/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
அமெரிக்காவில் ஆடி கூழ் திருவிழா
/
அமெரிக்காவில் ஆடி கூழ் திருவிழா

டெக்சாஸ் மாகாணத்தின் குயின்வான் பகுதியில் கட்டப்படவிருக்கும் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அறிவிப்பு மற்றும் நிதி திரட்டும் நிகழ்ச்சி, 'ஆடி மாதக் கூழ் திருவிழா” வுடன் ஆகஸ்ட் 4, 2024 அன்று டல்லாஸ் நகரில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. திருவிழா என்றாலே குதூகலம் தானே!!
டல்லாஸில் நடந்த திருவிழாவில் கலந்து கொள்ள முடியாதவர்கள்இக்கட்டுரையின் முலம் அந்த அனுபவத்தைப் பெற ஒரு சிறிய முயற்சி.
காரிலிருந்து இறங்கி நடந்த போது பட்டு பாவாடையில் ஜொலித்த குழந்தை நம்மை நோக்கி ஒரு மெல்லிய புன்னகை செய்தது. தன் தாயின் கையைப் பிடித்தபடி நம்மை ஒரக்கண்ணால் வெட்கப் பார்வை பார்த்து கொண்டு நடந்து செல்வதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. நுழைவாயிலில் கட்டப்பட்டிருந்த தென்னந் தோரணங்களும் வேப்பிலை தோரணமும் கண்டிராத குழ்ந்தை, “நான் இதைப் பார்த்ததே இல்லையே!! இது என்னங்க அம்மா?” என்று கேட்ட குழந்தையிடம் நம்ம ஊர்ல பெஸ்டிவல் (திருவிழா) சமயங்களில் தெருக்கள் மற்றும் கோவிலில் இந்தத் தோரணங்கள் கண்டிப்பாக கட்டி இருப்பார்கள். அந்த பீல் (உணர்வு) இங்கயும் கொண்டு வர சென்னையில் இருந்து இதெல்லாம் வரவழைச்சு அசத்திருக்காங்க!!, இல்லைங்க”, என்று தன் கணவனைப் பார்த்து சொன்னவர், நாம் அவர்கள் பேசுவதை கேட்பது சுவனித்து மரியாதைக்கு சிரித்து வைத்தார். நாமும் பதிலுக்கு புன்னகைத்து விட்டு நம்மை வரவேற்ற தன்னார்வல நண்பர்களுக்கு ஒரு வணக்கத்தைப் போட்டோம்.
வரிசையில் நின்று கொண்டிருந்த நமக்கு மல்லிகைப்பூ மணமும் ஜவ்வாது மணமும் அவ்வப்போது நாசியை வருடிச் சென்றது. அனைவருக்கும் பிரசாதம் கிடைக்க மிகவும் நேர்த்தியாக பார்கோடுகளை சரி பார்த்து சீட்டு வழங்கிக் கொண்டிருந்த சிறார்களை காண மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இரு பக்கமும் மயிலுடன் அமர்ந்திருந்த பிள்ளையாரை வணங்கி விட்டு உள்ளே சென்றோம். உள்ளே நுழையும் போதே வீசிய பக்தி மணம் நமது மண் வாசனையை ஞாபகப்படுத்தியது மட்டுமல்லாமல் நுழைந்தவுடன் வெயிலுக்கு மிக இதமாக தாகம் தீர்க்க அவர்கள் ஏற்பாடு செய்திருந்த மோர் மற்றும் பானகம் வழங்கியது நிகழ்ச்சியின் முதல் சிறப்பு!!.
தத்ரூபமாக வரையப்பட்ட அம்மன், கம்பீரமாக வடிவமைக்கப்பட்ட கருப்பசாமி, பின்னணியில் அமைக்கப்பட்டிருந்த பூ அலங்காரம், அம்மனுக்கு சாத்தப்பட்டிருந்த வேப்பிலை மாலை, எலுமிச்சை மாலை மற்றும் கண்ணாடி வளையல் மாலை அனைத்தும் நமக்கு ஆலயத்தில் இருக்கும் உணர்வைக் கொடுத்தது.
அம்மனை தரிசித்து மஞ்சள் குங்குமம் பெற்றுத் திரும்பும்போதே, கூழ் அங்கே கொடுத்திட்டு இருக்காங்க போய் சாப்பிடுங்க, என இன்முகத்துடன் ஒரு தன்னார்வலர் நம்மிடம் கூறினார். குடும்பத்துடன் வரிசையில் நின்ற எங்களிடம் ஒரு தன்னார்வலர் வந்து, 'இந்த வரிசை சைவத்திற்கானது , நீங்கள் அசைவப் பிரியர் என்றால் அங்கே செல்லுங்கள்' என்று கூறினார். சைவ பிரியர்களுக்கு கூழோடு மொச்சைக்கொட்டை குழம்பும் அசைவப்பிரியர்களுக்கு கூழோடு கருவாட்டுக்குழம்பும் அதனுடன் மாங்காய் ஊறுகாய், ஆடி நொய்க் கஞ்சி என ஏற்பாடு செய்திருந்தார்கள். நண்பர்களோடு சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நமது சிறு வயதில் உற்றார் உறவினர்களுடன் திருவிழா சென்ற நாட்கள் மனதில் மின்னலாய் தோன்றி மறைந்தது.
அம்மன் பாடல்களுடன் துவங்கிய கலை நிகழ்ச்சி, திருவிழாக்காலங்களில் தேரு ஒலிபெருக்கி மூலம் நாம் சிறு வயதில் கேட்டு மகிழ்ந்த அனுபவத்தை மீண்டும் தந்தது. சில கால்கள் தாளம் போட்டுக் கொண்டிருக்க, சில தலைகள் தன்னை மறந்து ஆடிக்கொண்டிருக்க, குழந்தைகள் ஓடி விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்த போது நமக்கு ஒரு புத்துணர்வு தொற்றிக்கொண்டது. மாறுவேட நிகழ்ச்சியில் பல கடவுள்கள் நம் கண் முன்னே அவதாரம் எடுத்து குழந்தைகளின் ரூபத்தில் நம்மை பெருமகிழ்ச்சி அடைய வைத்தனர். பெண்களின் கும்மி ஆட்டம், சிலம்பாட்டம் ,பறை மற்றும் பல கலை நிகழ்ச்சிகள் நம்மை மறந்து ரசிக்க வைத்தது.
கடைகள் இல்லாத திருவிழா களை கட்டுமோ? நிகழ்ச்சிக்கு மெருகு சேர்க்கும் விதமாக அரங்கத்தின் ஒரு பகுதியில் மணக்க மணக்க உணவு, மற்றொரு பகுதியில் வானவில்லை பூமிக்கு எடுத்து வந்தாற்போல் ஆடைகள், விதவிதமான கண்கவர் ஆபரணங்களும், சலசலக்கும் வளையல்களும் நமது ஊர்த் திருவிழாவின் கடைத் தெருவிற்கு நம்மைக் கூட்டிச் சென்றது. 'ஏங்க....இங்க பார்த்தீங்களா 'ஆட்டுக்கல்லும் அம்மிக்கல்லும்” என்ற மனைவியின் குரலுக்கு “அதை வாங்கி என்னை அரைக்க விட்டுடாதேமா” என்ற கணவனின் மனக்குரலையும் தாண்டிச் செல்லும்போது , “அங்கே ஒரு அண்ணா கப் கேக், பிரெளனி, குக்கீ எல்லாம் விக்கிறாங்க வந்து வாங்கி கொடுங்க அம்மா” என்று ஒரு சிறுவன் தன் அம்மாவைக் கூப்பிட்டு கொண்டிருந்தான்... “ஏய் இங்க பாரு ஹென்னா (மருதாணி) வா போட்டுக்கலாம் ' என்று தன் தோழியிடம் கூறிக்கொண்டே தனது தாவணியை சரி செய்து கொண்டு சென்ற இளம் பெண்ணின் ஆசை கலந்த ஆச்சரியமும் சந்தோஷமும் அவள் கண்களில் தெரிந்தன.
கோவில் நிர்வாகக் குழுவின் சார்பில் பேசியவர், ஆயிரம் பேர் வருவார்கள் என்று கணித்தபடி அனைவரும் வந்து நிகழ்ச்சியில் பங்கெடுத்தது தங்கள் குழுவிற்கு மிகவும் மனநிறைவும் மகிழ்ச்சியும் அளிப்பதாகத் தெரிவித்தார். டெக்ஸாஸில் மாரியம்மன் கோவில் மட்டுமின்றி குலதெய்வ வழிபாடுகளையும் செய்ய வழிவகுக்கும் வகையில் அமையவிருக்கும் திருக்கோயில் பணித்திட்டங்கள் , குழுவினர் அறிமுகம், கோவிலின் வரைபடம் மற்றும் அடுத்த கட்ட நகர்வு குறித்து விளக்கமளித்தார். கூழ் மற்றும் அனைத்து பிரசாதங்கள் வழங்கியவர்களுக்கு, கோவில் திருப்பணிக்கு இதுவரை தங்களால் முடிந்த உதவிகளை செய்த நல்லுள்ளங்களுக்கு நன்றி தெரிவித்து தன் உரையை முடித்தார்.
மாலை ஜந்து மணி அளவில் சமயபுரம் மாரியம்மன் சந்நிதியில் இருந்து தருவிக்கப்பட்ட விபூதி, குங்குமம், அம்மன் படம், வளையல் துள்ளு மாவு கொழுக்கட்டை மற்றும் லட்டு அடங்கிய பிரசாதப் பை வழங்கப்பட்டது.
பணி நிமித்தமாக வெளிநாட்டில் வசிக்கும் நாம், நமது குழந்தைகளை திருவிழாக்களுக்கு அழைத்துச் செல்லும் சந்தர்ப்பம் அமைவது மிகவும் அரிது. நமது பிள்ளைகளுக்கு நமது மண்ணின் கலாச்சாரத்தையும் அருமை பெருமையும் காண்பிக்க நமக்கு வாய்ப்பளித்த குழுவிற்கு நன்றி கூறி நிறைந்த மனதுடன் மீண்டும் சந்திப்போம் என விடை பெற்று வந்தோம்.
ஊர் கூடித்தேர் இழுத்தால் தான் தேர் நகரும் என்ற கூற்றுக்கு இணங்க நாம் அனைவரும் இக்குழுவினருக்கு கரம் கொடுத்து தேரை இடம் சேர்க்க உதவுவோம்!!!
என் அனுபவத்தை இக்கட்டுரையின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த கோவில் நிர்வாகக் குழுவினர்க்கு எனது மனமார்ந்த நன்றி- கே.வளர்சுப்பு, பிரிஸ்ககோ டெக்சாஸ்
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
Advertisement