/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
அரிசோனாவில் அமர்க்களம் செய்த “ஸா….பாட…!” நாடகம்!
/
அரிசோனாவில் அமர்க்களம் செய்த “ஸா….பாட…!” நாடகம்!
மே 02, 2025

“பாலும் தெளிதெனும் பாகும் பருப்பும் கலந்துனக்கு நான் தருவேன்….சங்கத் தமிழ் மூன்றும் நீ எனக்குத் தா!” என்று ஆனைமுகனை வேண்டினாள், ஔவைப் பாட்டி. எனவே, ஆனைமுகன் அருள்பாலிக்கும் அரிசோனாவில் “ஸா… பாட…!” என்ற நாடகம் முத்தமிழ் நிகழ்ச்சியாக நடைபெற்றது வியப்பில்லைதான்! இதை தங்கள் ஐந்தாவது முயற்சிகாகக் 'கூத்தாடி கிரியேஷன்ஸ்' என்ற நற்றமிழ் நாடகக்குழு வியக்கும் விதத்தில் நகைச்சுவை நாடகமாக்கி, ரசிகர்களைச் சிரித்துச் சிந்திக்கவும் வைத்தது.
பத்துப் பதினைந்து பேரைக் கூட்டி, ஒத்திகை பார்த்து நாடகத்தை அரங்கேற்றுவதே பெரும்பாடு. அப்படியிருக்கையில், கார்ப்பொரேட் நிறுவனங்களில் பணியாற்றும் பலர், கல்லூரி, பள்ளியில் படிக்கும் இளைஞர், சிறார்கள் இப்படி 46 பேர்களை ஒன்றிணைத்து, ஒத்திகை பார்ப்பது இருக்கட்டும் -வெள்ளித்திரையில் பார்ப்பது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்தவேண்டி, இடைவெளியே விடாது, காட்சிகளுக்குத் தகுந்தபடி பின்னால் ஒளித்திரையையும், இசையையும், பிண்ணனியையும் அமைத்துதர வேண்டும் என்றால்…!
தொழில்துறை நடிகர்களே மலைக்கும் ஒன்றுதான் இம்முயற்சி! இதை வெற்றிகரமாக நடத்தி, நடித்தும் இயக்கிய பிரகாஷ் சாத்தஞ்சேரியையும், அவருடன் சேர்ந்து இயங்கிய அனைவரையும் நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.
நாடகத்துறையில் தனிப்பெரும் தலைவராக விளங்கிய பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் எழுதிய சங்கீதப் பைத்தியம் என்ற நாடகத்தைத் தழுவி அமைந்ததே இந்த 'ஸா….பாட…!' என்ற நாடகம். இதில் 27 நடிகர்கள், 20 சிறார்கள் நடனம், பாட்டு, வசனம் என்று முத்தமிழ் அமுதத்தையும் ஒருங்கை இரசிகர்களுக்குத் தெவிட்டாத வண்ணம் அளித்தார்கள்.
நாட்டின் தலைவர் சிந்திக்காமல் செயலாக்க முனையும் சட்டதிட்டங்களால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என்பதை நகைச்சுவை கலந்து வழங்கிச் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்கள்.
இதில் குறிசொல்லும் குறத்தியாக வந்த சுதா பாலாஜி தன் தலைசிறந்த நடிப்பு வசனம், நடனம் இவற்றால் நம் நெஞ்சத்தை அள்ளிச் செல்கிறார். நாட்டு மக்கள் அனைவரும் இனி பேசக்கூடாது, சங்கீதப் பாடலாகவே ஒருவருக்கொருவர் உரையாடவேண்டும் என்ற ஆணையிட்ட மன்னனால் விளையும் குழப்பங்களை நிறைவேற்ற அலையும் மூன்று காவலர்களையும், அவர்களிடம் மாட்டித் தவிக்கும் மக்கள், ஆசிரியர், மாணவர்கள், பாட்டு கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் போட்டிபோடும் சரவணனும், சிவா ராஜாராமனும், அவரது மனைவியாக நடித்தவர்களும், சங்கீத அறிவே இல்லாத பாட்டு வாத்தியாரான பிரகாஷும், நமது வயிறு புண்ணாகும் அளவுக்குச் சிரிக்கவைத்தனர்.
பள்ளி ஆசிரியர் வீடு பற்றி எரிகிறது என்பதைப் பாட்டாகச் சொல்லவேண்டும் என்ற வற்புறுத்தலால், அதை குத்துப் பாடலுடன் நடனமாடிய கணேஷ் கிருஷ்ணமூர்த்தியும், அவருடன் சேர்ந்து ஆடிய -- அங்கு பயிலும் அத்தனை குழந்தைகளும் நம்மைச் சிரிக்கவைத்து மகிழ்வித்தனர்.
மன்னன் அரசவையில் அவர் வரும்முன்னே அவரைப் பற்றிக் குறைகூறிப் பாடி, அவர் வந்தபின், புகழ்ந்து பாடும் அமைச்சராக நடித்த ஸ்ரீபாஸ்கர் மகாதேவன் தன் இனிய குரலில் பாடித் தன் இசைஞானத்தை வெளிப்படுத்தினார். நாடகத்துக்கு இசையமைத்து, பிண்ணனி இசையும் பிறழாது கொடுத்து, பேட்டை ரவுடியாகக், “கொளுத்திவிடுவேன்!” என்று கொக்கரித்த தினேஷ் சுரேஷின் திறமை பாராட்டத் தக்கது.
அதுபோல, துடைப்பம் விற்கவந்து, பாடித்தான் விற்கவேண்டும் என்ற கட்டாயத்தால் குழு நடனம் ஆடும் அத்தனை பெண்களுக்கும் ஒரு சபாஷ்!
அத்தனை பேரும் நற்றமிழில் வசனம் பேசி நடித்தது - தமிழ்நாட்டிலிருந்து உலகத்தின் மறுபகுத்திக்குப் பன்னிரண்டாயிரம் மைல் கடந்து வந்தும் -- குழறாமல் தாய்மொழியாம் தமிழில் பேசி நடித்தது, “உலகெங்கும் தமிழ் முழக்கம் கேட்கச் செய்வோம்!” என்ற அமரகவி பாரதியின் கூற்றை உண்மைப்படுத்தியது.
இன்னும் எத்தனையோ பேர் பின்னால் உழைத்து நாடகம் நன்கு இயங்கத்துணைபுரிந்தனர். இவர்கள் அனைவரையும் தமிழ்பேசி, பாடி, ஆடி முத்தமிழ் நிகழ்வு நடத்திய கூத்தடி கிரியேஷன்ஸ் இன்னும் பல நிகழ்வுகளை நடத்தும் என்று எதிர்பார்ப்போமாக!
-- நமது செய்தியாளர் ஒரு அரிசோனன்
Advertisement