/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தாரில் பாரதி மன்றம், சமன்வயத்தின் பொங்கல் திருவிழா
/
கத்தாரில் பாரதி மன்றம், சமன்வயத்தின் பொங்கல் திருவிழா
கத்தாரில் பாரதி மன்றம், சமன்வயத்தின் பொங்கல் திருவிழா
கத்தாரில் பாரதி மன்றம், சமன்வயத்தின் பொங்கல் திருவிழா
பிப் 09, 2025

தோஹா: கத்தாரில் தமிழ் மொழிக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும், தமிழர் கலாச்சாரத்தின் மேன்மையை இயல்பாக இனிதாகப் பறைசாற்றவும் இரண்டாயிரமாவது ஆண்டுகளின் ஆரம்பத்திலிருந்தே இயங்கி வரும் பாரம்பரிய பெருமை கொண்ட தமிழ் அமைப்பு 'பாரதி மன்றம்', அதன் இணை அமைப்பாக இயங்கிவருகிறது சமன்வயம்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை கொண்டாடி வரும் பாரதி மன்றம் இந்த வருடத்தின் பொங்கல் விழாவை வெகு அமர்க்களமாகக் கொண்டாடியது.
இந்த அற்புதமான கலாச்சார விழாவில் பல்வேறு வகைகளில், பலப்பல சுவைகளில், 12 நிகழ்ச்சிகளை வழங்கியது பாரதி மன்றம். இதனால் தமிழர்களின் படைப்பாற்றல், தனித்திறமை, கலைத்திறன் ஆகியவை வெளிவந்தது மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கு பிற மொழிபேசும் சமூகத்துடன் நட்புறவு பாராட்டவும் வழிசெய்தது.
கிட்டத்தட்ட 102 கலைஞர்களின் பங்களிப்பால் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே களைகட்டியது, கலைப்பூக்களை சரமாக தொடுப்பது போல தொகுப்பாளர்களான அபிநயா மாறன் மற்றும் கணேஷ் ராஜமூர்த்தி நிகழ்ச்சியை வெகு நேர்த்தியாக தொகுத்து கடைசிவரை சுவாரஸ்யத்தை தக்க வைத்தனர்.
ஜஹய் & கர்நாடிக் நட்சத்திரங்கள் குழுவினனரின் சிறப்பான கர்நாடக சங்கீத கச்சேரியில் தொடங்கிய பொங்கல் விழா, விநாயக் மித்ரா அணியின் கண்கவர் நாட்டியம், இல்லத்தரசிகள் அற்புதமாக படைத்த சுதந்திர பெண்கள் நடனம், மெய்சிலிர்க்க வைத்த பரதக்கலையின் மோகன தாண்டவம், 'கிராமத்தில் ஒரு நாள்' என்று ஒயிலாட்டம் முதல் கரகாட்டம் வரை மண்மணம் மாறாத நாட்டுப்புற நடனம் என்று நாட்டியப் பெருவிழாவாக உருமாறியது. அவ்வாறே யாழினி லிட்டில் ராக்கர்ஸின் சுட்டிகளின் சூப்பர் ஆட்டம், வருத்தப்படாத இளம் சிறகுகளின் சங்கமம் என யுவதிகளின் இளமை நாட்டியம், கத்தார் தமிழர் மகிழவரங்கம் டான்ஸ் குழு மற்றும் வி.எஸ்.கே. குழு வழங்கிய துள்ளிசை ஆட்டம், கேரள சமன்வயம் பெருமையுடன் படைத்த கேரள பாரம்பரிய நடனம் என நடனப்பொங்கலாக காட்சியளித்தது.
இந்தியத் திருவிழாக்களின் பயணம் என்கிற கருப்பொருளில் அனைத்து மாநிலங்களின் பிராந்திய நடனங்களை ஒவ்வொன்றாக அரங்கத்தில் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக பெண்கள் அணி ஆடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
பாரதி மன்றத்தின் இந்த பொங்கல் விழாவில் ரஜினிகாந்தின் ஐம்பதாவது ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, நடன பயிற்சியாளர் முத்துலக்ஷ்மியின் வடிவமைப்பில் 'சூப்பர்ஸ்டார் ஸ்குவாட்- குழுவினர் ரஜினிகாந்துக்கு மரியாதை' என்கிற தலைப்பில் 80-,90 களில் வெளியான ரஜினியின் திரைப்படப் பாடல்களில் தொடங்கி இனி வரவிருக்கும் கூலி படத்தின் 'சிக்குட்டு சிக்கா...' பாடல் வரை சுமார் 12 கதம்ப பாடல்களுக்கு சிறுவர் சிறுமியர் அட்டகாசமாக ரஜினி ஸ்டைலில் ஆடி மகிழ்விக்க மொத்த அரங்கமே அதிர்ந்து ஆர்ப்பரித்து ஆட்டம் போட்டது.
நமது பாரம்பரிய கிராமிய நடனமான கரகாட்டத்தை வழங்கிய கலைஞர் விஜய் ஆனந்த், கரகத்தை தலையில் சுமந்து மரவுருளை மீது பலகை, அதன் மீது கரகாட்டம், பிறகு கண்ணாடி குடுவைகளை இரண்டடுக்காக அடுக்கி அதன் மீது பலகையிட்டு அதில் ஆடியக் கரகம் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. மேலும் இப்படி ஒரு கலைவித்தகர், சகல வித்தைகளோடு கரகத்தை ஆடும் கலைஞர் கத்தாரில் இருக்கிறாரா என ஆச்சரியப்பட்டு அவரை கொண்டாடி மகிழ்ந்தனர்..
இந்தப் பொங்கல் விழாவுக்கு முதன்மை விருந்தினராக கத்தாருக்கான இந்தியத் தூதர் விபுல் வந்திருந்து பல்வேறு மாநிலங்களில் அதே நாளில் கொண்டாடப்படும் விழாக்களை குறிப்பிட்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
கௌரவ விருந்தினர்களாக வந்திருந்து ஐ.சி.சி தலைவர் மணிகண்டன், ஐ.சி.சி பொதுச் செயலாளர் மற்றும் பாரதி மன்ற நிறுவனச் செயலாளர் மோகன்குமார், சமன்வயம் தலைவர் ரவீந்திர பிரசாத், பாரதி மன்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா அயோத்திராமன, விஜு மற்றும் பாரதி மன்ற கலாச்சார ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக் கடப்பா மற்றும் மாறன் சிதம்பரம ஆகியோர் தங்களது சிறப்புரையைத் தந்து, தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தனர். பாரதி மன்ற இணை ஒருங்கிணைப்பாளர் ராம் பிரசாத் நன்றியுரை வழங்கினார்.
பொங்கல் விழாவுக்கு வருகைபுரிந்த அனைத்து தமிழ் மக்களுக்கும் பாரதி மன்றம் விருந்தோம்பல் செய்யும் வகையில் கத்தாரில் பிரபலமான சைவ உணவகமான ஒன்லி காஃபி உணவத்தின் சுவையான உணவை, சர்க்கரைப்பொங்கலோடு விருந்தாக படைத்து மகிழ்வித்தது.
நிகழ்வில் பங்குபெற்ற கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் பாரதி மன்றம் சார்பில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
கத்தாரில் கடல் கடந்து வாழும் தமிழ் மக்களுக்காக எத்தனையோ அமைப்புகள் பொங்கல் விழா எடுத்தாலும் பாரதி மன்றம் சமன்வயத்தின் பொங்கல் விழா என்பது தனித்துவமானது என்றும், இது வேற லெவல் கொண்டாட்டம் என்றும் தமிழ் மக்கள் சொல்லி மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
- நமது செய்தியாளர் எஸ் . சிவ சங்கர்
Advertisement