ஒன்னுமே புரியலையே...
வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தார் முல்லா. அப்போது அங்கு வந்த அண்டை வீட்டுக்காரர், ''உங்களின் கழுதையை கடனாக கொடுங்கள். மூன்றே நாளில் திருப்பித் தருகிறேன்'' என்றார். முன்பு ஒருமுறை இதைப் போல வாங்கிச் சென்றார். ஆனால் குறிப்பிட்ட நாளில் கழுதையை ஒப்படைக்கவில்லை. அதற்கு சரியாக உணவும் தரவில்லை. அதற்கு தண்டனையாக, '' இப்போது தான் என் நண்பர் வந்து கழுதையை கூட்டிச் சென்றார்'' என இழுத்தார். அந்நேரம் பார்த்து வீட்டுக் கொல்லையில் நின்றிருந்த கழுதை கனைத்தது. இதைக் கேட்ட நண்பர், ''என்ன முல்லா... பொய் சொல்றியே...'' எனக் கோபப்பட்டார். ''என்னை நீ நம்ப மாட்டாய். ஆனால் கழுதையை மட்டும் நம்புவாயா... என் மீது நம்பிக்கை இல்லாத உனக்கு தரக் கூடாது என்பதால் தான் அப்படி சொன்னேன்'' எனக் கத்தினார். ''நீ சொல்வது ஒன்றும் புரியவில்லை'' என அங்கிருந்து வெளியேறினார். கொடுத்த வாக்கை காப்பாற்றாவிட்டால் அவர்களை விட்டு விலகுவது தான் நல்லது.