இரக்கமின்றி ஆராய்ந்து பார்!
<P>மனிதன் வலிமையை விரும்புகிறான். ஆனால் அவன் பலவீனத்திற்கு ஆட்படுகின்றான். மனிதன் சுகத்தை விரும்புகிறான். ஆனால், துன்பம் துயரங்களில் சிக்கி அல்லல்படுகின்றான். பிறர் நலம் பேணுதல், கடமை, இல்லறம், தேசபக்தி, உயிர்களிடத்தில் அன்பு ஆகிய இக்குணங்கள் நம் உயிரோடு கலக்க வேண்டும். உன்னை நீயே இரக்கமின்றி ஆய்ந்து பார்; அப்போது நீ பிறரிடம் பரிவுடனும், இரக்கத்துடனே நடந்து கொள்வாய். உன் கண்களைத் திறப்பாயாக. உண்மையில் உலகம் எத்தகையது என்பதைக் காண். பயனற்ற இன்பக் கற்பனைகளை விட்டொழி. அருகிலுள்ளது, தொலைவிலுள்ளது என்னும் வேறுபாடு இறைவனின் பார்வையில் இல்லை. தற்காலம், கடந்த காலம், எதிர்காலம் என்பதும் இல்லை. இவையெல்லாம் உலக ஓவியத்தைக் காண்பதற்கு வசதியாக நாம் ஏற்படுத்திக் கொண்டவையே. ஒரு எறும்பின் உயிரைக் காப்பாற்றுவது என்பது, ஒரு பேரரசை நிறுவுவதை விடச் சிறந்த செயல். தெய்வீகத் திருநிலையே மனித இனத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட இலக்காகும். அந்த நல்ல நிலையை வாழ்வில் பெறுவதற்காகவே நமக்கு இந்தப் பிறவியைக் கொடுத்துள்ளார்.</P>