செல் இயக்கவியலில் ஒரு மாற்றம்
நமது உடலில் ஒரு செல் இரண்டாகப் பிரியும் நிகழ்வை 'மைட்டாசிஸ்' (Mitosis) என்போம். இப்படிச் செல்கள் பிரியும்போது, குரோமோசோம்கள் அனைத்தும் செல்லின் மையப்பகுதிக்கு வர வேண்டும். இதுவரை நமது பாடப்புத்தகங்கள் என்ன சொல்கின்றன தெரியுமா... 'சி.இ.என்.பி.-இ' (CENP‑E) என்ற ஒரு வகைப்புரதம் உள்ளது. இது ஒரு 'மூலக்கூறு மோட்டார்' போலச் செயல்பட்டு, துாரத்தில் இருக்கும் குரோமோசோம்களைக் கயிற்றில் கட்டி இழுப்பது போல இழுத்து, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்கின்றன என்று கற்பிக்கப்பட்டு வந்தது. ஆனால், குரோவேஷியா நாட்டில் உள்ள 'ருடெர் போஸ்கோவிக் நிலையத்தின்' ஆய்வாளர்கள், அந்தப் பழைய கருத்தைத் தவறு என்று நிரூபித்துள்ளனர். இந்தப் புரதம் குரோமோசோம்களை வெகுதுாரம் இழுத்துச் செல்லும் வேலையைச் செய்வதில்லை. மாறாக, செல்லின் துருவங்களில் இருந்து வரும் 'கதிரிழை நுண்குழாய்களுடன்' (Spindle Microtubules) குரோமோசோம்கள் இணையும் வரை, அவற்றை நகர விடாமல் ஓர் இடத்தில் நிலைப்படுத்துகின்றன. அதாவது, ஒரு குரோமோசோம் கதிரிழையைப் பற்றிக்கொள்ளும் வரை, இந்தப் புரதம் அதை அசையாமல் பிடித்துக் கொள்கிறது. இந்தப் புரதம் குரோமோசோம்களைச் சரியாக நிலைப்படுத்தத் தவறும்போது, குரோமோசோம் களால் உறுதியான இணைப்புகளை ஏற்படுத்த முடியவில்லை என்பதையும், அதனால் செல் பிரிவினை சரியாக நிகழாமல் போவதையும் ஆய்வாளர்கள் கவனித்தனர். இது, பாடப்புத்தகக் கருத்தை முற்றிலும் மாற்றியமைக்கிறது. இந்தப் புரதம், செல் பிரிவினையின்போது, குரோமோசோம்களை இழுத்துச் செல்லும் 'டாக்ஸி' போலச் செயல்படுவதில்லை. மாறாக, பிரிவினைக்கு முன்பே, இணைப்பு நடப்பதற்காக அதை ஓர் இடத்தில் நிலை நிறுத்தும் 'நங்கூரம்' போலச் செயல்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் மிக முக்கியமானது. ஏனெனில், செல் பிரிதலின்போது குரோமோசோம் சரியாகப் பிரியாமல் போவதுதான், பல வகையான புற்றுநோய்கள் மற்றும் மரபணுக் கோளாறுகளுக்கு அடிப்படையாக உள்ளது. எனவே, CENP--E புரதத்தின் உண்மையான பங்கை நாம் புரிந்து கொண்டால், இத்தகைய நோய்களுக்குப் புதிய சிகிச்சைகளை உருவாக்க முடியும்.