உள்ளூர் செய்திகள்

ரப்பர் – கரியின் ரகசிய கூட்டணி!

க டந்த 100 ஆண்டுகளாக, சுத்திகரிக்கப்பட்ட கரியை ரப்பருடன் சேர்ப்பது அதன் வலிமையை பல 100 மடங்கு அதிகரிக்கும் என்பதை உற்பத்தியாளர்கள் அறிந்திருந்தனர். ஆனால், அதன் பின்னுள்ள அறிவியல் ஒரு மர்மமாகவே நீடித்தது. தற்போது தெற்கு புளோரிடா பல்கலை ஆய்வாளர்கள் இந்தப் புதிரை விடுவித்துள்ளனர். மேம்பட்ட கணினி ஒத்திகைகள் மூலம், அழுத்தத்தின் கீழ் ரப்பரும் கரித் துகள்களும் வெவ்வேறு விதமாக உருமாறுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த உருமாற்ற வேறுபாடே ரப்பரின் மீதான அழுத்தத்தைச் சீராகப் பகிர்ந்து, கிழிசல்களைத் தடுத்து அதன் உறுதியை அதிகரிக்கிறது. இக்கண்டுபிடிப்பால், ‘ஊகத்தின் அடிப்படையிலான பரிசோதனை முறையிலிருந்து’ விடுபட்டு, இனி தெளிவான கோட்பாடுகள் வாயிலாக ரப்பர் தயாரிக்கப்படலாம். வணிக ரீதியாக இது பெரும் புரட்சியை ஏற்படுத்தும். டயர் தயாரிப்பாளர்கள் தரம் அறிய மேற்கொள்ளும் விலையுயர்ந்த சோதனைகள் இனி குறையும். இந்தத் தெளிவான முறையால், வீணாகும் மூலப்பொருட்களைக் குறைப்பதோடு, எரிபொருளைச் சேமிக்கும் மேம்பட்ட டயர்களை விரைவாக வடிவமைக்க உதவும். ஒரு பொருளின் உட்புற இயக்கத்தை அரைகுறையாகப் புரிந்துகொண்டே, அதைக் கொண்டு நாம் உலகளாவிய போக்குவரத்து அமைப்பைக் கட்டமைத்துள்ளோம். பல நேரங்களில் புதியவற்றைக் கண்டுபிடிப்பதை விட, புழக்கத்தில் உள்ள பழையவற்றை முழுமையாகப் புரிந்துகொள்வதில்தான் அறிவியல் உண்மையான பாய்ச்சலை நிகழ்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !