/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் பங்கு கொண்ட பேரவை விழா
/
மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் பங்கு கொண்ட பேரவை விழா
ஜூலை 16, 2025

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க சுதந்திர தின நாளான சூலை 4 ஆம் தேதியை ஒட்டி வரும் நாட்களில், பேரவைத் தமிழ் விழாவை, வட அமெரிக்காவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடத்தி வருகிற்து. இவ்விழாவில் பல்வேறு நாடுகளில் இருந்தும், சிறப்பு விருந்தினர்கள், தமிழ் அறிஞர்கள், இலக்கிய படைப்பாளிகள், திரை நட்சத்திரங்கள் என்று பல்வேறு கலைஞர்கள், பல்வேறு துறைசார்ந்த தொழில் முனைவோர்களும் கலந்து கொள்வார்கள். இங்குள்ள தமிழ்ச் சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களுடன் கலை நிகழ்ச்சிகளிலும், குழந்தைகளுக்கான போட்டிகளிலும் கலந்து கொள்வார்கள்.
38 ஆவது பேரவை விழா
இந்த ஆண்டு, சூலை 3,4,5 தியதிகளில், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையானது வடகரோலினாத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து, பேரவைத் தமிழ் விழாவை, இராலே நகரில் மிகச் சிறப்பாக நடத்தியது. இந்த 38 ஆம் ஆண்டிற்கான பேரவை விழாவில், சுமார் 30 க்கும் அதிகமானவர்கள் மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தில் இருந்து கலந்து கொண்டார்கள்.
மினசோட்டாத் தமிழ்ச் சங்கம், கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை நடத்தும் பேரவை விழா மேடையில் பல கலை நிகழ்ச்சிகளை மேடையேற்றி வருகிறது.
மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் பேரவை விழா மேடையேற்றங்கள்
2013 டொராண்டோ, கனடா - தீரன் சின்னமலை - வில்லுப்பாட்டு , 2014 செயிண்ட் லூயிஸ், மிசெளரி - ”சிலம்பின் கதை” - தெருக்கூத்து, 2015 சான் உசே, கலிஃபோர்னியா - பொய்க்கால் குதிரையாட்டம், 2016 நியூஜெர்சி - கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், 2017 மினியாபோலிஸ், மினசோட்டா - ”மருதநாயகம்” நாடகம், 2019 சிகாகோ இல்லினாய் - ”குரலற்றவர்களின் குரல்” கீழ்வெண்மணி படுகொலைகள் பற்றிய இசை நாடகம், 2023 நியூயார்க் - ”பாரிவள்ளல்” - தெருக்கூத்து, இவையனைத்தும் நேரலையாக பதிவு இல்லாமல் பேசி நடித்த நிகழ்வுகள். பாடல்களும், இசையும் முழுமையாக மினசோட்டாத் தமிழ்ச்சங்கமே உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
நாடகம்
பழந்தமிழ் செவ்வியல் கலைகள் - மரபுக்கலைகளும் செவ்வியலே என்ற தலைப்பில் நாடகமாக மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் மேடையேற்றியது. இந்த நாடக வடிவமானது, முதல் முறையாக தமிழர் ஆடற்கலைகளை ஒப்பீடு செய்து, அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது. இதில் பழந்தமிழர் கலைகளில் ஒன்றான சதிராட்டத்தில் இருந்து தோன்றியது தான் பரதம் என்றும், அதற்கான சான்றுகளுடன் சொல்லப்பட்டிருந்தது.
மேலும் பரத நாட்டியத்தில் பயன்படுத்தப்படும் அடைவுகளுடன், பறை அடைவுகள் எப்படி ஒன்றாக இருக்கிறது என்பதையும் விளக்கிக் காட்டியது. அது மட்டும் அல்லாமல் ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்ட அடைவுகள் எப்படி பறை மற்றும் பரத அடைவுகளுடன் ஒன்றாக இருக்கிறது என்பதை ஒரே மேடையில் ஆடிக் காட்டினர்.
பழந்தமிழர் கலைகள் அனைத்தும் சமமானதே, ஒன்றுக்கொன்று உயர்ந்தது, தாழ்ந்தது என்றில்லாமல் அனைத்தும் போற்றப் படக்கூடியதே என்ற மைக்கருவுடன் நிறைவு பெற்றது. இந்த நாடகமானது அனைவரின் பாராட்டையும் பெற்ற வகையில், இரசித்த அனைவரும் எழுந்து நின்று, நீண்ட நேரம் கைத்தட்டலையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இந்த நாடகத்தில் ஒப்படைவுகள் ஆடிக்காட்டியவர்கள்,
மினசோட்டாவிற்கு வந்திருந்த ஆசான்களான இராசா ஐயா, பாவேந்தன் ஆகியோரிடம் இருந்து கற்றுத் தேர்ந்தவைகளே. இந்த நாடகத்தில் பயன்படுத்தப்பட்ட பறை இசை பத்ம ஸ்ரீ வேலு ஆசான், தவில் தஞ்சாவூர் நாகராஜ் கருப்பையா, நாயனம் இரவிச்சந்திரன், மகுடப்பறை சங்கர்கணேஷ். இந்த நாடக மேடையேற்றத்திற்காக பங்கேற்ற அனைவரும் கடந்த 4 வாரங்களாக கடும் பயிற்சி எடுத்திருந்தனர்.
- தினமலர் வாசகர் சுந்தரமூர்த்தி, இயக்குநர், மின்சோட்டாத் தமிழ்ச்சங்கம்
Advertisement