
சிங்கப்பூர் கவிமாலை ஏற்பாட்டில் சிங்கப்பூர், மலேசியா கவிதை ஆய்வரங்கம் மலேசிய இயல் எழுத்தாளர் மன்றத்துடன் இணைந்து அக்டோபர் 11 சனிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் இரவு 7 மணி வரை சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பன்மொழி கவிதைச் சூழலின் வளர்ச்சி, புலம்பெயர் அடையாளங்கள் மற்றும் சம காலக் கவிதை விமர்சனங்கள் பற்றி பல்வேறு கோணங்களில் ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டன. நன்யாங் தொழில் நுட்ப பல்கலைக் கழக மேனாள் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் தலைமைப் பொறுப்பேற்றார்.
முதல் அமர்வில் சிங்கப்பூரின் சம காலக் கவிதைகள் என்ற தலைப்பில் கவிஞர்கள் கணேஷ்பாபு, இன்பா, அஷ்ரஃப், ரஜீத், சர்வான் ஆகியோர் தங்கள் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். அமர்வை முனைவர் சித்ரா சங்கரன் வழிநடத்தினார். இளம் படைப்பாளர்கள் எதிர் கொள்ளும் சவால்கள், கவிதை விமர்சன மரபின் நிலை மற்றும் மலேசியக் கவிதை வளர்ச்சியில் இதழ்களின் பங்கு போன்ற தலைப்புகளில் இரண்டாவது அமர்வில் முனைவர் உதயகுமாரன் கந்தசாமி - பூங்குழலி வீரன், காந்தி முருகன், சாந்தா காளியப்பன், மகேந்திரன் நவமணி ஆகியோர் பங்கேற்றனர்.
மூன்றாவது அமர்வில் உஷா சுப்புசாமி, லலிதா சுந்தர், அழகுநிலா, வி.தேன்மொழி ஆகியோர் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினர். நான்காவது அமர்வில் மலேசிய சிங்கப்பூர் கவிதைகளின் ஒப்பீடு, மலாய், தமிழ் இறையியல் கோட்பாடுகள், தமிழ்க் கவிதை விமர்சன மரபின் வளர்ச்சி ஆகியவை முன் வைக்கப்பட்டன. இந்த அமர்வில் மதியழகன் கோவிந்தசாமி, திவ்யா பன்னீர்செல்வம், தமிழமுதன் ஆறுமுகம், பிரியங்கா வடிவேல், சத்தியமலர் பரமசிவன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வின் நிறைவில் எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் கருத்துரை ஆற்றினார். கவிமாலை நிறுவனர் பிச்சினிக்காடு இளங்கோ நிறைவுரை ஆற்றினார்.மகா கவி பாரதியாரின் “ நல்லதோர் வீணை செய்து “ என்ற பாடல் நடன நிகழ்வு அரங்கேற்றம் கண்டது. மலேசிய மாநில சிகாமாட் நாடாளு மன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் மற்றும் சிங்கப்பூர் மேனாள் நியமன நாடாளு மன்ற உறுப்பினர் இரா.தினகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு “ விண்மீன் பிடித் தீவு ( கவிதைத் தொகுப்பு ) மற்றும் “ அலைகளின் உள் மொழி “ நூல்களை வெளியிட்டனர்.
மலேசிய இயல் எழுத்தாளர் மன்றத் தலைவர் பொன் கோகிலம் தமது நன்றியுரையில் இளைய தலைமுறையினரிடையே கவிதை சார்ந்த செயல்களை ஊக்குவிக்கும் ஒரு முதல் கட்ட முயற்சியாக இவ்வாய்வரங்கம் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.ஹரிவர்த்தினி மற்றும் கவிஞர் தீபக் இணைந்து நிகழ்வைத் தொகுத்து வழங்கினர்.முன்னதாக சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் தலைவர் கவிஞர் இன்பா வரவேற்புரை நிகழ்த்தினார்..
- சிங்கப்பூரிலிருந்து நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement

