
பாமியான், ஆப்கானிஸ்தான் நாட்டின் பாமியான் மாகாணத்தின் நிர்வாகத் தலைமியிடமும், பண்டைய நகரமும் ஆகும். இந்நகரம் இந்து குஷ் மலையில் 2,550 மீட்டர் உயரத்தில் உள்ளது. பாமியான் நகரம் 3,539 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. பாமியான் நகரம், தேசியத் தலைநகரான காபூலுக்கு வடமேற்கே 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
பாமியன் மலைகளில் உள்ள புகழ்பெற்ற பண்டைய உயர்ந்த புத்தர் சிலைகள் பாமியான் நகரத்தை நோக்கி அமைந்தவை.
கிமு இரண்டாம் நூற்றாண்டில் பாமியான் நகரம், இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்கில் பௌத்த சமயத்திற்கும், வணிகத்திற்கும் மையமாக விளங்கியது. கிழக்கையும், மேற்கையும் இணைக்கும் மையப் புள்ளியாக பாமியான் நகரம் இருந்தது. பாமியான் நகரக் கட்டிடக் கலையில் கிரேக்க, துருக்கிய, பாரசீக, சீன மற்றும் இந்தியாவின் தாக்கம் அதிகம் கொண்டது.
பாமியான் சமவெளி ஆப்கானிஸ்தானின் சுற்றுலா மையங்களில் ஒன்றாகும்.
யுனெஸ்கோவின் கைவினை மற்றும் நாட்டுப்புற கலை படைப்பு நகரங்களின் வலைப்பின்னலில் உள்ள 74 நகரங்களில் ஒன்றாக பாமியான் நகரம் (கைவினை மற்றும் நாட்டுப்புற கலை) 2017-இல் சேர்க்கப்பட்டுள்ளது. பண்டைய பட்டுப் பாதையில் அமைந்த பாமியான் நகரம், சீனாவையும், பண்டைய அண்மை கிழக்கு பகுதிகளையும் இணைக்கும் பாதையாக இருந்தது. கிபி ஐந்தாம் நூற்றாண்டில் ஹூணர்களின் தலைநகரமாக பாமியான் விளங்கியது. 1221-இல் செங்கிஸ் கான் பாமியான் நகரத்தை தீக்கிரையாக்கினார். பாமியான் நகரத்தின் வெளிப்புறத்தில் சியா இசுலாமியத்தைப் பின்பற்றும் 6.5 இலட்சம் கசாரா மக்கள் வாழ்கின்றனர்.
பாமியான் சமவெளி இந்து குஷ் மலைத்தொடருக்கும், கோகி பாபா மலைத்தொடருக்கும் இடையே அமைந்த பாமியான் சமவெளியில் பாமியான் நகரம் உள்ளது.
சிறிய பாமியான் நகரத்தின் மையத்தின் கடைவீதிகள் உள்ளது. இந்நகரத்தில் சமையல் எரிவாயு, மின்சாரம், குடிநீர் போன்ற வசதிகள் உள்ளாட்சி நிர்வாகம் செய்து தரவில்லை. இந்நகரத்தில் ஒரு சிறிய வானூர்தி நிலையம் உள்ளது.
பாமியான் நகரத்தைச் சுற்றி இந்து குஷ் மற்றும் கோகி பாபா மலைத்தொடர்கள் சுற்றியிருப்பதால், இந்நகரத்தின் தட்பவெப்பம் குளிர்காலத்தில் ஆறு மாதம் நீண்ட குளிரையும், கோடையில் ஆறு மாதம் நீண்ட வெப்பமும் கொண்டுள்ளது. பாமியான் நகரத்தின் முக்கிய வேளாண் பயிர்கள் கோதுமை, பார்லி ஆகும். பாமியான் நகரத்தில் ஒரு வானூர்தி நிலையம் உள்ளது.
கி.மு 30 தொடக்கம் கி.பி 375 வரை குசானப் பேரரசின் ஒரு பகுதியாக பாமியான் நகரம் விளங்கியது. பின்னர் குசானர்களை வீழ்த்திய சாசானியப் பேரரசின் கீழ் இருந்த குசான்ஷா சிற்றரசின் ஒரு பகுதியாக விளங்கியது. கிபி ஐந்தாம் நூற்றாண்டில் சீனா பௌத்த அறிஞர் பாகியான் பாமியான் நகரத்திற்கு வருகை புரிந்தார். கிபி ஏழாம் நூற்றாண்டில் மற்றொரு சீன பௌத்த அறிஞரான யுவான் சுவாங் பாமியான் நகரத்திற்கு வருகை புரிந்தார்.
கிபி ஐந்தாம் நூற்றாண்டில் ஹெப்தலைட்டுகள் பாமியான் நகரத்தைக் கைப்பற்றினர். கிபி 565-இல் சாசானியர்களும், துருக்கியர்களும் ஹெப்தலைட்டுகளை வென்று மீண்டும் பாமியான் நகரத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கிபி 870 வரை பாமியான் நகரம் குசான - ஹெப்தலைட்டுகளின் இராச்சியத்தின் கீழ் இருந்தது. கிபி 870-இல் பாரசீக சன்னி இசுலாமிய சபாரித்துப் பேரரசின் கீழ் சென்ற பாமியான் நகரத்தை, கிபி 11-ஆம் நூற்றாண்டில் கசானவித்துப் பேரரசின் கீழ் சென்றது.
கிபி பனிரெண்டாம் நூற்றாண்டில் கோரி அரச மரபின் கீழ் பாமியான் நகரம் இருந்தது. 1221-இல் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ் கான் பாமியான் நகரத்தை கைப்பற்றி அழித்தார். கிபி 14-ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தைமூர் நிறுவிய தைமூரிய வம்சத்தினர் பாமியான் நகரத்தை ஆண்டனர். 1840-இல் முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போரின் போது பாமியான் நகரத்தின் வாழ்க்கை மிகவும் சிக்கலாக இருந்தது. 1998- - 2001- ஆம் ஆண்டுகளில் பாமியான் நகரம் தாலிபான் தீவிரவாதிகளின் மையமாக விளங்கியது.
பாமியான் மலைகளில் குசான் பேரரசு காலத்தில் நிறுவப்பட்டிருந்த தொன்மையானதும், உலகின் உயரமானதுமான புத்தர் சிலைகளை மார்ச், 2001-இல் தாலிபான்கள் வெடிகள் வைத்து தகர்த்தனர்.
பாமியான் நகரத்தின் தட்பவெப்பம் குளிர் காலத்தில் நீண்ட இரவும், கோடையில் நீண்ட பகலும் கொண்டுள்ளது.
Advertisement

