உள்ளூர் செய்திகள்

கடகா சண்டிதேவி

ஒடிசா மாநிலம் கட்டக் நகரில் குடிகொண்டிருப்பவள் கடகா சண்டி தேவி. இப்பகுதியை ஆட்சி செய்த கஜபதி மன்னர்களின் குலதெய்வமான இந்த அம்மனை செவ்வாய், சனிக்கிழமையில் வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். அரக்கர்களை அழித்த இவளுக்கு 'மங்கள சண்டிகை' என்றும் பெயருண்டு.அரண்மனை ஆஸ்தான பண்டிதர் ஹன்சா பண்டா ஒருநாள் மகாநதிக்கரையில் அசதியால் துாங்கினார். யாரோ எழுப்புவது போல் இருக்க திடுக்கிட்டு விழித்தார். ஆனால் யாரும் இல்லை. அன்றிரவு கனவில் தோன்றிய சண்டிகா தேவி, 'நீ ஓய்வெடுத்த இடத்தில் நான் சிலை வடிவாக புதைந்து கிடக்கிறேன். எனக்கு கோயில் எழுப்பு'' எனத் தெரிவித்தாள். மன்னரின் உதவியுடன் கோயில் கட்டப்பட்டது. பண்டாவின் பரம்பரையினரே இன்றும் பூஜை செய்கின்றனர். கஜபதி மன்னரின் வாரிசுகள் நிர்வாகம் செய்கின்றனர். அந்நியப் படையெடுப்பால் கோயில் அழிக்கப்பட்ட போது அம்மனின் சிலை புரி ஜகந்நாதர் கோயிலில் பாதுகாக்கப்பட்டு பின்னர் கோயில் கட்டப்பட்டது. ஒடிசா பாணியில் அமைந்த இக்கோயிலில் நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் சண்டிதேவி காட்சி தருகிறாள். நவராத்திரியின் போது காளிபூஜை நடக்கும். அஸ்வின் (ஐப்பசி) மாத தேய்பிறை அஷ்டமி முதல் வளர்பிறை தசமி வரை கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கும். எப்படி செல்வது : புவனேஸ்வரில் இருந்து கட்டாக் 45 கி.மீ.,விசேஷ நாள்: நவராத்திரி, காளிபூஜை.நேரம்: காலை 6:00 - 12:00 மணி;மதியம் 2:00 - 6:00 மணிதொடர்புக்கு: 0672 - 414 500அருகிலுள்ள கோயில் : புவனேஸ்வரர் லிங்கராஜ் 30 கி.மீ.,(மகிழ்ச்சி நிலைக்க...)நேரம்: காலை 6:00 - இரவு 9:00 மணி