸ்ட்ரேட் அல்லது மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.
உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, பொலிவற்று இருக்கும் சருமத்தையும் பொலிவாக்கும். பொடுகுத் தொல்லை மற்றும் இதர கூந்தல் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள் பயன்படுத்தினால், இதன் சாறு, நிவாரணம் தரும். வைட்டமின் சி அதிகம் இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை, பல மடங்கு அதிகரிக்கிறது. இதிலுள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது. சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை பெருக்குகிறது.
உடலில், அல்கலைன் மற்றும் அமிலப் பண்புகளுக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்துவதில், எலுமிச்சை, முக்கிய பங்கு வகிக்கிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள், உடல் நலக்குறைவை தகர்த்து, ஆரோக்கியத்துக்கு வித்திடுகிறது. எலுமிச்சை சாறை தொடர்ந்து அருந்தி வந்தால், மற்ற பானங்களுக்கு, விரைவில் விடை கொடுத்து விடலாம். கோடை, குளிர், மழை என, எக்காலத்திலும் இதை பயன்படுத்தலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த பழம், சோப்பு உட்பட அனைத்து பொருட்களிலும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
