/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கீழக்கரை சமூக சேவகருக்கு இந்திய தூதரகம் பாராட்டு
/
கீழக்கரை சமூக சேவகருக்கு இந்திய தூதரகம் பாராட்டு
ஆக 16, 2025

அபுதாபி : அபுதாபி, அல் அய்ன் உள்ளிட்ட பகுதிகள் இந்திய சமூகத்தினருக்காக பல்வேறு சமூக பணிகளில் அல் அய்ன் இந்திய சமூக மையத்தின் முன்னாள் தலைவர் கீழக்கரை முபாரக் செய்கு முஸ்தபா ஈடுபட்டு வருகிறார். இவருக்கு இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தின் போது அபுதாபி இந்திய தூதரகத்தில் நடந்த விழாவில் தூதர் சஞ்சய் சுதிர் பாராட்டுச் சான்றிதழை வழங்கி கவுரவித்தார்.
வழிகாட்டுதல்
இந்திய தூதரகத்தின் ஆதரவுடன் வீட்டு வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக அமீரகத்துக்கு வரும் பெண்களை பத்திரமாக தங்க வைத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பது, அமீரகத்துக்கு விசிட் விசாவில் வந்து எதிர்பாராதவிதமாக மரணமடைபவர்களுக்கு அல் அய்ன் பகுதியில் நல்லடக்கம் செய்ய அனுமதி பெற்றுத் தருவது, தொழிலாளர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளில் முபாரக் செய்கு முஸ்தபா ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக அல் அய்ன் இந்திய சமூக மையத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட போது அவரே முதல் தமிழர் என்ற பெருமையை பெற்றார். அவரது பதவிக் காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் முன்னிலை வகித்தார்.
இதுகுறித்து கீழை கம்யூனிட்டி சென்டரின் முஹம்மது ராஷிக் கூறியதாவது : முபாரக் முஸ்தபா அவர்களின் சமூகப் பணிகள் தன்னலமற்றது. அவர் இத்தகைய கவுரவத்துக்கு பொறுத்தமானவர். தொடர்ந்து அவருக்கு இன்னும் பல விருதுகள் கிடைக்க வேண்டும் என்றார்.
இதுபோல் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
--- நமது செய்தியாளர், காஹிலா.
Advertisement