சகோதரிகளுக்கு உதவுங்கள்
UPDATED : ஜூலை 30, 2010 | ADDED : ஜூலை 30, 2010
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரலி)அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:''எந்த மனிதன் ஓர் அநாதையைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு உணவும் பானமும் அளித்தானோ, அந்த மனிதனுக்குத் திண்ணமாக அல்லாஹ் சுவனத்தை (சொர்க்கம்) விதித்துவிட்டான். ஆனால், அவன் மன்னிக்க முடியாத பாவம் எதையும் செய்திருக்கக்கூடாது. எந்த மனிதன் மூன்று புதல்விகள் அல்லது மூன்று சகோதரிகளைப் பராமரித்து வளர்த்து அவர்களுக்கு கல்வியும் ஒழுக்கப்பயிற்சியும் அளித்து, அவர்களைத் தன்னிறைவு உடையவர்களாய் அல்லாஹ் ஆக்கிவிடும் வரை அவர்களுடன் இரக்கத்தோடு நடந்து கொண்டானோ, அத்தகையவனுக்கு அல்லாஹ் சுவனத்தை விதித்துவிட்டான்!''.இதனைக் கேட்ட ஒருவர், ''இரண்டே பெண்மக்கள் இருந்தாலுமா?'' என்று வினவினார். ''ஆம்! இரண்டு பெண்மக்களைப் பராமரித்தாலும் இந்த நற்கூலி உண்டு'' என்று அண்ணலார் பதிலளித்தார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) கூறுகின்றார்கள்: ''ஒரே ஒரு பெண்ணைப் பராமரித்து ஆளாக்கினாலும் இந்த நற்கூலி கிடைக்குமா?'' என்று மக்கள் வினவியிருந்தால் அப்போதும் அண்ணலார் இதே நற்செய்தியைத் தான் அளித்திருப்பார்கள்''.மேலும் அண்ணலார் கூறினார்கள்: ''எவனிடமிருந்து அல்லாஹ் அவனுடைய சிறந்த இரு பொருள்களை எடுத்துக் கொள்கிறானோ, அவனுக்கு சுவனம் விதிக்கப்பட்டுவிட்டது''. ''அல்லாஹ்வின் தூதரே! அந்த இரு சிறந்த பொருள்கள் எவை?'' என்று வினவப்பட்டது.அண்ணலார், ''அவனுடைய இரு கண்கள் தாம் அவை'' என்று பதிலளித்தார்கள்.(மிஷ்காத்) விளக்கம்: இந்த நபிமொழியில் ஒரு முக்கிய கருத்து விளக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு மனிதனுக்கு பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளன என்றால், அதற்காக அவன் அவர்களுடன் மோசமாக நடந்து கொள்ளக் கூடாது. அவர்களை நன்கு பராமரிக்க வேண்டும். அவர்களுக்கு மார்க்கக் கல்வியும், பயிற்சியும் அளித்திட வேண்டும். அவர்களுக்குத் திருமணம் ஆகும்வரை அவர்களுடன் இரக்கத்துடனும், அனுதாபத்துடனும், மென்மையாகவும், கருணையோடும் நடந்து கொள்ளவேண்டும். இவ்வாறு நடந்து கொள்வோருக்கு சுவனம் உண்டு என அண்ணலார் (ஸல்) அவர்கள் நற்செய்தி அறிவிக்கிறார்கள்.இவ்வாறே இளம் சகோதரிகளைக் கொண்ட ஒரு சகோதரன், அந்த சகோதரிகளை தலைவலியாகக் கருதக்கூடாது. மாறாக, அவர்களுக்கு ஆகும் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கல்வி, மார்க்கப்பற்று ஆகிய ஆபரணங்களால் அவர்களை அலங்கரித்திடவேண்டும். அவர்களுக்குத் திருமணமாகும்வரை அவர்களுடன் மிகுந்த கருணையோடு நடந்து கொள்ள வேண்டும்.(அண்ணல் நபிகளார் வாழ்வினிலே... நூலில் இருந்து)