உள்ளூர் செய்திகள்

முடி வளர்ச்சிக்கு புது வழிமுறை

நவீன யுகத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடு, மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தலைமுடி சார்ந்த பிரச்னைகள் வருகின்றன. முடி உதிர்வைத் தடுக்கவும், வளர்ச்சியை மேம்படுத்தவும் அம்மா செய்யும் செம்பருத்தி எண்ணெயில் துவங்கி, அமேசான் காட்டின் அரியவகை மூலிகை வரை பல மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.இந்த நிலையில் தான் ஜப்பானைச் சேர்ந்த யோகோஹாமா பல்கலை, லவங்கப்பட்டையில் இருக்கும் சின்னமிக் அமிலம், முடி வளர்ச்சிக்கு உதவும் எனக் கண்டுபிடித்துள்ளது. தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் லவங்கம் ஏற்கனவே பயன்பட்டு வருகிறது. ஆக்ஸிடாக்சின் எனும் ஒரு ஹார்மோன் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஆனால், இதைத் தோல் வழியாக முடி வேர்களுக்குள் செலுத்துவது சுலபமல்ல. ஆனால், சின்னமிக் அமிலத்தால் முடிவேர்களுக்குள் ஊடுருவ முடியும். எனவே, இந்த அமிலத்தை 10 நாட்கள் முடி வேர்கள் மீது செலுத்திச் சோதித்துப் பார்த்தார்கள். 8 நாட்களிலேயே முடி வளரத் துவங்கியது. இந்த அமிலத்தை எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும், இதனால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்ற விஷயங்கள் எல்லாம் இன்னும் ஆய்வு நிலையில் தான் உள்ளன. ஆய்வு முடிந்ததும் சின்னமிக் அமிலம் கலந்த முடி வளர்ச்சிக்கான அழகு சாதனப் பொருட்கள் பயன்பாட்டிற்கு வரும். அவ்வளவு துாரம் பொறுமை இல்லாதவர்கள் சின்னமிக் அமிலம் நிறைந்துள்ள முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, காலிப்ளவர், கோகோ, திராட்சை உள்ளிட்ட உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !