உள்ளூர் செய்திகள்

பணம் சேர்ந்த வழி

ஸமூது சமுதாயத்தை திருத்த வந்தவர் நபி ஹஜ்ரத் ஸாலிஹ். அவரிடம் ஒருமுறை அந்த சமுதாயத்தின் தலைவர், ''அதிசயத்தை நீங்கள் நிகழ்த்துங்கள். அப்போது தான் உங்களை நபியாக ஏற்போம். இங்குள்ள மலையில் இருந்து இளம் ஒட்டகம் ஒன்றை வரவழைத்து குட்டி ஈனச் செய்யுங்கள்'' என்றார். அதன்படி ஸாலிஹ் நபியும் ஒட்டகத்தை வரவழைக்க அது குட்டியை ஈன்றது. பின்னர் தாயும், குட்டியும் அருகில் இருந்த காட்டில் மேய்ந்து விட்டு திரும்பின. பிறகு நபி, ''ஒட்டகத்தை தொந்தரவு செய்யாதீர். சுதந்திரமாக இருக்க விடுங்கள்'' என வேண்டுகோள் விடுத்தார். அந்த ஒட்டகமோ அதிசய பிராணியாக இருந்தது. மக்கள் குடிக்கும் கிணற்று நீரை ஒரே மூச்சில் காலி செய்தது. கிணறு வற்றியது. இதற்காக ஒரு யோசனையை நபி சொன்னார். ''ஒருநாள் நீங்களும், மறுநாள் ஒட்டகமும் கிணற்று நீரை பயன்படுத்துங்கள்'' என்றார். இதன்பின் பிரச்னை தீர்ந்தது. ஒட்டகம் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், அந்தளவுக்கு அது பாலைக் கொடுத்தது. அதன் மூலம் மோர், வெண்ணெய், நெய் தயாரித்து விற்றனர். இதனால் பணம் சேரவே ஸமூது சமுதாயத்தினர் பணக்காரர்களாக மாறினர்.