PUBLISHED ON : ஜூலை 24, 2016
ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிப்பவரா நீங்கள்...? அப்படியானால் இன்று முதல் கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்ப்பதை வழக்கமாக்கலாம்.
கைக்குத்தல் அரிசி, ஊட்டச்சத்து நிறைந்த முக்கிய உணவாகும். வெள்ளை அரிசியைக்காட்டிலும் கைக்குத்தல் அரிசி, அதிக பலன்களை கொண்டது. கைக்குத்தல் அரிசியை அதன் உமியை நீக்கி பதப்படுத்துவார்கள். வெள்ளை அரிசியில் நீக்கப்படும், பலவாரியான தோல் நீக்கத்தால், அதிக அளவில் ஊட்டச்சத்து குறைவு ஏற்படுகிறது.
கைக்குத்தல் அரிசியில், ஊட்டச்சத்து நீங்கி விடும் வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கும். கைக்குத்தல் அரிசியானது, நார்ச்சத்தை தக்க வைப்பதால் நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்க உதவும். உடல் எடையை குறைக்க உதவும் உணவு வகைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. நார்ச்சத்து நிறைந்துள்ளதால், கைக்குத்தல் அரிசியை ஜீரணிக்க அதிக சக்தி தேவைப்படும்.
மங்கனீசு சத்து: ஒரு கப் கைக்குத்தல் அரிசியில், நமக்கு ஒரு நாளில் தேவைப்படும், 80 சதவீத மாங்கனீஸ் தி உள்ளது. மாங்கனீஸ், நாம் உட்கொள்ளும் கார்போஹைட்ரேட்டில் இருந்து சக்தியை பெற்று, நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை தொகுத்து, கட்டுப்படுத்த உதவுகிறது.
உடல் எடை குறைப்பு: கைக்குத்தல் அரிசியின் முக்கிய பலன், அதில் உள்ள எடைகுறைக்கும் தன்மைதான். அதில் நிறைந்துள்ள நார்ச்சத்து, நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்கிறது. இது மட்டுமல்லாது நார்ச்சத்து, பசியை நீண்ட நேரம் வரை தக்க வைத்து, அதிக உணவு உட்கொள்ளுவதை தவிர்க்க உதவும்.
எண்ணெய் வகை: கைக்குத்தல் அரிசியில், நமது உடலுக்கு தேவையான இயற்கை எண்ணெய் அதிக அளவில் உள்ளது. இதில் நல்ல கொழுப்புச்சத்து உள்ளது.
இதயத்துக்கு நல்லது: கைக்குத்தல் அரிசியின் பதப்படுத்தலில், அதன் மேல்தோல் மட்டுமே நீக்கப்படுவதால், அதன் தன்மை குறையாமல் முழுதானியமாக இருக்கிறது. இதனால் இதய நோய்கள் வராமல் தடுப்பது மற்றும் அதிக ரத்தக்கொழுப்பை கட்டுப்படுத்தும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்: கைக்குத்தல் அரிசியில், அதிக ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன.
சர்க்கரை நோய்க்கு தீர்வு: கைக்குத்தல் அரிசியில் நிறைந்துள்ள மெக்னீஷியம், உடலில் குளூக்கோஸ், இன்சுலின் சுரக்கும் நொதிகள் போன்ற, 300க்கும் மேலான நொதிகள் உருவாக்க உதவுகிறது. பதப்படுத்தப்பட்ட அரிசி, தானியங்கள் தரும், கார்போஹைட்ரேட்டுகளை காட்டிலும், கைக்குத்தல் அரிசியில் நிறைந்துள்ள கார்போஹைட்ரேட்டுகள், உடலுக்கு மிகவும் நல்லது.
எலும்புகளுக்கு பலம்: கைக்குத்தல் அரிசியில், மெக்னீஷியம் நிறைந்துள்ளதால், நரம்புகளையும் சதைகளையும் சீராக்கவும், கால்சியம் தன்மையை சமன்
செய்யவும் உதவுகிறது. மெக்னீஷியம் மற்றும் கால்சியம், நமது எலும்புகளுக்கு இன்றியமையாதது.
குழந்தைகளின் உணவு: கைக்குத்தல் அரிசியில் இயற்கை சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், இது குழந்தைகளுக்கு சிறந்த உணவாக இருக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு, அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவு தேவைப்படும். கைக்குத்தல் அரிசியானது, குழந்தைகளிடையே ஆஸ்துமா நோயை, 50 சதவீதம் வரை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
